2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

26 வருடங்களின் பின்னர் ஆனையிறவில் உப்பு உற்பத்தி

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் 26 வருடங்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை (29) உப்பு அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக வருமானத்தை தரக்கூடியதும் அதிக உப்பினை உற்பத்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ள ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள், கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக செயலிழந்தது. தொழிற்சாலையின் உப்பு வயல்களும் அழிவடைந்தன.

இதன் பின்னர் மேற்படி உப்பளம் மீண்டும் 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஒரு பகுதியில் மாத்திரம் குறிப்பிட்டளவு உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து யுத்ததின் பின்னரான மீள்குடியமர்வைத் தொடர்ந்து ஆனையிறவு உப்பளத்தின் உப்பு வயல்;களிலும் ஏனைய பகுதிகளிலும் காணப்பட்ட வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு, கண்டாவளைப் பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து, உப்பளத்தின் கட்டுமானப்பணிகள் மாந்தை உப்பு உற்பத்தி நிறுவனத்தினூடாக முன்னெடுக்கப்பட்டு தற்போது இதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இதன் முதலாவது உப்பு அறுவடை நிகழ்வு, இன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன், கண்டாவளைப் பிரதேச செயலர் ரீ.முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு அறுவடையினை ஆரம்பி வைத்துள்ளனர்.

இதில் இந்தவருடம் 800 மெற்;றிக்தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டதுடன் பலருக்கான வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இன்றைய நிகழ்வில் 08 பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

1937ஆம் ஆண்டு அமைக்கப்பட்;ட ஆனையிறவு உப்பளத்தின் உப்பு உற்பத்தியானது 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 1990ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் விடுதலைப் புலிகளால் குறிப்பிடத்தக்களவு உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அதுவும் 2008ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 125 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 447 ஏக்கரில் உப்பள வயல்கள் மற்றும் கட்டடங்கள் அமைக்கப்பட்டு அந்த வேலைகள் பூர்த்தியடைந்தன. ஆண்டுக்கு 1 இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்வது என எதிர்பார்த்து, மேற்கொள்ளப்பட்ட இந்த அபிவிருத்திப் பணியில் தற்போது, 8 ஆயிரம் மெற்றிக்தொன் மாத்திரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

உப்பளத்தில் முழுமையான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இன்னமும் 80 மில்லியன் ரூபாய் நிதியானது தேவையாகவுள்ளது. அந்த நிதி கிடைக்கப்பெற்றால், முழுமையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு உப்பு உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்கு மேற்கொள்ள முடியும். இதன்மூலம் வடக்கிலுள்ள 3000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X