2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மக்கள் தேடிவிடுவர்

Thipaan   / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது தம்பி மரைக்கார்

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் இப்போதிருக்கும் ஜனரஞ்சகத் தன்மையுடன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருக்கவில்லை. சிங்களப் பெருந்தேசிய அரசியல் கட்சிகளுக்கு சேவகம் செய்கின்ற ஒரு சமூகமாகவே முப்பது வருடங்களுக்கு முன்னர்வரை, முஸ்லிம்கள் இருந்தனர். தமிழர் சமூகம் அரசியல் விழிப்புணர்வு பெற்று, நெடுங்காலத்தின் பின்னர்தான் - முஸ்லிம்கள் தமக்கென்று ஒரு தனியான அரசியல் கட்சி பற்றி யோசிக்கலாயினர். அப்படியொரு யோசனையின் பலனாகத்தான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற ஜனரஞ்சக அரசியல் கட்சி முஸ்லிம்களுக்குக் கிடைத்தது.  

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காகவும், அவர்களின் சமூகப் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக கையாள்வதற்காவும் எனக்கூறி ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சி, இப்போது ஏராளமான பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிக்கத் தொடங்கியுள்ளது. மட்டுமன்றி, அந்தக் கட்சியானது ஒரு  பிளவினை எதிர்கொள்ளும் அபாயத்தின் விளிம்பில் உள்ளதையும் அவதானிக்க முடிகிறது. இந் நிலைமையானது, அந்தக் கட்சியின் ஆதரவாளர்களிடையே  மனச்சோர்வினை ஏற்படுத்தியுள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றி வாசகர்கள் அறிவர். அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன், செயலாளர் ஹசன்அலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் முரண்படத் தொடங்கியமையினை அடுத்து - பிரச்சினை பூதாகரமானது. 

இவ்வாறானதொரு நிலையில்,  

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பக்கங்களில் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக ஏ.சி.ஏ. மொஹமட் மன்சூர் என்கிற பெயரை குறிப்பிட்டிருந்தன.  

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினையின் விளைவினையும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பக்கத்தில் காண முடிகின்றது.  

ஆணைக்குழுவின் இணையத்தளப் பக்கத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக எவரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, “செயலாளர் பதவி தொடர்பில் நீதிமன்ற செயற்பாடு எடுக்கப்பட்டுள்ளது” எனப் பதிவிடப்பட்டுள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் என்பவர் பதவி வகித்தார். இந் நிலையில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும் செயலாளர் ஹமீட்டுக்கும் இடையில் முரண்பாடு உருவானது. இதனையடுத்து, அந்தக் கட்சியின் செயலாளராக எஸ். சுபைர்தீன் என்பரை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவு செய்துள்ளதாக அறிவித்தது. ஆனால், இந்தத் தெரிவு சட்டபூர்வமானதல்ல எனத் தெரிவித்து, அந்தக் கட்சியின் முன்னைய செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், நீதிமன்றில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.  

இவ்வாறானதொரு நிலையில், தேர்தல் ஒன்றினை உடனடியாக எதிர்கொள்வதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, சட்டரீதியான தடைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் பக்கங்களில் மன்சூர் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்த நபரையே முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராகக் கருத வேண்டியுள்ளது.  

அவ்வாறாயின் முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஹசன் அலியின் பாத்திரம் என்ன என்கிற கேள்வி இங்கு தவிர்க்க முடியாமல் எழுகிறது. அதனைத் தெரிந்து கொள்ளும்பொருட்டு, ஹசன் அனலியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.  

இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் தான்தான் என்று ஹசன் அலி உறுதியாகத் தெரிவித்தார். தன்னுடைய செயலாளர் பதவியின் செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு, கட்சிக்குள் 'உயர்பீட செயலாளர்' எனும் பதவியொன்று உருவாக்கப்பட்டதாகவும், அந்தப் பதவிக்காகவே மன்சூர் எனும் நபர் நியமிக்கப்பட்டார் என்றும் ஹசன் அலி விபரித்தார்.  

பிரச்சினைகள் எவ்வாறானதாக அமைந்தாலும், 'முஸ்லிம் காங்கிரஸை, நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் செயற்பாட்டில் ஒருபோதும் நான் ஈடுபடமாட்டேன். தொடர்ந்தும் நான் முஸ்லிம் காங்கிரஸிலேயே நிலைத்திருப்பேன் என்றும் அவர் கூறினார். 

எவ்வாறாயினும், இப்போதைய நிலையில் செயலாளர் பதவி தொடர்பில் நீதிமன்றத்தை நாடப் போவதில்லை என்று ஹசன் அலி கூறினார். 

சட்டரீதியான பிரச்சினைகள் காரணமாக, தனது சொந்த சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட முடியாததொரு நிலை முஸ்லிம் காங்கிரஸூக்கு முன்னர் ஒரு தடவை உருவாகியிருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது. முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக அந்தக் கட்சியின் இப்போதைய பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், நீதிமன்றில் வழக்கு ஒன்றினைத் தாக்கதல் செய்திருந்தார். அதன் காரணமாக, அந்தக் கட்சி தனது மரச் சின்னத்தில் போட்டியிட முடியாததொரு நிலை ஏற்பட்டிருந்தது. 

முஸ்லிம் காங்கிரஸூக்குள் இவ்வாறான நிலைமைகள் தோன்றியுள்ள நிலையில், தமது உள் முரண்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கே, அந்தக் கட்சியினருக்கு கால நேரம் போதுமானதாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் முஸ்லிம் சமூகம் சார்பாக இவர்களால் எதைத்தான் செய்ய முடியும் எனத் தெரியவில்லை. இனப் பிரச்சினைக்கு தீர்வுகளைக் காணும் வகையிலான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில், முஸ்லிம்களின் கணிசமாக ஆதரவினைப் பெற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸூக்குள், தலைவர்களின் கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கலவரம் உருவாகியிருப்பது கவலைக்குரிய விடயமாகும். 

முஸ்லிம் காங்கிரஸூக்குள் இவ்வாறான குழப்பங்களும், பிளவுகளும் அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் காலத்திலும் உருவாகியிருந்தன. அவற்றினை அப்போதைய தலைவர் அஷ்ரப், மிகவும் ஆளுமையுடனும், தைரியமாகவும் கையாண்டார். பிரச்சினைகளுக்கு யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியாகத் தீர்வு கண்டார். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனுடனுக்கும், ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்புக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டபோது, சேகு இஸ்ஸதீனை கட்சியிலிருந்து வெளியேற்றும் முடிவினை அஷ்ரப் எடுத்தமையானது சரி - பிழைகளுக்கப்பால் இன்றுவரை ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.  

ஆனால், முஸ்லிம் காங்கிரஸூக்குள் எழுகின்ற பிரச்சினைகளுக்கு, இப்போதெல்லாம் அவ்வாறான தீர்வுகள் காணப்படுவதில்லை என்கிற குறை பரவலாக உள்ளது. பிரச்சினைகளால் அந்தக் கட்சி சூழப்பட்டுக் கிடக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் கட்சியை பிரச்சினைகள் விழுங்கி விடும் நிலை ஏற்பட்டுவிடும். அப்போது எந்தவிதத் தீர்வுகளாலும் அதனைத் தடுத்துவிட முடியாது போகும். 

முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சியை பதவிச் சண்டைகளுக்காக பலிகொடுத்து விட முடியாது. முஸ்லிம் சமூகத்திலுள்ள ஏழை மக்களின் இரத்தம், வியர்வை, உழைப்புகளால் உருவாக்கப்பட்டது அந்தக் கட்சி. முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக பலர் உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. அந்தத் தியாகங்களுக்கு அர்த்தமில்லாமல் செய்து விடும் செயற்பாட்டில் யாரும் ஈடுபட முடியாது. 

தனி மனித மையவாதத்துக்கு எதிரான கோசங்களுடன்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஒரு காலத்தில் பெருந்தேசியச் சிங்களக் கட்சிகளின் முகவர்களாக முஸ்லிம் பிரதேசங்களில் செயற்பட்ட உயர்குடி முஸ்லிம் நபர்களை மையப்படுத்தியதாகவே முஸ்லிம் அரசியல் இருந்தது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்தின் பின்னர், அந்த நிலை உடைத்தெறியப்பட்டது. கோட்டுச் சூட்டு மனிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் மீட்டெடுத்து, பாமர மக்களின் கைகளுக்கும் பகிர்ந்தளித்தது. 

ஆனால், அந்த நிலை இப்போது மாறி வருவதாகக் கூறப்படுகிறது. கட்சி தங்களுக்கேற்றால்போல் இல்லாது விட்டால், தங்களுக்கேற்ற ஒரு கட்சியை மக்கள் தேடத் தொடங்கி விடுவார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .