2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

எழுக தமிழும் இனவாதக் கூச்சல்களும்

Thipaan   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வீதிகளில் தேனும் பாலும் ஓடப் போவதாக ஒரு தரப்பினர் தெரிவித்து வர, மறு தரப்பினரோ, இனவாதச் சந்திப்பொன்று இடம்பெற்று வந்துள்ளதாகவும் நாட்டின் அமைதி பாதிக்கப்படக்கூடும் என்றவாறும் கருத்துகளை எழுப்பி வருகின்றனர். 

முதல்வகையான கருத்துகளைத் தெரிவிக்கும் தமிழர்களில் ஒரு தரப்பினரின் எண்ணம் நிறைவேற வேண்டுமாயின், தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளினதும் மக்களினதும் மனங்களில், இந்தப் பேரணி தொடர்பாக நல்லெண்ணம் ஏற்பட வேண்டும். அதற்காக, இந்தப் பேரணி, இனவாதப் பேரணி என்ற அவர்களில் ஒரு தரப்பினரின் கருத்துகளை ஆராய முற்படுகிறது இப்பத்தி. 

எழுக தமிழ் பேரணி ஏற்பாடு செய்யப்பட்ட போது, தமிழர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர், அதற்கு ஆதரவு தெரிவிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற குழப்பத்திலேயே காணப்பட்டனர். இன்னும் குறிப்பிட்ட சதவீதத்தினர், அப்பேரணிக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். ஆனால், அந்தப் பேரணியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில், அந்தப் பேரணி வெற்றிபெற்றுள்ளது என்ற யதார்த்தத்தை, தமிழர் தரப்பினர் ஏற்றுக் கொள்கின்றனர். தென்னிலங்கைத் தரப்பில், இப்பேரணி தொடர்பாக ஆரம்பத்தில் பெருமளவு கவனம் காணப்பட்டிருக்காத போதிலும், அப்பேரணியின் வெற்றியைத் தொடர்ந்து, அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 

தமிழர் தரப்பில் இப்பேரணியை ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கொண்டிருந்த பிரதான கருத்து, “நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஓரளவுக்காவது, தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த முன்னேற்றங்களைக் குழப்புவதற்கு இது வழிகோலலாம். தென்னிலங்கையிலுள்ள இனவாதிகளுக்கு, இப்பேரணி வழியேற்படுத்திக் கொடுக்கலாம்” என்பதாக இருந்தது. தற்போது, அதே கருத்தையே, தென்னிலங்கை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தெரிவித்து வருகின்றன. 

ஆகவே, இப்பேரணி அவசியம் தானா என்ற வினாவுக்கான விடையை ஆராய முற்பட்டால், அது நிச்சயமாகவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பதிலாக அமைய முடியும். ஆனால், தமிழ் மக்களது - குறிப்பாக வடக்கில் வாழும் தமிழ் மக்களது - ஆதரவுடனேயே, இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு, முன்னைய ஆட்சியில் தமிழ் மக்கள் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை அல்லது கவனம் செலுத்தப்பட்ட போது அது தமிழ் மக்களை ஒடுக்கும் வகையிலேயே அக்கவனம் காணப்பட்டது என்ற பிரதான காரணம் காணப்பட்டது. அதேபோல், அப்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும், முன்னைய ஆட்சியாளர்களோடு ஒப்பிடும்போது மிதவாதிகளாகக் கருதப்பட்டனர். எனவே, தமிழர் பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்படுமெனக் கருதப்பட்டது. உண்மையை ஏற்றுக் கொள்வதானால், சிறியளவு முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், வாக்குறுதியளிக்கப்பட்டவற்றில் எவ்வளவு சதவீதமானவை நிறைவேற்றப்பட்டன என்றால், மிகவும் குறைவான சதவீதமே என்ற பதிலே கிடைக்கும். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், அவற்றைப் பற்றி இன்னமும் தெளிவான முடிவு காணப்படவில்லை; மக்கள் வசிக்காத இடங்களில், இன்னமும் விகாரைகள் அமைக்கப்படுகின்றன; இன்னமும் காணிகள் பிடுங்கப்படுகின்றன; சிவில் நடவடிக்கைகளில் படையினரின் தலையீடு இன்னமும் காணப்படுகிறது; இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு, போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை; என்ன வகையான தீர்வு என்பது தொடர்பில் உறுதியான சமிக்ஞையேதும், மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என, இந்த அரசாங்கம் மீதான விமர்சனங்களை, தமிழ் மக்கள் முன்வைக்கிறார்கள். 

இந்தக் குற்றச்சாட்டுகள், நடைமுறையில் அரசாங்கம் எதிர்நோக்கும் சவால்களைக் கருத்திற்கொள்ளாமல் முன்வைக்கப்படுகிறது என்ற பதிலை, அரசாங்கம் வழங்கக்கூடும். அதில், சிறியளவு நியாயமும் உண்டு. “சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாங்கள் தயார்” என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டால், தென்னிலங்கையிலுள்ள இனவாதக் கும்பல்களும் அடிப்படைவாதக் குழுக்களும், அதைத் தலையில் பிடித்துக் கொண்டு, தென்னிலங்கையைச் செயலிழக்கச் செய்துவிடும். ஆனால், எவ்வளவு காலத்துக்குத் தான் தென்னிலங்கை இனவாதிகளைக் காரணங்காட்டி, தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை, இந்த அரசாங்கம் தவிர்த்துவிட முடியும்? 

அத்தோடு, இந்த அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை உண்மையிலேயே தீர்க்க முயன்று, தென்னிலங்கை இனவாதிகளின் எதிர்ப்பால் தடுமாறுகிறதா, அல்லது தென்னிலங்கையில் காணப்படும் இனவாதிகளைக் காரணங்காட்டி, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைத் தள்ளிப்போட முயல்கிறதா என்ற தமிழ் மக்களில் ஒரு தரப்பினரின் சந்தேகத்தையும், அப்படியே புறந்தள்ளிவிட முடியாது.  

இந்தப் பின்னணியில் தான், எழுக தமிழ் பேரணியை அணுக வேண்டிய தேவையிருக்கிறது. இந்த அரசாங்கம் பதவியேற்று ஏறத்தாழ 21 மாதங்கள் நிறைவடைகின்ற நிலையில், அதுவரை காலமும் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை வழங்கிய பின்னர் தான், பாரியளவிலான பேரணியொன்று முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே, “நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சிகளைக் குழப்பும் செயற்பாடு” என்பது, வெறும் வெற்றுப் பேச்சே தவிர, அதில் எந்தவிதமான கருத்துச் செறிவோ அல்லது உண்மையோ கிடையாது. 

ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி, இனவாதத்தைத் தூண்டும்படியான கருத்துகளை எழுப்பியதாகத் தகவல்கள் இல்லை. இரா. சம்பந்தன், எம். சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்ற சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சி, இந்தப் பேரணியில் கலந்துகொண்டிருக்காத போதும், அக்கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் அனைவருமே முன்வைக்கும் கோரிக்கைகள் தான், பேரணியிலும் முன்வைக்கப்பட்டன. அப்படியாயின், பேரணி மாத்திரம் இனவாதப் பேரணியாக மாறிப் போனது எவ்வாறு என்ற கேள்வி எழுகின்றதல்லவா? 

இந்த நிலையில் தான், கருத்துத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, எந்தவொரு பிரஜைக்கும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் வாழ்வதற்கான உரிமை உண்டு எனவும் அதை விக்னேஸ்வரன் எதிர்த்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். இதேபோன்ற கருத்தையே, வேறு சில அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் தெரிவிக்கின்றன. இது, காலங்காலமாக, தமிழ் மக்களின் கருத்துகளை பெரும்பான்மையின அரசியல்வாதிகளும் சிங்கள மக்களின் கருத்துகளை தமிழ் அரசியல்வாதிகளும் திரிவுபடுத்தும் நடைமுறையைத் தொடர்வதாகவே அமைந்துள்ளது. தமிழ் மக்களின் கோரிக்கை, அரசால் அனுசரணை வழங்கப்பட்டு, தமிழ்ப் பிரதேசங்களின் குடிப்பரம்பலைச் சிதைக்கும் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டுமென்பது தான். அந்தக் கருத்தை, “வடக்கில் பெரும்பான்மையின மக்கள் வாழக்கூடாது என விக்னேஸ்வரன் தெரிவிக்கிறார்” என இனவாதப்படுத்துவது, எந்த வகையிலும் நன்மையாக அமையாது. அதைவிட, “தெற்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் துரத்தியடிக்கப்பட்டால் என்ன நடக்கும்?” என்று அவர் எழுப்பியுள்ள கேள்வி, வெறுமனே கேள்வியல்லாது, எச்சரிக்கையாவே பார்க்கப்பட வேண்டியிருக்கிறது. 

அதேபோல், வடக்கிலிருந்து விகாரைகளை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை தவறானது எனவும் இலங்கையின் எந்தப் பகுதியிலும் எந்த மதத்துக்கும் வழிபாட்டிடங்களை அமைக்க முடியுமெனவும் அவர் தெரிவித்திருந்தார். இதுவும் தவறான ஒரு கருத்து. வடக்கில், பெரும்பான்மையின மக்கள் வசிக்காத இடங்களிலும் கூட, மூலைக்கு மூலை, விகாரைகள் அமைக்கப்படுவதைத் தான், தமிழ் மக்கள் எதிர்த்து வருகிறார்கள். அதற்கும், ஒரு பகுதியில் பெரும்பான்மையின மக்கள் வசித்து, அவர்கள் விகாரையொன்றை அமைப்பதற்குமிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.  

வடக்கில், பெரும்பான்மையின மக்கள் வசிக்காத இடங்களில் விகாரைகள் அமைக்கப்படவில்லை என்றாலோ அல்லது பெரும்பான்மையின மக்கள், குடிப்பரம்பலைச் சிதைக்கும் நோக்கில் குடியமர்த்தப்படவில்லை என்றாலோ, அதற்கான பதிலை, தரவுகளின் உதவியோடு வெளிப்படுத்த முடியும். அதுவே, விக்னேஸ்வரன் சொல்வது தவறென்றானால், அவரின் வாயை அடைக்க உதவும். அதைவிட்டுவிட்டு, “விக்னேஸ்வரன் ஓர் இனவாதி” என்று சொல்லிக் கொண்டிருப்பது, எந்தவிதத்திலும் உதவாது. 

அத்தோடு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில், இலங்கையின் ஜனாதிபதியாக, இலங்கையின் கொள்கைகள் பற்றிய விளக்கமளிப்புக்காக உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இலங்கை ஒரு பௌத்த நாடு” என்று தெரிவித்திருக்கிறார். வடக்கில் இனவாதம் உருவாகிவிட்டதாகக் கூச்சலிடுவோர், அதைப் பற்றி வாயே திறந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், அதே கருத்தில் தான் அவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறதில்லையா? 

இத்தனைக்கும், விக்னேஸ்வரன் மீது விமர்சனங்களே கிடையாது என்றில்லை. வடக்கின் முதலமைச்சராக, அவர் தனது கடமைகளை முழுவதுமாக ஆற்றவில்லை என்பதே பொதுவான கருத்து. “வட மாகாண சபைக்கு அதிகாரம் கிடையாது. பல்லும் பிடுங்கிய பாம்பு” என்று அவர் சொல்லிக் கொண்டாலும், இருக்கின்ற அதிகாரங்களை வைத்து என்ன செய்தார் என்பது கேள்விக்குரியதே. மக்களின் நலனுக்காக, வடமாகாண சபையால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் என்று, எவற்றையும் சுட்டிக்காட்டிச் சொல்லக்கூடியதாக இல்லை. ஆனால், சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினையைக் கையாண்ட விதம், இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமை, மருதனார்மடத்தில் அமைக்கப்பட முயலப்பட்ட குடிநீர்ச் சுத்திகரிப்பு என, அச்சபை மீது குற்றஞ்சாட்டப்படக்கூடிய விடயங்கள் ஏராளம். 

ஆனால், அதற்காகவெல்லாம், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இனவாதம் பூசுவது, எந்த விதத்திலும் சரியானதாகவோ அல்லது பயன்மிக்கதாகவோ அமையாது என்பது தான் நிதர்சனம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .