2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அனித்தாவுக்கு 3 பதக்கங்கள்; ஆறாமிடத்தில் வடக்கு

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

தேசிய பாடசாலை தடகளப் போட்டிகளில், மகாஜனாக் கல்லூரியின் ஜெகதீஸ்வரன் அனித்தா, கோலூன்றி பாய்தலில் தங்கப் பதக்கத்தையும், 100 தடைதாண்டல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டி ஆகியவற்றில் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள், கண்டி கண்டி போகம்பறை விளையாட்டு அரங்கில் 13 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்தது. இந்த விளையாட்டுப் போட்டி, நேற்றுத் திங்கட்கிழமை வரை நடைபெற்றது.

21 வயதுப் பிரிவு கோலூன்றி பாய்தலில் அனித்தா 3.30 மீற்றர் பாய்ந்து, சாதனையுடன் தங்கம் வென்றார். முன்னதாக 2014 ஆம் ஆண்டு அருணோதயக் கல்லூரி மாணவி பவித்திராவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 3.17 மீற்றர் சாதனையை அனித்தா முறியடித்தார்.

அனித்தா, 21 வயதுப் பிரிவு ஈட்டி எறிதலில் 31 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். அத்துடன், அதேவயதுப் பிரிவு 100 மீற்றர் தடைதாண்டல் (சட்டவேலி) ஓட்டத்தில் வெண்கலம் வென்றார்.

17 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து மகாஜனாக் கல்லூரி வீராங்கனை சந்திரகுமார் ஹெரினா தங்கப்பதக்கம் பெற்றார். இவர், 17 வயதுப் பிரிவு பெண்களுக்கான உயரம் பாய்தலில் 1.50 மீற்றர் உயரம் பாய்ந்து, வெண்கலப் பதக்கம் பெற்றார்.

17 வயதுப்பிரிவு கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.சங்கவி, பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த திவ்யா ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.

17 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் அ.புவிதரன் 3.80 மீற்றர் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், அளவெட்டி அருணோயதக் கல்லூரியின் ர.யதுர்சன் 3.60 மீற்றர் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், அதே கல்லூரியின் உசுலக்ஸன் 3.50 மீற்றர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கோலூன்றி பாய்தலில் மகாஜனாக் கல்லூரி வீராங்கனை ஸ்ரீஸ்கந்தராசா டிலானி 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பா.கிரஜா 2.70 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

19 வயதுப்பிரிவு பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.26 மீற்றர் நீளம் பாய்;ந்து, உடுப்பிட்டி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.ஆரணி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

21 வயதுப் பிரிவு பெண்களுக்கான குண்டுபோடுதலில் 9.76 மீற்றர் தூரம் எறிந்து வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவி நாகராசா ரிஷாந்தினி வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருணோதயக் கல்லூரியின் நெப்தலி ஜொய்சன் 4.61 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையுடன் தங்கள் வென்றார். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மகாஜனாக் கல்லூரி வீரன் எஸ்.டிலக்ஸன் 4.42 மீற்றர் உயரம் பாய்ந்தமை சாதனையாக இருந்தது. எஸ்.டிலக்ஸன் இம்முறை 4.30 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார்.

21 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோயதக் கல்லூரியைச் சேர்ந்த நிதுசன் 3.70 மீற்றர் உயரம் பாய்ந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இப்போட்டிகளின் அடிப்படையில், 21 பதக்கங்களைப் பெற்று, 122 புள்ளிகளைப் பெற்ற வடமாகாணம், ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இப்போட்டிகளில், ஒட்டுமொத்தப் புள்ளிகளின் அடிப்படையில், 855 புள்ளிகளைப் பெற்ற மேல் மாகாணம், முதலாவது இடத்தைப் பெற்றது. 492 புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாணம், இரண்டாவது இடத்தைப் பெற்றதோடு, 304 புள்ளிகளைப் பெற்ற சப்ரகமுவ மாகாணம், மூன்றாவது இடத்தைப் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .