2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: முதலாவது விவாதம் இன்று

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னராக இடம்பெறவுள்ள 3 விவாதங்களில் முதலாவது விவாதம், ஐக்கிய அமெரிக்க நேரப்படி இன்று இடம்பெறவுள்ளது.

கருத்துக்கணிப்புகளில் குறைந்தது 15 சதவீதமான ஆதரவைக் கொண்டோரே விவாதத்துக்குத் தகுதிபெறுவர் என்ற நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பும் மாத்திரமே இவ்விவாதத்துக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

தேசிய ரீதியிலான கருத்துக்கணிப்புகளில், ஹிலாரி கிளின்டனே இன்னமும் முன்னிலை வகிக்கின்ற போதிலும், அண்மைக்காலமாக, சிறப்பான முன்னேற்றத்தை ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார். எனவே, இந்த விவாதம், முக்கியமானதாக அமையவுள்ளது.

இந்நிலையில், இந்த விவாதத்தில், முன்வரிசையில் அமர்வதற்காக, கோடீஸ்வரரும் ட்ரம்ப்பின் கடுமையான விமர்சகர்களில் ஒருவருமான மார்க் கியூபனை அழைப்பதாக, ஹிலாரி கிளின்டன் அறிவித்தார். இதற்குப் பதிலடியாக, 1990களில், ஹிலாரி கிளின்டனின் கணவன் பில் கிளின்டனோடு திருமணத்துக்குப் புறம்பான உறவைக் கொண்டிருந்த மொடல் நடிகையான ஜெனிபர் பிளவர்ஸை தான் அழைக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார். ட்ரம்ப்பின் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக, பிளவர்ஸ் அறிவித்துள்ளார்.

ட்ரம்ப் விடுத்த அழைப்பு, உத்தியோகபூர்வ அழைப்பா என்பது இன்னமும் உறுதியாகாத போதிலும், ட்ரம்ப்போடு கொள்கைரீதியாக முரண்படும் கியூபனுக்குப் பதிலாக, ஹிலாரி கிளின்டனின் கணவனின் முன்னாள் காதலியை ட்ரம்ப் அழைத்திருப்பது, இந்த விவாதத்தில், தனிப்பட்ட மோதல்கள் அதிகம் காணப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் அதிகம் மதிக்கப்படும் ஊடகங்களில் ஒன்றான நியூயோர்க் டைம்ஸ், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்டனுக்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. வழக்கமாக, பிரதான கட்சிகள் இரண்டினதும் வேட்பாளர்களையும் ஒப்புநோக்கி, இந்த முடிவை எடுக்கின்ற போதிலும், இம்முறை தேர்தல், வித்தியாசமானது எனத் தெரிவித்த அவ்வூடகம், ஹிலாரி கிளின்டனோடு ட்ரம்ப்பை ஒப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு, "நவீன அமெரிக்க வரலாற்றில், பிரதான கட்சியால் வேட்பாளராக நியமிக்கப்பட்ட மிகவும் மோசமான நபர், டொனால்ட் ட்ரம்ப் என நாம் நம்புகிறோம்" எனவும் அவ்வூடகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .