2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனானது புத்தளம் பலஸ்தீன் அணி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 17 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர வரலாற்றில், முதற்தடவையாக மின்னொளியில் நடைபெற்ற கடற்கரை  புட்சால் கால்பந்தாட்டப் போட்டியில், புத்தளம் பலஸ்தீன் அணி வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளதோடு, இரண்டாம் இடத்தினை டெரர் அணி பெற்றுக்கொண்டுள்ளது.

பல்வேறு புதிய சட்ட திட்டங்களோடு கூடிய இந்த கடற்கரை புட்சால் கால்பந்தாட்டப் போட்டியானது, கடந்த வியாழக்கிழமை (15)  இரவு புத்தளம்-கொழும்பு வீதியில் அமைந்துள்ள கடற்கரை கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு  நிதி திரட்டும் நோக்கில், ஸாஹிராவின் அனைத்துப் பழைய மாணவர் சங்கங்களை இணைத்த அமைப்பான ஸஹீரியன்ஸ் யுனைடெட் அமைப்பு இந்தப் போட்டித் தொடரினை ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக புத்தளம் ஹைடைப், அமைதி தன்னார்வ தொண்டு நிறுவனம், சர்வதேச இளைஞர்கள் சம்மேளனம் (ஐ.வை.சி) ஆகிய அமைப்புக்கள் இப்போட்டிகளுக்கு வழிகாட்டி இருந்தன.

அணிக்கு ஐந்து வீரர்களைக் கொண்ட இந்தப் போட்டியானது, கோல்காப்பாளர் இல்லாத, ஓப் சைட் இல்லாத 10 நிமிடங்களைக் கொண்ட போட்டியாகும். இந்தபோட்டி தொடருக்கு க்ரெண்டேன், மொபிடல், இமாரா மென்பொருள் தீர்வகம் மற்றும் உப்பு உற்பத்தியாளர் நலன் புரிச்சங்கம் என்பன அனுசரணை வழங்கி இருந்தன.

புத்தளம் மெட்ரிக், மெரெக்ஸ், நியூ, டெரென்ட், எக்ஸ், பீ.எச்.டீ, க்ளீன் புத்தளம், பலஸ்தீன், நியூ ப்ரண்ட்ஸ், ஐ.வை.சி, செலேன்ச், பீ.எச்.டீ.எப்.சீ, ஹெட்ரிக் மற்றும் டெரர் ஆகிய 14 அணிகள் இந்தத்  தொடரில் பங்கேற்றன.

முதல் சுற்று புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று விலகல் அடிப்படையிலும் இந்த போட்டிகள் இடம்பெற்றன.

அதிகாலை 2 மணிக்கு நடைபெற்ற இறுதிப் போட்டியில், டெரெர் அணியும் பலஸ்தீன் அணியும் போட்டியிட்டதில் இரு  அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததால் தண்ட  உதைக்கு நடுவர் அழைப்பு விடுத்தார்.

தண்ட உதையானது கோல் காப்பாளர் இல்லாத குறுகிய மைதானத்தின் மத்தியிலிருந்து பந்தினை சிறிய கோல் கம்பத்துக்குள் செலுத்தப்படவேண்டியது நியதியாகும்.

இந்த சிரமமான முதல் மூன்று தண்ட உதைகளையும் இரு அணிகளும் தவற விட்டன. அடுத்து வழங்கப்பட்ட மேலதிக ஒரு தண்ட உதையினையும்  இரு அணிகளும் தவற விட்டு அடுத்து வழங்கப்பட்ட மேலுமொரு தண்ட உதையினை பலஸ்தீன் அணியினர் கோல் ஆக்கியதால் அவ்வணி வெற்றி பெற்று  சம்பியனாகியது.

கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற இந்த அனைத்து போட்டிகளுக்கும் நடுவர்களாக எம்.எஸ்.எம்.நௌபி, ஏ.ஏ.எம். கியாஸ் ஆகியோர் கடமையாற்றினர். மேலதிக நடுவராக என்.எம். நிஸ்ரின் கடமையாற்றினார். 

சம்பியனாகிய அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், இரண்டாம் இடத்தினை பெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் ரொக்கப்பணமாக 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டன. வெற்றிக்கிண்ணங்களை புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக் வழங்கி வைத்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .