2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எலோன் மஸ்க்கின் செவ்வாய்க்கான பயணம்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய்க் கிரகத்துக்கு பயணிக்கக் கூடிய விண்வெளியூர்தியை, SpaceX நிறுவனத்தின் நிறுவுநரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான எலோன் மஸ்க், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27) வெளிப்படுத்தியிருந்தார். செவ்வாய்க் கிரகத்தில், முதன்முதலில் வசிக்கவுள்ளவர்களை கொண்டு செல்வதற்காகவே, எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனம் குறித்த விண்வெளியூர்தியை தயாரிக்கிறது.

மேற்கு மெக்ஸிக்கோ நகரான குடலஜாராவில் இடம்பெற்ற சர்வதேச விண்வெளியியல் கொங்கிரஸிலேயே மேற்படி தகவல்களை எலோன் மஸ்க் வெளிப்படுத்தியிருந்தார்.  

மேற்கூறப்பட்ட விண்வெளியூர்தியானது, ஊக்கியின் மேலிருந்து, பூமியிலிருந்து ஏவப்படவுள்ளதுடன், அதன் பின்னர், செவ்வாய்க் கிரகத்துக்கான, தனது பயணத்தை தானாகவே தொடரவுள்ளது. இத்திட்டம் இறுதி செய்யப்படாதபோதும் முதலாவது விண்வெளியூர்தியானது “Heart of Gold,” என பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த விண்வெளியூர்தியானது, 17 மீற்றர் விட்டத்தைக் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.

மேற்குறித்த திட்டத்தின்படி, ஒரு பயணத்தின்போது, 100 பேரை அனுப்புவதாகவே உள்ள நிலையில், ஒருவருக்கான செலவைக் குறைக்கும் பொருட்டு, 200 அல்லது அதற்கு மேலானோரை, ஒரு பயணத்தில் அனுப்ப எலோன் மஸ்க் விரும்புகின்றார். குறைந்தபட்சமாக, இப்பயணத்துக்கு, 100,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஒருவருக்கு செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க் கிரகத்துக்கான குறித்த பயணமானது, நடைமுறைப்படுத்தப்படும் வருடம், தொழில்நுட்பத்தைப் பொருட்டு, குறைந்தது, 80 நாட்களிலிருந்து, அதிகபட்சமாக  150 நாட்கள் எடுக்கும் என்று கூறப்படுகையில், அண்மைய எதிர்காலத்தில், 30 நாட்களில் பயணத்தை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

றொக்கெட் ஊக்கியானது 12 மீற்றர் விட்டத்தைக் கொண்டிருப்பதுடன், 122 மீற்றர் உயரமாக இருக்கும். தாங்கியில் எத்தனை மீள்நிரப்புதல்கள் மேற்கொள்ளப்படும் என்பதைப் பொருட்டு, விண்வெளியூர்தியானது 450 தொன்கள் எடையை காவிச் செல்லக்கூடியதாகவிருக்கும்.

இதேவேளை, செவ்வாய்க் கிரகத்துக்கு செல்லும் விண்வெளியூர்தியானது மீளப்பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும் என்பதுடன், சுற்றுவட்டப் பாதையில் வைத்து எரிபொருள் நிரப்பக் கூடியதாகவிருக்கும். இதுவே முக்கியமென்று எலோன் மஸ்க் கருதுகின்றார்.

ஏனெனில், சுற்றுவட்டப்பாதையில் வைத்து எரிபொருள் நிரப்புவது, பயணத்தின் செலவை மிகவும் குறைக்கும் என்பதுடன் இலகுவாக இருக்கும். செவ்வாயிலிருந்து திரும்பி வரும் பயணங்களின்போது, செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி, செவ்வாயில் ஏவுதள மொன்றை அமைத்து, அதிலிருந்து விண்வெளியூர்திகளை திருப்பி அனுப்பும்போது, சுற்றுவட்டப் பாதையில் வைத்து எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கேப் கெனவரிலுள்ள கெனடி விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 39A தளத்திலிருந்தே விண்வெளியூர்தி ஏவப்படவுள்ளதுடன், ஏவுதலின்போது, 127,800 கிலோநியூட்டன்ஸ் சக்தியை ஊக்கி வழங்குவதுடன், பின்னர் விண்வெளியூர்தியும் ஊக்கியும் பிரிந்து விடும்.

இதன்பின்னர், விண்வெளியூர்தியானது சுற்றுவட்டப்பாதையை நோக்கிச் செல்லுவதுடன், ஊக்கியானது, இருபது நிமிடங்களுக்குள் பூமிக்குத் திரும்பும். ஏவுதளத்தில் ஊக்கி தரையிறங்கியவுடன், ஊக்கியுடன் உந்துபொருள் தாங்கி ஒன்று இணைக்கப்படுவதுடன், முழுப் பிரிவும் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் ஏவப்படும். இது மீளும் விண்வெளியூர்தியுடன் இணைவதுடன், சுற்றுவட்டப்பாதையில் வைத்து விண்வெளியூர்திக்கு மீண்டும் எரிபொருள் செலுத்தப்படும். இவ்வாறு, மூன்று தொடக்கம் ஐந்து தடவைகள் வரையில் உந்துபொருள் தாங்கி எங்கு வரையிலும் சென்று எரிபொருளை நிரப்பும்.

இறுதியாக, செவ்வாயை நோக்கி விண்வெளியூர்தி பயணமாகும். இப்பயணத்தில் பயணிப்பவர்களுக்கு, பயணத்தினை மேலும் கவர்ச்சிகரமாக ஆக்குவதற்கு, பூச்சிய ஈர்ப்பு சக்தியில் விளையாட்டுகள், திரைப்படங்கள், அறைகள், உணவகம் என்பன இருக்கும் என எலோன் மஸ்க் உறுதியளித்துள்ளார்.

செவ்வாயை  விண்வெளியூர்தியை அடைந்தவுடன், தனது றொக்கெட் இயந்திரங்களை பயன்படுத்தி, விண்வெளியூர்தி கீழே பதிந்து செவ்வாயில் தரையிறங்கும். விண்வெளியூர்தியில் பயணித்தவர்கள், விண்வெளியூர்தியைப் பயன்படுத்தியும், ஏற்கெனவே செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட பொருட்களையும் வன்பொருட்களையும் பயன்படுத்தி, செவ்வாயில் நீண்டகாலம் வசிக்கக்கூடிய இருப்பிடங்களை அமைப்பர்.

20 தொடக்கம் 50 வரையான மொத்த செவ்வாய்ப் பயணங்களின் மூலம், 40 தொடக்கம் 100 வருடங்களில், முழுமையாக, தாங்களாகவே நிலைத்திருக்கக்கூடிய ஒரு மில்லியன் கணக்கானோர் செவ்வாயில் இருப்பர் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், மக்கள் எங்கு வசிப்பார்கள், சாப்பிடுவார்கள் என்பதைப் பற்றியோ, விண்வெளி வீரர்கள் எதிர்கொள்கின்ற நிறையற்ற பறக்கின்ற தன்மை போன்ற சுகாதரப் பிரச்சினை தொடர்பான தகவல்கள் எதையும் எலோன் மஸ்க் வெளிப்படுத்தவில்லை. உதாரணமாக, காண்பிக்கப்பட்ட முன்னோட்டக் காணொளியில், செயற்கையாக ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் சுழன்றிருக்கவில்லை. எனவே, விண்வெளியூர்திக்குள் எவ்வாறு இருக்கும், சுகதேகியாக இருப்பதற்கு, விண்வெளியூர்தியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றது தெளிவில்லாமல் உள்ளது.

இது தவிர, இரத்த நாளங்களை சிறிதாக்கி அல்லது தடை செய்து மாரடைப்பு, நெஞ்சு வலி போன்ற இதய நோய்களை ஏற்படுத்துகின்ற சூரிய கதிரியக்கம் பற்றியும் எலோன் மஸ்க் கவலைப்படபடவில்லை. கதிரியக்கம் வழமையாக வருவதாகவும், இது ஒரு மிகப் பெரிய விடயமில்லை என எலோன் மஸ்க் கூறியுள்ளார். புற்றுநோய் வருவதற்கான ஆபத்து சற்று அதிகரிக்கும் என மேலும் தெரிவித்த எலோன் மஸ்க், ஏதோ ஒரு விதமான பாதுகாப்பு இருக்கும் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது, ஒரு வழிப் பயணம் அல்ல எனவும், மீண்டும் திரும்பவில்லை என்று மக்கள் முடிவெடுத்தாலும், மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பை மக்களுக்கு கொடுப்பது முக்கியம் எனத் தெரிவித்த எலோன் மஸ்க், எந்தவொரு நிலையிலும், விண்வெளியூர்தியை தாங்கள் மீளக் கொண்டுவருவதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

யார் முதன்முதலில் செவ்வாய்க்குச் செல்வார்கள் என்ற தகவலை எலோன் மஸ்க் வெளிப்படுத்தியிருக்கவில்லை. சில நாட்கள் பயிற்சிக்குப் பின்னர்,  எவரும் போகலாம் என்று உருவாக்கவே, தாங்கள் முயற்சி செய்வதாக எலோன் மஸ்க் தெரிவித்வித்துள்ளார். எவ்வாறெனினும், உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பெரும்பாலும் சிறுவர்கள் இருக்கமாட்டார்கள் என்று தெரிவித்த எலோன் மஸ்க், பெரும்பாலானவர்கள் இறப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

செவ்வாய்க்கான முதலாவது பயணம், 2024ஆம் ஆண்டு பூமியிலிருந்து ஆரம்பிக்கும் எனவும், அதற்கு அடுத்த வருடம் செவ்வாயைச் சென்றடையும் என தென்னாபிரிக்காவில் பிறந்த கனேடிய-ஐக்கிய அமெரிக்க தொழில்முனைவரான எலோன் மஸ்க் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, இதற்கு முன்பதாக, 2018ஆம் ஆண்டளவில், ஆளில்லாத, பொருட்களை உடைய விண்வெளி ஓடங்களை, SpaceX செவ்வாய்க்கு அனுப்பவுள்ளது.

மேற்குறித்த திட்டத்துக்கு பாரிய பொது-தனியார் இணைப்புத் தேவை என எலோன் மஸ்க் தெரிவித்தபோதும், எந்தவொரு அரசாங்க முகவரகத்துடனும் இணைப்பை எலோன் மஸ்க் அறிவிக்கவில்லை.

செவ்வாய்க்கான பயணத் திட்டங்களை SpaceX கொண்டிருக்கையில், நீண்டதூர விண்வெளிப் பயணங்களின்போது, மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து வருகின்ற நாஸா, 2030ஆம் ஆண்டு, செவ்வாய்க்கு ஆட்களை அனுப்புவதற்கான திட்டத்தைக் கொண்டிருக்கின்றது. இது தவிர, அமெஸொன் நிறுவுநர் ஜெப் பெஸொஸின் நிறுவனமான ப்ளூ ஒரிஜினும் செவ்வாய்க்கு செல்லுவதற்கான திட்டங்களை கொண்டிருக்கின்றது.

எவ்வாறெனினும், சில வெற்றிகரமான ஏவுதல்களைத் தொடர்ந்து, இம்மாதம் முதலாம் திகதி, SpaceXஇன் Falcon 9 றொக்கெட் ஆனது, புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ஏவுதளத்தில் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .