2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சமாதானம் மலர்ந்தது: 52 ஆண்டுகாலப் போர் முடிந்தது

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 29 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த போர், நேற்று முதல் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. கொலம்பிய நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் (இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 10 மணி), போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

முழுமையான போர்நிறுத்தம், ஜனாதிபதி ஜுவான் மனுவல் சான்டோஸாலும் கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளின் (FARC) தலைவர் திமோலியன் ஜிமெனேஸினாலும் இணைந்து அறிவிக்கப்பட்டது.

"ஓகஸ்ட் 29ஆம் திகதி, கொலம்பிய வரலாற்றின் புதிய கட்டமொன்று உருவாகியது. ஆயுதங்களை நாங்கள் மௌனிக்கிறோம். FARC-உடனான போர் முடிந்துவிட்டது" என்று, ஜனாதிபதி சான்டோஸ் அறிவித்தார்.

FARC அமைப்பினால் விடுக்கப்பட்ட செய்தியில், "இந்தத் தருணத்திலிருந்து, இருதரப்பானதும் உறுதியானதுமான போர் நிறுத்தம் ஆரம்பிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை, கியூபாவிலிருந்து விடுத்த FARC-இன் தலைவர் ஜிமெனெஸ், ஆயுதங்களைக் கைவிடுமாறும் கொலம்பிய அரசுக்கெதிரான அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்துமாறும், தனது அனைத்துத் தளபதிகளுக்கும் ஆயுதப்பிரிவுகளுக்கும் ஒவ்வொரு போராளிக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சான்டோஸ், தனது பக்கப் போர்நிறுத்தத்தை, கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே, நேற்றுமுதல் போராளிகளும் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், 52 ஆண்டுகால மோதலில், இருதரப்பும் இணைந்து போர்நிறுத்தத்தில் ஈடுபட்டமை, இதுவே முதற்தடவையாகும்.

கொலம்பியப் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காக, கொலம்பிய அரசாங்கமும் துணை இராணுவக் குழுக்களும் இடதுசாரிக் குழுவான கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளும் மோதி வந்தன. இந்த மோதல்கள் காரணமாக, சுமார் 260,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 45,000 பேரைக் காணவில்லை. அத்தோடு, 6.9 மில்லியன் மக்கள், தங்கள் இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, இந்தப் போர்நிறுத்தமானது, அமைதியை ஏற்படுத்துவதற்கான முக்கியமான படியெனக் கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .