2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.கே. அஷோக்பரன் LLB (Hons)

 

 

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 55)

தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசியக் கட்சி 140 ஆசனங்களைக் கைப்பற்றி 5ஃ6 பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் இரண்டாவது மிகப்பெருங்கட்சியாக உருவானது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டிருந்த 147 பேரில் வெறும் சிறிமாவோ பண்டாரநாயக்க, அநுர பண்டாரநாயக்க உட்பட எட்டுப் பேர் மட்டுமே வெற்றியீட்டியிருந்தனர். சிறிமாவோ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களில் மைத்திரிபால சேனநாயக்கவைத் தவிர்ந்த ஏனைய அனைவரும் 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்விகண்டிருந்தனர். சிறிமாவோ ஆட்சியில் பலம் வாய்ந்த அமைச்சர்களாக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, ஹெக்டர் கொப்பேகடுவ, ரீ.பீ.இலங்கரத்ன, பதியுதீன் முஹம்மட் போன்றவர்களும் தோல்வி கண்டிருந்தனர். சிறிமாவின் ஆட்சியில் ஒரே ஒரு தமிழ் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த செல்லையா குமாரசூரியரும் தோல்வி கண்டிருந்தார். இதைவிடவும் 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்ட லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மஹாஜன எக்ஸத் பெரமுண (மக்கள் ஐக்கிய முன்னணி) ஆகியவற்றைச் சேர்ந்த 'தோழர்கள்' எவருமே வெற்றிபெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் சௌமியமூர்த்தி தொண்டமான் வெற்றிபெற்றிருந்தார்.

புதிய பிரதமர் ஜே.ஆர்

1977 ஜுலை 22 இல், காபந்து பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தனது பதவி விலகலை ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவவிடம் சமர்ப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பொதுவில் தேர்தல் தோல்வி நிச்சயமானதும், காபந்து பிரதமர் எதுவித தாமதமுமின்றி புதிய பிரதமருக்கு வழிவிட்டு பதவி விலகுவதுதான் மரபு. ஆயினும் ஜுலை 22 மாலையில் பிரதமர் சிறிமாவோ தன்னுடைய இராஜினாமைவை ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவவிடம் சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து 1977 ஜுலை 23 இல், ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்த்தன இலங்கையின் பிரதம மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.

ஜே.ஆரின் அமைச்சரவை

1977 ஜுலை 23 லேயே, ஜே.ஆரின் அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சர் ஆகிய பொறுப்புக்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். நிதியமைச்சராக றொனி டி மெல் பதவியேற்றுக் கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே தமிழரான கணபதிப்பிள்ளை வில்லியம் தேவநாயகம் (இவர் கிழக்கு மாகாணத்தின் கல்குடா தொகுதியில் வெற்றி பெற்றவர்) நீதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ரணசிங்ஹ பிரேமதாஸ உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சராகவும் தேசிய அரசுப் பேரவையின் தலைவராகவும் பதவியேற்றுக் கொண்டார். இதுவரை காலமும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக பிரதமரே இருந்து வந்தார். முதன்முறையாக பிரதமரல்லாது தனியான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஏ.ஸி.எஸ்.ஹமீட்

பதவியேற்றுக் கொண்டார். பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மொன்டகியு ஜயவிக்ரமவும் வர்த்த அமைச்சராக லலித் அதுலத்முதலியும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சராக நிஸ்ஸங்க

விஜேரத்னவும் பதவியேற்றுக் கொண்டனர். கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அமைச்சராக சிறில் மத்யூவும் நீர்ப்பாசனம், சக்தி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக காமினி திசாநாயக்கவும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராக டீ.பீ.விஜயதுங்கவும் போக்குவரத்து அமைச்சராக எம்.எச்.முஹம்மத்தும்

பெருந்தோட்ட கைத்தொழில்

அமைச்சராக எம்.டீ.எச்.ஜெயவர்த்தனவும் பதவியேற்றுக் கொண்டனர். விமலா கன்னங்கர கப்பற்போக்குவரத்து, விமானப்போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராகவும் விளங்கினார். வின்சன்ட் பெரேரா நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆடைக் கைத்தொழில் அமைச்சராக விஜயபால மென்டிஸூம், உணவு மற்றும் கூட்டுறவு அமைச்சராக சிரிசேன பண்டார ஹேரத்தும், விவசாய மற்றும் காணி அமைச்சராக லயனல் சேனநாயக்கவும் தொழில் அமைச்சராக கப்டன் சீ.பி.ஜே.செனவிரத்னவும் கலாசார அலுவல்கள் அமைச்சராக ஈ.எல்.பீ.ஹூருல்லவும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக ஷெல்டன் ஜயசிங்ஹவும் பதவியேற்றுக் கொண்டனர்.

முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜுலை 27 அன்று நடைபெற்றதுடன் மறுநாள் 28 ஆம் திகதி அன்று புதிதாக பதவியேற்கும் பிரதமர்கள் தலதா மாளிகை செல்லும் மரபொன்றின் தொடர்ச்சியாக, பிரதமர் ஜே.ஆர் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார். தேரவாத பௌத்தத்தின் முக்கிய சின்னங்களுள் ஒன்றான தந்ததாது பாதுகாக்கப்படும் தலதா மாளிகைக்கு செல்வதானது, அடையாள ரீதியாக, தேரவாத பௌத்தம் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்தும் அம்சமாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்முறைக் கொண்டாட்டம்

ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் வெற்றியை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் வன்முறைகொண்டு கொண்டாடத் தொடங்கினார்கள். கொழும்பிலும் தென்னிலங்கையின் வேறு சில பாகங்களிலும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. ஆங்காங்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். ஏழு ஆண்டுகளின் பின் வரலாறு காணாத பெரும்பான்மை பலத்தைக் கைப்பற்றிய வெறியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சியின் காடையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். கண்டி, கேகாலை, கம்பஹா மற்றும் குருநாகலை மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் ஐக்கிய தேசிய கட்சி காடையர்களின் கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றன. மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் பலரும் தமது வீடுகளிலிருந்து வெளியேறி வேறு புகலிடங்களைத் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மாற்றுக்கட்சிக் காரர்களின் வியாபார நிலையங்கள்; தீக்கிரையாக்கப்பட்டன. சிறிமாவின் 'அவசரகால' வல்லாட்சியை மாற்றுவேன் என்று உறுதியளித்து மாபெரும் வெற்றியைத் தக்கவைத்த ஜே.ஆரின் ஆட்சியின் ஆரம்பமே வன்முறைத் தீயுடன் தொடங்கியது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரையும் இடதுசாரிக் கட்சியினரையும் நோக்கி நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல்கள், தமிழர்களை நோக்கித் திரும்ப ஒரு மாத காலம் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம்

1971 இல் ஏறத்தாழ 68 சதவீத சிங்கள - பௌத்தர்களைக் கொண்டிருந்த இலங்கையில், இரு பெரும் 'தேசிய' கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளை தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், வடக்கு - கிழக்கை மையமாகக்கொண்ட, இலங்கை சனத்தொகையில் ஏறத்தாழ 11 சதவீதத்திற்கும் குறைவான இலங்கைத் தமிழர்களின் ஆதரவுபெற்ற ஒரு கட்சி இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாவது என்பது அரிதிலும் அரிதான நிகழ்வே‚ அத்தகையதொரு அரிய சந்தர்ப்பம் 1977 பொதுத் தேர்தலின் பின்னர் அமைந்தது. 140 ஆசனங்களைப் பெற்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்த போது, இரண்டாவது பெரிய கட்சியாக 18 ஆசனங்களைப் பெற்ற தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியே காணப்பட்டது. 1977 ஜுலை 30 ஆம் திகதி தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு வவுனியாவில் கூடியது. சௌமியமூர்த்தி தொண்டமான் மலையகத்தில் தனியாக தனது சேவல் சின்னத்தில் களமிறங்கியிருந்தாலும், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் மூன்று ஸ்தாபக தலைவர்களில் ஒருவர். அம்மூவரில் அன்று உயிரோடிருந்தவர் அவர் மட்டுமே. மேலும், தனித்து போட்டியிட்டிருந்தாலும், 'வடக்கிலே உதயசூரியன் எழும்போது, மலையகத்தில் சேவல் கூவும்' என்ற பாணியிலான ஒன்றுக்கொன்று ஆதரவான பிரசாரத்தை இருதரப்பும் செய்திருந்தது. ஆகவே தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் குறித்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முன்மொழிந்தார். ஆனால் இதனை தொண்டமான் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் இலங்கை தொழிலாளர்

காங்கிரஸின் பிரதிநிதியாகவே

நாடாளுமன்றத்தில் செயற்பட விரும்புவதாக தொண்டமான் குறிப்பிட்டார். தமிழ் ஐக்கிய முன்னணி, 'தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக' மாறி 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' முன்வைத்ததிலிருந்து, தொண்டமான் அதிலிருந்து விலகியே செயற்பட்டார். வடக்கு-கிழக்கு தமிழர்களின் பிரச்சினையும் அதற்கான தீர்வுகளும் வேறுƒ மலையக மக்களின் பிரச்சினைகளும் அதற்கு அவர்கள் வேண்டும் தீர்வுகளும் வேறுƒ தனிநாடு அல்லது தமிழீழம் என்பது மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது என்ற தனது நிலைப்பாட்டில் சௌமியமூர்த்தி தொண்டமான் உறுதியாக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியல்ல; அவர் வேண்டியது, மாறாக அமைச்சர் பதவியே என்பது ஏறத்தாழ ஒரு வருட காலத்தில் தெளிவானது.

சௌமியமூர்த்தி தொண்டமான், அமிர்தலிங்கத்தின் முன்மொழிவை நிராகரித்ததைத் தொடர்ந்து, நல்லூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் (தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்) தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முக்கிய தலைவருமான எம்.சிவசிதம்பரம் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை முன்மொழிந்தார். இதனை பட்டிருப்பு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பீ.கணேஷலிங்கம் வழிமொழிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுவினால் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். எம்.சிவசிதம்பரம் நாடாளுமன்றக் குழுவின் உப-தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' படி 'தனிநாடு பெறுவோம்' என்று வாக்குக்கேட்டவர்கள் இலங்கையின் நாடாளுமன்றத்திலே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கப்போகிறார்கள் என்பது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்பால் ஈர்ப்புக் கொண்டிருந்த இளைஞர்களிடம் பெருமளவு சினத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியது. இளைஞர்கள் பலரும் இதற்கு பகிரங்கமாகவே தமது எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். கூட்டணித் தலைவர்களுக்கு இது பெரும் சிக்கலை உருவாக்கியது. உடனடியாக பகிரங்க அறிக்கையை வெளியிட்ட அவர்கள், நாடாளுமன்றத்தை எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவினைத் திரட்டும் களமாக நாம் பயன்படுத்த எண்ணுகிறோம் என்று கூறினார்கள்.

1977 ஓகஸ்ட் 4, புதிய நாடாளுமன்றம் (தேசிய அரசுப் பேரவை) கூடிய போது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் வீற்றிருந்தார். ஒரு தமிழர் அவ்வாசனத்தை அலங்கரிக்கும் முதல் தடவை அதுவாகும். ஆனால் அதனைக் கொண்டாடும் மனநிலையில் தமிழ் மக்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இருக்கவில்லை. நாடாளுமன்றத்தின் சபாநாயகராக அவைத் தலைவர் ரணசிங்ஹ பிரேமதாஸவினால் கோட்டே தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்ததிஸ்ஸ டீ அல்விஸ் முன்மொழியப்பட அதனை வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற மரபுகளின்படி எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் வழிமொழிந்தார். சபாநாயகரை வரவேற்று உரையாற்றும் போது, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது தேசிய அரசுப் பேரவையைக் கொண்டு நடத்துவது தொடர்பில் சபாநாயகரோடு இணங்கிச்செயற்படுமென்றும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமது நாடாளுமன்ற செயற்பாடுகளை தமிழ் மொழியிலேயே நடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

ஆளுங்கட்சியாக ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியாக அமிர்தலிங்கம் தலைமையில் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் ஒரு சிங்கள-தமிழ் நேரெதிர் நிலை உருவானமையைப் போன்றதொரு எண்ணத்தைத் தோற்றுவித்தது. இதன் விளைவாக ஒரு மிகப்பெரும் இனக்கலவரத்தின் கோரத்தை தமிழ் மக்கள் சந்திக்க வேண்டி வந்தது. பச்சைக் கட்சியின் ஆட்சி, தமிழர்களுக்கு சிவப்பாக விடியத் தொடங்கியது.

(அடுத்த வாரமும் தொடரும்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .