2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'அதிக குற்றச்செயல்கள் இடம்பெறும் 2ஆவது பொலிஸ் பிரிவாக ஏறாவூரே உள்ளது'

Thipaan   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகம் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்ற இரண்டாவது பொலிஸ் பிரிவாக ஏறாவூர் உள்ளது. இதனைக் குற்றச் செயல்கள் அறவே இடம்பெறாத இடமாக மாற்ற வேண்டும் என, மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாநாயக்க, பிரதேச பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பொலிஸ் சேவையின் 150 ஆவது வருடத்தைச் சிறப்பிக்குமுகமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேசா வித்தியாலயத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற இடம்பெயர் சேவையை ஆரம்பித்து வைத்து அவர் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக ஆர்வலர்கள், ஊர்ப்பிரமுகர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாநாயக்க,

'பிரதேசங்களில் குற்றச்செயல்கள் அதிகரித்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விடும், அமைதி குலையும் பழிவாங்கும் உணர்வுகள் அதிகரிக்கும். அதனால் அழிவுகள் ஏற்படும்.

குற்றச் செயல்களை ஒரு போதும் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது, சமூகத்தில் அங்கமாக இருக்கின்ற ஒருவரோ, இருவரோ அல்லது குழுக்களோதான் எல்லா வகையான குற்றச் செயல்களையும் புரிந்து வருகின்றார்கள். எனவே, இந்த விடயத்தில் சமூகம் பாராமுகமாக இருந்து விட முடியாது.

பொலிஸார் பொதுமக்களின் பிரச்சினைகளையும் குறைநிறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதேபோல் பொதுமக்கள் பொலிஸாருடன் மிக நெருக்கமான நல்லுறவைப் பேணுவதன் மூலம் குற்றச் செயல்களை இருசாராருமாக இணைந்து ஒழிக்க முடியும். பொலிஸ் பொதுமக்கள் இணைந்தால் அபிவிருத்தியும் அமைதியும் ஏற்படும்.

ஏற்கெனவே குற்றச் செயல்கள் புரிந்து தண்டனை அனுபவித்து விட்டு கிராமங்களுக்கு வந்து மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களிலீபடுவோர், குற்றச் செயல்களைத் தூண்டுவோர், எதிர்காலத்தில் குற்றச் செயல்களிலீடுபடலாம் என மக்களால் சந்தேகிக்கப்படுவோர் குறித்து மக்கள் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்ள வேண்டும்.

அது போன்று குற்றச் செயல்களுக்கு ஆதரவாக இருக்கும் பொலிஸ் அதிகாரிகள் குறித்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருந்து கொண்டால் அதுபற்றியும் நாம் கடுமையான நடவடிக்கை எடுத்து குறித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த விடயத்திலே நீங்கள் அச்சப்பட வேண்டாம், எந்தவொரு ஊழல் புரியும் பொலிஸ் உத்தியோகத்தரையும்  சட்டத்தின் முன் நிறுத்த நாம் தயங்கப் போவதில்லை' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X