2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது புத்தளம் லிவர்பூல் கழகம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான மர்ஹூம் எஸ்.என்.எல். அப்துல்லாஹ் ஞாபகார்த்தமாக, புத்தளம் கால்பந்தாட்ட லீக், புத்தளத்தில், தொடராக நடாத்தி வந்த அப்துல்லாஹ் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடரில், புத்தளம் நகரில், ஏனைய கழகங்களுக்கு  சிம்ம சொப்பனமாக விளங்கும் புத்தளம் லிவர்பூல் கழகம்  மீண்டும் சம்பியனாகி தனது திறமையை பறைசாற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலமாக, லிவர்பூல் கழகமானது, புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் தொடராக நடாத்தப்பட்ட போட்டித் தொடர்களில், தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் சம்பியனாகி, புத்தளம் கால்பந்தாட்ட லீக் வரலாற்றில், வேறு எந்த அணிகளும் பெற்றுக்கொள்ளாத  வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இந்தப் போட்டித் தொடரின் பரபரப்பான இந்த இறுதிப் போட்டி, புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (23) மாலை நடைபெற்றது. லிவர்பூல் அணியுடன் புத்தளம் நகரின் மற்றுமொரு அதிசிறந்த அணியான நியூ ஸ்டார்ஸ் அணி எதிர்த்தாடியது. லீக் நடாத்திய இறுதிச் சுற்றுப்போட்டி ஒன்றில், இவ்விரு அணிகளும் சந்தித்துக்கொண்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

போட்டி ஆரம்பித்த நிமிடத்திலிருந்து இறுதி வரைக்கும் விறுவிறுப்பான ஆட்டமாக இப்போட்டி அமைத்திருந்தது. இடைவேளைக்கு முன்பதாக, லிவர்பூல் அணியின் சிறந்த வீரரும், புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியின் கால்பந்தாட்ட அணி சார்பாக, கடந்த வருடம், அதிகமான கோல்களை புகுத்தியமைக்காக கல்லூரியினால் கௌரவிக்கப்பட்ட வீரருமான எம்.எம்.எம். முசக்காப் அதிவேக கோல் ஒன்றை செலுத்தினார்.

இரண்டாவது பாதியில் இரு அணிகளுமே கோல்களைப் புகுத்தும் நோக்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தின. இந்நிலையில் லிவர்பூல் அணியின் முன்கள வீரர் எம்.நஸீம் மேற்கொண்ட குற்றத்துக்காக பிரதம நடுவரினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

நியூ ஸ்டார்ஸ் அணியின் பயிறுவிப்பாளரும், கோல்காப்பாளருமான எம்.வஸீம், லிவர்பூல் அணியின் கோல்காப்பாளர் எம்.பரோஜ் ஆகியோர் இரு அணிகளினதும் முன்னணி வீரர்களினால் அதிரடியாக செலுத்தப்பட்ட உதைகளை தடுத்து கோல் போக விடாமல் சிறப்பாக செயலாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

போட்டி நிறைவடையும் வேளை, நியூ ஸ்டார்ஸ் அணிக்கு பெனால்டி ஒன்று கிடைக்கப்பெற்றது. இந்தப் பெனால்டினை, அவ்வணியின் சிரேஷ்ட வீரர் என கருதப்படும் எம்.தஸ்லீம் கோல் ஆக்கியதால் இரு அணிகளுமே தலா ஒவ்வொரு கோலினைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலை அடைந்து நிறைவடைந்ததால், பிரதம நடுவர், இரு அணிளையும் பெனால்டி உதைக்கு அழைப்பு விடுத்தார்.

பெனால்டி உதையில்,  4 -3 என்ற ரீதியில் லிவர்பூல் அணி வெற்றிபெற்று சம்பியனாகியதோடு, இரண்டாம் இடத்தினை நியூ ஸ்டார்ஸ் அணி பெற்றுக்கொண்டது. லிவர்பூல் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் எச்.எச். நஜீப் கடமையாற்றி, கழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டு செல்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கு நடுவர்களாக ஏ.ஏ.எம்.பஸ்ரின், என்.எம். நிஸ்ரின், ஏ.எம்.சபீக் ஆகியோர் கடமையாற்றியதோடு நான்காம், ஐந்தாம் நடுவர்களாக ஜே.எம். ஜஹீர், எம்.ஆர்.எம். அம்ஜத் ஆகியோர் கடமையாற்றினர்.

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் தலைவர், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டீ சில்வா கலந்து கொண்டார். தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் எம்.ரமீஸ், புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரத்நாயக்க, தொடரின் அனுசரணையாளரும், மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்ளின் புதல்வருமான ஏ.எம். ஷிப்லி, புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம்.எம். சபீக், புத்தளம் மற்றும் கல்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம், லீக் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் உள்ளிட்ட லீக் நிர்வாகிகள் பலரும் கொண்டனர்.

சம்பியனாகிய  லிவர்பூல் அணிக்கு, வெற்றிக்கிண்ணத்துடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும், இரண்டாம் இடத்தினைப் பெற்ற நியூ ஸ்டார்ஸ் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கி வைக்கப்பட்டன.  இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால், புத்தளம் லீக்கில் பதிவு செய்யப்பட்ட அனைத்து கழகங்ளுக்கும் கால்பந்துகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, தொடரில் கடமையாற்றிய அனைத்து நடுவர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் அனுர டீ சில்வா, எப்.ஏ.கிண்ணப் போட்டி ஒன்றில் காலிறுதி வரை முன்னேறிய லிவர்பூல் அணியுடன் மோதிய நியூ ஸ்டார்ஸ் அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து விட்டது என கருத முடியாது. பெனால்டி மூலமே அவ்வணி பின்னடைந்துள்ளது. புத்தளம் நகர கால்பந்தாட்டம் இன்று முன்னேற்ற பாதையில் இட்டு செல்லப்படுகிறது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம், புத்தளம் நகர  கால்பந்தாட்ட வளர்ச்சிக்கு உதவ தயாராக உள்ளது எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .