2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இறக்குமதிச் செலவு மிக அதிகமாக காணப்படுகிறது

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 

எமது நாட்டில் அண்மைக்காலமாக விவசாய ஏற்றுமதியைவிட பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதியே அதிகரித்துக் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தெரிவித்தார்.
 
சர்வதேச வர்த்தக கண்காட்சி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நாட்டின் பொருளாதாரத்தில் பொருட்கள் சேவைகள் ஊடாகவே அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றோம். நாட்டில் ஏற்றுமதி வருமானத்தைவிட இறக்குமதிச் செலவு மிக அதிகமாக காணப்படுகிறது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மீன்களை தவிர அனேகமான பொருட்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்றன. எமது மாவட்டத்தின் உற்பத்தி வெளி மாவட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்குமாகவிருந்தால் எங்களுடைய மாவட்டம் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையும்.
 
சிறிய உற்பத்தியின் கூட்டுப்பொருட்கள் வெளி மாவட்டத்திலிருந்து அல்லது வெளிநாட்டிலிருந்து வருகின்றன. இதன்காரணமாக எங்களுடைய உற்பத்தியில் கிடைக்கும் இலாபம் வெளிநாட்டுக்கோ அல்லது வெளிமாவட்டத்துக்கோ செலுத்தப்பட்டு மீதி மாவட்டத்தின வருமானமாக கிடைக்கிறது.
 
உங்களுடைய உற்பத்தி சார்ந்த பொருட்கள் உள்ளுர் மூலவளங்களைப் பயன்படுத்தி செய்தால் மாத்திரமே நாங்களை அதிகூடிய வருமானத்தை மாவட்ட ரீதியாக பெற்றுக்கொள்ள முடியும்.
 
மாவட்டத்தில் நூற்றுக்கு 70 சதவீதமான மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்தோடு பாடசாலைக் கல்வியை முடித்துக்கொள்கிறார்கள். அதில் ஒரு சிலர் தொழில் பயிற்சிகளில் ஈடுபடுகிறனர். மாவட்டத்தில் பயிற்சி இல்லாத தொழிலாளிகளாகவே அதிகம் காணப்படுகிறார்கள்.
 
மாவட்டத்தில் தொழில்துறை சார்ந்த பயிற்சி நெறிகளை வழங்குவதன் மூலம் சிறந்த தொழிலாளிகளை உருவாக்க முடியும்”  என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்: 

இங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்  உரையாற்றுகையில்,

வேலையில்லாப் பிரச்சினை காரணமாக ஆண்கள் மற்றும் குடும்ப பெண்கள் வெளிநாடுகளில் கூலியாட்களாகவும் பணிப்பெண்களாகவும் செல்வதன் மூலம் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன் கலாசார சீர்கேடுகளும் இடம்பெறுகின்றன இவற்றிலிருந்து தவிர்கவேண்டிய தேவை எமக்குள்ளது.

 மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களும் காணப்படுகிறன. அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் ஊக்குவிப்புக்களை வழங்கி வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

மண்டூர் மற்றும் கதிரவெளில் தனியாருக்குச் சொந்தமான ஓட்டுதொழிற்சாலை முறக்கொட்டாஞ்சேனையில் அமைக்கப்பட்ட அரிசி சுத்திகரிப்புத் தொழிற்சாலை ஆகியவற்றை மீள ஆரம்பிக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

சில முதலீட்டாளர்கள் எங்களது பகுதிகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் அவர்களது முதலீடு எங்களது மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்வகையிலான திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள் என்றார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்:
 
இங்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் உரையாற்றுகையில்,
 
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை 15.2 சதவீதம் நிலவளத்தையும் 26 கடல் வளங்களைம், 900த்துக்கும் மேற்பட்ட நீர்வளஙகளையும், ஒரு மில்லியன் ஏக்கர் விவசாய செய்கை காணியையும் கல தொழிற்சாலைகள் உருவாக்க கூடிய மாகாணமாக காணப்பட்டாலும் மட்டக்களப்பு மாவட்ட வறுமையிலே முன்னிலை வகிக்கிறது.

வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு 2014ஆம் ஆண்டு 14,871 பணிப்பெண்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து மாத்திரம் சென்றுள்ளனர். கூலித்தொழில் செய்வதற்கு ஏறத்தாள 16,000 பேரை அனுப்பியுள்ளது. பிறிமா மற்றும் டோக்கியோ சீமேந்து தொழிற்சாலைகளை விட வேறு எந்தொரு தொழிற்சாலைகளும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படவில்லை.

இம்முறை கண்காட்சியில் 160 கம்பனிகள் வந்துள்ளன. அடுத்த முறை 500 கம்பனிகளாக மாற்றம் பெறவேண்டும். ஒவ்வொரு  கம்பனிகளின் செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டவையாக காணப்படுகிறன்றன. ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படும் போது கொழும்புக்கு செல்ல வேண்டிய நிலையே தற்போதும் காணப்படுகிறது.
 
எங்களுக்குள் இருக்கின்ற மூலவளஙக்ளை அடையாளங்கண்டு ஒவ்வொன்றையும் சிறிய கைத்தொழல் நிலையமாக மாற்றவைக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
 
திருகோணமலை அபிவிருத்தி வலய திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இரண்டு சுற்றுலா வலங்களை உருவாக்கும் வகையில் திட்டங்களை வகுத்துவருகிறோம்.
 
மட்டக்கப்பு மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையமொன்று அமைக்குமாறு அரசாங்கத்தை கேட்டுள்ளேன். வாகரை – புணானைப் பிரதேசத்தை மையப்படுத்திய பகுதியில் இதை அமைக்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளோம் என்றார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்:

இங்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உரையாற்றுகையில்,
 
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்டம் பெரும்பான்மையினருக்கு சாதகமாக அமையுமானால் அது மீண்டும் நாம் துன்பியலுக்குச் செல்வதைத் தடுக்க முடியாது.
 

 புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டம் என்பது நாட்டில்  சரியான பாதையொன்றை வகுத்டதிடும் போது மாத்திரமே சமாதானம் ஏற்படும்.
 
நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு எழுத்தப்படுகின்றது என்பது முக்கிய விடயமாக இருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு சாதகமாக இருந்தால் நாங்கள் மீண்டும் துன்பியலுக்குள் செல்வது தவிர்க்கமுடியாததாகிவிடும். ஒற்றுமை என்றும் நோக்குடன் எழுதப்படுமாயின் எங்களுடைய கனவுகள், இலக்குகள் மற்றும் இலட்சியங்கள் யதார்த்தமாக நடைமுறைச் சாத்தியமுடையதாக இருக்ககூடியதாகவிருக்கும். நாட்டில் அரச தலைவர்கள் இந்த விடயங்களை தங்களது மனதுக்குள் பதிர்ந்துக்கொள்ள வேண்டும்.
 
எங்களது பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு கைத்தொழில்களை மேற்கொள்ளவேண்டும். முதலீடு செய்பவர்கள் எல்லாம் அறுவடை செய்துகொண்டு செல்லும் அளவுக்கு இல்லாமல் அவர்களை இங்குள்ள மக்களுக்கு தொழில் வழங்கக்கூடிய வகையில் ஆற்றுப்படுத்தக்கூடிய கடப்பாடு எங்களுக்கு உண்டு என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .