2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'தனிப்பட்ட கொள்கைகளே நாட்டில் நெருக்கடி ஏற்பட காரணம்'

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

நாடு சுதந்திரம் அடைந்ததை அடுத்து, 1948ஆம் ஆண்டு முதல் மாறி மாறி ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தற்போது ஒன்றாக ஆட்சி செய்யும் நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் தோல்வி அடைந்துள்ளன. ஒவ்வொருவரின் தனிப்பட்ட கொள்கைகளே நாட்டில் நெருக்கடி ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அந்தப் பொறுப்பை மக்கள் விடுதலை முன்னணியிடம்  நாட்டு மக்கள் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 'நாட்டின் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் நிர்வாகம் மக்களுக்கு நன்மையா? அல்லது தீமையா?  எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறை விவேகமுள்ள பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (26) மாலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி உழைத்த பணத்தை மாறி மாறி ஆட்சி செய்த ஒரு சிறிய கும்பல் மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்குச் எடுத்துச் செல்கின்றது.  

இந்த நாட்டில் மேல் வர்க்கத்தினர் இன வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக வாழ்வதுடன், இங்குள்ள மக்களுக்கிடையில் இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் தோற்றுவித்து மேல் வர்க்கத்தினர் நன்மை அடைகின்றனர்.
நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருப்பதற்கு காரணம் கடந்த 68 வருட காலமாக கடைப்பிடித்திருந்த மோசமான பொருளாதார கொள்கைகளே. இவற்றைவிட நாட்டிலுள்ள மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து அதனூடாக சேர்க்கப்படுகின்ற தேசிய சொத்தானது மேல் வர்க்கம் என்ற் சிறிய குழுவினால் சூறையாடப்பட்டு செல்கின்றது.
நாட்டிலுள்ள மேல் வர்க்கத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டு சாதாரண மக்களிடையே பிரிவினையை தோற்றுவிக்கின்றனர். கடந்தகால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்களும் அவர்களது பிள்ளைகளுமே தவிர மேல்வர்க்கத்தினர் அல்லர்.

எனவே மேல் வர்க்கத்திற்கு எதிரான போராட்டமொன்று அவசியமாகும். இப் போராட்டத்தினூடாக வடக்கிலும்  கிழக்கிலும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். வெறுமனே தனித்தனியாக போராடி எதனையும் வெல்ல முடியாது. எனவே அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு இதற்காக போராட வேண்டும். இதனூடாக நாட்டில் மேல் வர்க்கத்தினருக்கு மட்டுமாக உள்ள ஆட்சிமுறையை சாதாரண மக்களுக்கும் சென்றைடையக்கூடிய ஒர் ஆட்சிமுறையாக உருவாக்க முடியும்.

எனவே, நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அந்த பொறுப்பை நாட்டு மக்கள் மக்கள் விடுதலை முன்னணியிடம் ஒருமுறையாவது ஒப்படைத்துப் பார்க்க வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .