2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வு வேண்டும்’

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட இறுதிக்குள், அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வின் அடிப்படை முன்மொழிவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டுமென, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய தூதரக அதிகாரி நீக்லஸ் பேர்னாட்டிடம் வலியுறுத்தியுள்ளேன்” என, வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலியத் தூதரக அதிகாரி நீக்லஸ் பேர்னாட், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, வடமாகாண சபையில் நேற்று (25) இடம்பெற்றது. 

சுமார் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

“வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத் தூதரக அதிகாரி வருகை தந்துள்ளார். இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 

வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளின்படி, ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகார பகிர்வினை நாம் கோருகின்றோம். வடகிழக்கு இணைந்த மாநிலத்தினைக் கோருவதுடன், ஏனைய நாடுகளில் உள்ள கட்டமைப்புடன் பொருந்துகின்ற அதிகார பகிர்வினையே கோருகின்றோம் என அதிகாரியிடம் சுட்டிக் காட்டியுள்ளேன். வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளின் பிரதிகளும் அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

அரசியல் தீர்வின் முடிவுகள் மற்றும் அதன் முன்மொழிவுகள் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கின்றோம். 

அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொள்ள சர்வதேச சமூகம் உதவி செய்ய வேண்டுமென்பதுடன், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்களிப்பும் அவசியம். 

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் காணாமல் போனோர்கள் தொடர்பான சட்டம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஐ.நா சபையில் ஒப்புக்கொண்டவாறு பயங்கரவாத  தடுப்புச் சட்டம் நீக்கப்படவில்லை. பயங்கரவாத  தடுப்புச் சட்டம் நீக்கப்படாவிடினும், அதன் கீழ் உள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் பயங்கரவாத  தடுப்புச் சட்டம், அதிகாரிகள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளை பின்தொடர்வதும், அச்சுறுத்துவதுமான செயற்பாட்டினை நிறுத்தவில்லை என அதிகாரியிடம் சுட்டிக் காட்டியுள்ளேன். 

சாதாரண குற்றத்தில் ஈடுபட்டால், பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளலாமே தவிர, பயங்கரவாத  தடுப்புச் சட்டம் பிரிவினர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. பயங்கரவாதத்  தடுப்புச் சட்டம் பிரிவினர் இந்த சட்டத்தின் கீழ் செயற்படுவது பாரதூரமான ஏமாற்றத்தினை அளிக்கின்றது. 

அரசியல் கைதிகளை சட்ட நடவடிக்கையின்றி நீண்டகாலத்துக்கு தடுத்து வைத்துள்ளதுடன், சில சட்ட நடவடிக்கைகளையும் இழுத்தடிப்புச் செய்து சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது. 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்து செயற்பட வேண்டும். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்துடன் சுமூகமான உறவினைப் பேணி செயற்படும் நிலையில் அரசாங்கம் இரா.சம்பந்தனின் நல்லெண்ணத்தினைப் புரிந்துகொண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லெண்ணத்தினைப் புரிந்துகொண்டும் ஒத்துழைப்புச் செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தியதாக கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .