2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போராட்டங்களை குழப்பி அடிக்க திட்டம் தீட்டப்படுகின்றது

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த மாற்றுக் கட்சிகள் முனையும் அதேவேளை கட்சி பேதங்களின்றி முன்னெடுக்கும் போராட்டங்களை குழப்பி அடிக்கவும் மாற்று கட்சிகாரர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மேலும், தொழிலாளர்கள் அவர்களின் வேதனைகளையும் தெரிவித்து உரிமைகளை பெறுவதற்கு வீதிக்கு இறங்கி போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர். இவர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நடந்துவிடாது பாதிப்புகளும் ஏற்படாமல் இ.தொ.கா மக்கள் பிரதிநிதிகள் இவர்களை காத்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுப்படும் தொழிலாளர்களுக்கு தெளிவூட்டும் வகையில் கொட்டகலையில் உள்ள சௌமிய மூர்த்தி தொண்டமான் தொழிற்பயிற்சி மண்டப மக்கள் சந்திப்பு கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

குடும்ப செலவை ஏற்று நடத்தி கொள்ள முடியாத நிலையில் இன்று தோட்டங்கள் தோறும் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி சாத்வீக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சில சுயநலவாதிகள் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் கலந்துகொண்டு அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளவும் குழப்பி அடிக்கவும் முயற்சிக்கின்றனர்.

தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டமானது தன்னிச்சையானது அதுவும் இ.தொ.கா பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும்போது எம்மீது பற்றுடனும் இப்போராட்டம் இடம்பெறுகின்றது.

சம்பள விடயத்தில் தொழிலாளர்களை பாதிக்கும் எந்தவொரு உடன்படிக்கையிலும் இ.தொ.கா கையொப்பம் இடவில்லை என்பதை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஆதரத்துடன் நிரூபிக்கின்றோம் என புதிய உடன்படிக்கை ஆதரத்தை பார்வைக்கு காட்டினார்.

அதேவேளை, தொழிலாளர்களை பாதிக்கும் எந்தவொரு உடன்படிக்கைக்கும் இ.தொ.கா தலைக்குனியாது அத்தோடு விட்டுக்கொடுப்பையும் இ.தொ.கா விரும்பாது.

தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் தொழிலும் வருடம் 300 தொழிலும் வழங்கப்பட வேண்டும். இது தொழில் சட்டத்தில் இருக்கின்றது. ஆனால், முதலாளிமார் சம்மேளனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை தயாரித்துள்ளனர். இதில் வாரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் வேலை வழங்குவதாகவும் மீதி நாட்களுக்கு கைக்காசு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் உருவாக்கியுள்ள ஒப்பந்தம் நமது மக்களை எதிர்காலத்தில் நாடோடிகளாக்கி விடும் ஒப்பந்தமாகும். இதை இ.தொ.காவும் ஏற்காது, தொழிலாளர்களும் ஏற்க தயாராக இல்லை.

எதிர்வரும் காலங்களில் தொழிலாளர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடும் ஒப்பந்தங்களை முதலாளிமார் சம்மேளனம் உருவாக்கியுள்ளது.

பத்து முறை பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. ஆகையால், தோட்ட நிர்வாகத்திற்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுக்கின்றார்கள்.

இதனை ஏற்றுக்கொண்டு முதலாளிமார் சம்மேளனம் சுமூகமான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு வந்து நியாயமான சம்பளத்தை மக்களுக்கு வழங்க வேண்டும். அதேவேளை மீண்டும் இழுபறி நிலைமையை உருவாக்கினால் இ.தொ.காவும் தொழிற்சங்க கூட்டு கமிட்டியினரும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பளம் தொடர்பில் இ.தொ.காவின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கைக்கு வந்தவுடன் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .