2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு பிரதமர் அறிவுரை

Thipaan   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றில் மக்களுடன் இருக்க வேண்டும், அல்லது திருந்த வேண்டும் என்றும் அதில் எதையாவது ஒன்றையேனும் சரி செய்யத்தயாராக இல்லையென்றால், வீழ்ந்தாகவே வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒன்றிணைந்த எதிரணியினருக்கு நாடாளுமன்றத்தில் வைத்து, நேற்றுப் புதன்கிழமை அறிவுரை வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று, சுயாதீன ஆணைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரேரணைகளை சபையின் அங்கிகாரத்துக்காகச் சமர்ப்பித்து உரையாற்றும் போதே, பிரதமர் ரணில், இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அத்துடன், எவரது பேச்சுக்கும் கட்டுப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றுவதற்கு, நீதிபதிகள் இன்று தயாராக இல்லை என்றும், பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் பேசுகையில், 'நாட்டில், தேசிய அரசாங்கமொன்று இருப்பதற்கும் பிரச்சினைக்குத் தீர்வொன்றை காண்பதற்கும் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இவற்றைச் செய்வதால், அவர்களுக்கு இருக்கும் கஷ்டம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. திருட முடியவில்லை அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களைக் கொடுக்க முடியவில்லை என்ற ஏமாற்றங்கள் அவர்களுக்கு இருக்கலாம்.

நாட்டில் முதற் தடவையாக, நிர்வாக நியமனங்கள் தலையீடுகள் இன்றியும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் இன்றியும் நடக்கின்றன. பொலிஸ் நியமனங்களில் தற்போது, யாருக்கும் எந்த அழுத்தமும் வழங்க முடியாது. பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் சந்தர்ப்பம், முதற் தடவையாக ஜனாதிபதியால் அரசியலமைப்புப் பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், எந்தவொரு நோக்கமுமின்றி ஜனநாயகப் பொறிமுறைகளைத் தடுக்க, சிலர் முயல்கின்றனர். என்ன கூச்சல் போட்டாலும், இந்த அரசாங்கத்தின் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது.

நீங்கள் (ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்) பேரணி சென்றபோது, கம்பெல் பார்க் மைதானத்தை நிரப்புவதற்கு நாம் வாய்ப்பளித்தோம். ஆனால், அதைச் செய்ய முடியாமல் நீங்கள், லிப்டன் சுற்றுவட்டத்திற்குச் சென்றீர்கள். ஆனால், குருநாகல் மாநாட்டின் போது (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு), அதைவிடவும் 3 அல்லது 4 மடங்கு அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாது, கம்பெல் பார்க் மைதானத்தை எப்படி நிரப்பிக் காட்டுவது என்பதை, நாம் எமது மாநாட்டின் (ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு) போது, செய்து காட்டியிருந்தோம்.

ஒன்று நீங்கள் (ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்), மக்களுடன் இருக்க வேண்டும். அல்லது திருந்த வேண்டும். ஆனால், நீங்கள் மக்களுடனும் இருக்க மாட்டீர்கள், திருந்தவும் மாட்டீர்கள். அப்படியென்றால் வீழ்ந்துதான் ஆக வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்கள் வேண்டாம் என்று சொல்லி, தேர்தலொன்றுக்கு உங்களால் செல்ல முடியாது.

நீதிமன்றம் மற்றும் பொலிஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்று ஜனாதிபதி, தொலைபேசி ஊடாக பிரதம நீதியரசரிடம் பேசமாட்டார். நீங்கள் சொல்வதைக் கேட்டு மண்டியிட்டுச் செயற்படுவதற்கு, நீதிபதிகள் இன்று தயாராக இல்லை. யாரும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதைக் கேட்டு, நீதிமன்றத் தீர்ப்பை மாற்றுவதற்கும், நீதிபதிகள் இன்று தயாரில்லை.

அதுமட்டுல்லாது, இன்று நாட்டில், மன்னருக்கு ஒரு சட்டம் ஏனைய மக்களுக்கு ஒரு சட்டம்  என்று கிடையாது. அனைவருக்கும் இருப்பது ஒரே சட்டம் தான். யாதேனுமொரு நீதிபதியின் தீர்ப்பில் அதிருப்தி இருந்தால், அதைவிட உயர்வான நீதிமன்றமொன்றில் மேன்முறையீடு செய்ய முடியும்' என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .