2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நாட்டின் நாமம் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் முக்கியத்துவம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸஹ்ரான் சிக்கந்தர் லெவ்வை

அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் எதிர்பார்க்கப்படும் போட்டித்திறன் வாய்ந்த, ஏற்றுமதியை மையமாகக்கொண்ட பொருளாதாரத்தினூடாக 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாவதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், சிறந்த மனித வளத்தை கவர்தல் போன்றனவும் இன்றியமையாதவையாகும்.  

இக்கண்ணோட்டத்தில், நாட்டின் நாமத்தை (‘பிரான்ட்’) கட்டியெழுப்புவதனூடாக நாட்டின் நன்மதிப்பை அதிகரிப்பதானது, வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வதிலும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலும், சிறந்த மனிதவளத்தை கவர்வதலிலும் நேரடியான செல்வாக்கை ஏற்படுத்தும்.  

மனதில் தோன்றுவதுமூன்று தசாப்த கால போர்ச் சூழல் மற்றும் சுனாமியினால் ஏற்பட்ட வடுக்களிருந்து நமது நாடு மாற்றம் கண்டுவரும் நிலையில், உலக மக்களால் இலங்கை எவ்வாறு பார்க்கப்படுகின்றதென்றும் ‘ஸ்ரீ லங்கா’ எனக் கூறப்பட்டதும் உலக மக்கள் மனதில் உடனடியாக உதயமாகும் விம்பம் எவ்வாறு அமைகின்றது என அறிந்துகொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்.  

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் நமது நாடு சமாதானம் மற்றும் சௌபாக்கியத்துக்காக சிரமப்பட்டிருந்தாலும் சமாதானத்தின் பின்னர் நாட்டில் போக்குவரத்து சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளில் முன்னேற்றமும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஜனநாயகம், நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல், சர்வதேச நாடுகளுடனான உறவுகளை மீளக்கட்டியெழுப்புதல் போன்றவற்றில் முயற்சிகளும் புலனாகின்றன. மேலும் கொழும்பு சர்வதேச நிதி நகரம் (முன்னர் துறைமுக நகரம்), மேற்கு பிராந்திய நகர அபிவிருத்தி (மெகா பொலிஸ்) போன்ற திட்டமிடப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் காணப்படுகின்றன.  
 

உள்ளுணர்வுகளும் உண்மைத்துவமும்  
இம்மாற்றங்களுடன் இலங்கையின் தற்கால உண்மையான நிலைவரம் பற்றியும் நாட்டின் ஆற்றல், எதிர்கால இலக்குகள் மற்றும் அபிலாசைகள் பற்றியும் சர்வதேசரீதியில் சிறந்த தெளிவை உருவாக்குவது மிகவும் அவசியமாகும்.   

தேசத்தின் நாமம் (பிரான்ட்) தொடர்பில் சர்வதேச நிபுணரான சிமொன் அன்ஹோல்ட்டின் கருத்தின்படி, ஒரு நாட்டின் நாமத்தின் மதிப்பென்பது ஏற்றுமதி, ஆட்சி, கலாசாரம், மக்கள், சுற்றுலாத்துறை, குடிவரவு ஆகிய ஆறு பரிணாமங்கள் மீதான உலக மக்களின் உள்ளுணர்வாகும்.  
 

தேசத்தின் நாமத்திற்கான தேசியக் கொள்கை
தேசத்தின் நாமத்தைக் கட்டியெழுப்புவதானது வெறுமனே சுற்றுலா அதிகார சபையின் செயற்பாடாகவோ அல்லது வெறுமனே விளம்பரங்களாகவோ அமையாது நாட்டின் தேசியக்கொள்கையாக அமைதல் வேண்டும்.   
மேலும் இது சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம், நகரத் திட்டமிடல், போக்குவரத்து துறை, நீதி மற்றும் ஒழுங்கு, சுற்றாடல் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளின் ஒருங்கிணைந்தச் செயற்பாடாகும்.   
 

சிறந்த தலைமைத்துவம்  
தேசத்தின் நாமத்தைக் கட்டியெழுப்புவதில் அரச தலைவர்களின் தலைமைத்துவம் இன்றியமையாததாக அமைவதுடன் இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் அல்லது மிகவும் நீண்ட காலத்தில் இலங்கையின் நாமத்தின் நிலை எவ்வாறு அமைய வேண்டுமென்றும் இலங்கை எவ்வாறு உலக மக்களால் பார்க்கப்பட வேண்டுமென்ற விதத்தில் மாற்றங்களை செயற்படுத்தவும் வேண்டும்.  
அதன்படி, தேசத்தின் நாமத்தைக் கட்டியெழுப்புவதுக்கான திட்டம் மற்றும் வியூகங்கள் வடிவமைக்கப்படுவதன் ஊடாக சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களையும் மேற்கொள்ளலாம்.  

சிங்கப்பூரானது தேசத்தைக் கட்டியெழுப்புவதுக்கான எண்ணக்கருவை சிறந்த முறையில் பிரயோகித்துள்ளது. சிங்கப்பூரின் பிதாமகன் லீ குவான் யூவின் தலைமைத்துவமானது வளங்கள் இன்றிய, அரசியல் ஸ்திரத்தன்மையற்ற, திறனற்ற தொழிலாளர்களைக் கொண்ட சிறியதொரு நிலத்தை நவீன, புத்தாக்கங்களைக் கொண்ட, அறிவுசார், பல்லின மக்கள் வாழும், நிலையான, பலம் பொருந்திய தேசமாக உலக மக்களால் பார்க்குமளவிற்கு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தினார்.   
 

மாற்றங்கள்   
நாட்டின் கொள்கைகள், வியூகங்கள், செயன்முறைகள், மக்கள் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி உண்மையான அனுபவத்தை பெற்றுக்கொடுப்பதனூடாக உலக மக்களுக்கு சான்றுகளை ஏற்படுத்துவன் மூலம் உலக மக்களின் உள்ளுணர்வுகளை உண்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடியதாக மாற்றி அமைக்கலாம்.   

இதற்காக அரசாங்கம், தனியார்துறை மற்றும் நாட்டு மக்கள் நாட்டின் நாமத்தை முன்னேற்றுதல் என்ற குறிக்கோளுடன் செயற்படவும் வேண்டும்.  

முன்னோக்கிய பயணம் 

  • பிரதமரின் தலைமையில் விசேட பணிக்குழு ஒன்றை நியமித்து நாட்டின் நாமத்தை முன்னேற்றுவதுக்கானச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.  பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் குற்றங்கள் மற்றும் குழப்பங்களை மிகவும் குறைந்த அளவில் பேணுவதுடன் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்துதல்.   
  • சட்டத்தின் ஆட்சி மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக இறுக்கமான தண்டனை.  
  • தனிப்பட்ட மற்றும் குடும்ப நலன்களை விடவும் நாட்டின் நலமே மேலானது என்ற சிந்தனையை உருவாக்குதல்.  
  • சாதகமான பொருளாதார கொள்கைகளூடாக முதலீடுகளை நாட்டிற்குள் வரவழைத்தல் மற்றும் உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையில் இலங்கையின் நிலையை முன்னேற்றுதல்.  
  • தேச நாமத்தின் எதிர்பார்புக்களுக்கு தகுந்தவாறு பொது நிறுனங்களை மீளக் கட்டமைத்தல்.  
  • விரும்பப்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் போட்டித்திறனை ஏற்படுத்தும் நோக்கில் மனித வளத்தை அபிவிருத்தி செய்தல்.   
  • நாட்டின் நாமத்தை கட்டியெழுப்புவதற்கான எண்ணக்கருவை சிறந்த முறையில் பிரயோகித்து நாட்டின் நன்மதிப்பை சர்வதேச ரீதியில் வெற்றிகரமாக முன்னேற்றிய நாடுகளிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ளல்.   
  • முடிவாக, நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு சமாந்தரமாக நாட்டின் நாமத்தை கட்டியெழுப்புவதனூடாக நன்மதிப்பை அதிகரிப்பதன் மூலம் சிறந்த சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கும் இட்டுச் செல்லலாம். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .