2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது கிண்ணியா மத்திய கல்லூரி

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், சஹரீன் எம். இஸ்மத், ஏ.எம்.ஏ.பரீத், பதுர்தீன் சியானா

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான எட்டு ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரி அணி 2016 ஆம் ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி, இவ்வருட சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

நாட்டின் ஒன்பது மாகாணங்களில் இருந்தும் தெரிவு செய்யப்ட்ட 27 பாடசாலை அணிகள் பங்குபற்றிய தேசிய மட்ட சம்பியன் கிண்ணத்துக்கான போட்டி , கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (18), திங்கட்கிழமையும் (19) கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்திலும் கிண்ணியா எழிலரங்கு மைதானத்திலும் நடைபெற்றது.

அரையிறுதி ஆட்டத்தில் பாணந்துறை ஸ்ரீ சமன்கல கல்லூரி அணியை எதிர்த்தாடிய கிண்ணியா மத்திய கல்லூரி அணி, ஆறு விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.

மறுபக்க அரையிறுதி ஆட்டத்தில், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தைச் சேர்ந்த ஏறாவூா் அலிகார்  மகா வித்தியாலய அணியும் யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணியும் மோதின. இதில் 25 ஓட்டங்களால் ஏறாவூா் அலிகார்  மகா வித்தியாலய அணி வெற்றிபெற்று இறுதியாட்டத்துக்கு நுழைந்தது.

இறுதியாட்டத்தில், ஏறாவூா் அலிகார்  மகா வித்தியாலய அணியும் கிண்ணியா மத்திய கல்லூரி அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் துடுப்பெடுத்தாடிய கிண்ணியா மத்திய கல்லூரி அணி, எட்டு விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஏறாவூா் அலிகார்  மகா வித்தியாலய அணி, ஐந்து விக்கெட் இழப்புக்கு 46 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியைத் தழுவிக் கொண்டது. இதன் மூலம் ஒரு ஓட்டத்தால் கிண்ணியா மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று 2016ஆம் ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

இறுதியாட்டத்தின் சிறப்பாட்டக்காரராக, கிண்ணியா மத்திய கல்லூரி அணியைச் சோ்ந்த எம்.இஸட்.முகம்மது நவ்வீத் தெரிவு செய்யப்பட்டார்.

இச்சுற்றுப் போட்டியின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், பாணந்துறை ஸ்ரீ சமன்கல கல்லூரி அணியும்  யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணியும் மோதின. இதில், பாணந்துறை ஸ்ரீ சமன்கல கல்லூரி அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .