2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ஊடகங்களிடம் அதிகமாக அடிவாங்கியவன் நானே'

Thipaan   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், தீசான் அஹமட், எப்.முபாரக்

'நான், பாதுகாப்புச் செயலகத்தில் பணியாற்றிய போதும் சரி, தற்போது கிழக்கு மாகாணத்தில் ஆளுனராக இருக்கின்ற போதும் சரி, ஊடகங்களினால் அதிகம் தாக்கப்பட்டவனாக காணப்படுகிறேன். அண்மையில் சம்பூரில், கிழக்கு முதலமைச்சருக்கும் எனக்கும் இடையே இடம்பெற்ற சம்பவத்தின் போது அதிகமாக அடி வாங்கியவன் நானே' என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் வகிபங்கு எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு, இன்று (01) இடம் பெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு முதலமைச்சருக்கும் எனக்கும் இடையே சம்பூரில் இடம்பெற்ற சம்பவத்தின் போது கிழக்கு முதலமைச்சர் பிரபல்யம் அடைந்து விட்டார். அந்தச் சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட கடற்படையினரும் நானும் ஓரங்கட்டப்பட்டோம். இப்பிரச்சினையைப் பத்திரிகைகளும் இலத்திரனியல் ஊடங்களும் வீணாக பூதாகரமாக்கின.

இச்சம்பவம் இடம்பெற்று சில வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் நானும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் அருகருகே கதிரையில் இருந்தோம். இதனை அவதானித்த ஜனாதிபதி, இருவரும் ஒன்றாக இருப்பதைப் படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர் ஒருவரையேனும் காணவில்லை என்னிடம் கேட்டார்.

வெறுமனே பிரச்சினைகளை மட்டுமே வெளிப்படுத்தி, மக்களை பரபரப்புக்குள்ளாவது மட்டும் ஊடகங்களின் பணி என பல ஊடகங்கள் நினைத்துச் செயற்படுகின்றனர்.

சில பத்திரிகையார்கள், ஒருவர் மீது சேறுபூசுவதும் அதனைக் கழுவுவதும் தான் ஊடக செயற்பாடு என எண்ணியுள்ளார்கள். மேலும், நல்லிணக்கம் என்பதற்கான வரைவிலக்கணத்தை புரிந்து வைத்திருக்க வேண்டும். அதனை மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். ஊருக்குள் யானை வந்தாலும் நல்லிணக்கம் இல்லை என்பார்கள். பாடசாலையில் பிரச்சினை என்றால் அங்கும் நல்லிணக்கம் இல்லை என்பார்கள்.  வீட்டத்திட்டம் இடம் பெறவில்லையென்றால் அங்கும் நல்லிணக்கம் இல்லை என்பார்கள்.

எனவே நல்லிணக்கத்துக்கும் மீள்குடியேற்றத்துக்கும் ஏனைய சமூக பிரச்சினைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் கடமையாகும் என, அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .