2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ட்ரம்ப்பும் இந்து இந்தியர்களின் காதலும்

Thipaan   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

இவ்வாண்டு நவம்பர் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், அண்மைக்கால ஐக்கிய அமெரிக்க வரலாற்றில், குழப்பம் மிகுந்ததான தேர்தலாக மாறியிருக்கிறது என்று சொல்வது, அந்நிலையை முழுமையாக வெளிப்படுத்தாததாகவே அமையும். அந்தளவுக்கு, பாரிய குழப்பங்களையும் பதற்றத்தையும், இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் போட்டியிடும் குடியரசுக் கட்சியையே இரண்டாகப் பிளந்துவிட்டார் என்று சொல்லுமளவுக்கு நிலைமை காணப்படுகிறது. 

ஆனால், இவற்றுக்கெல்லாம் மத்தியில், துணைக் கதையொன்று உருவாகி வருகிறது. இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் வாழும் இந்தியர்களிடத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு அதிகரித்துவரும் ஆதரவு தான் அது. அண்மைக்கால ஜனாதிபதித் தேர்தல்களோடு ஒப்பிடும் போது, வித்தியாசமான நிலையையே இது காட்டுகிறது. 

2008ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகுவதற்காக பராக் ஒபாமா போட்டியிட்ட போது, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பெருமளவிலான ஆதரவு, அவருக்கு இருந்தது. அது தவிர, இந்தியா, இலங்கை உள்ளிட்ட கீழைத்தேய நாடுகளில், ஒபாமாவை, வரவேற்கத்தகு மாற்றமாகக் கருதினர். இதற்கு, வெள்ளையர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் அமெரிக்க வரலாற்றில், கறுப்பின ஜனாதிபதியால் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதோடு, ஜனநாயகக் கட்சியினர், குடிவரவுக் கொள்கைகளில் இளக்கமான கொள்கையைக் கொண்டவர்கள் என்பதும் காரணமாக இருந்தது. நாட்டுக்குள் புதிதாக வேறு இனத்தவர்கள் வருவதை, குடியரசுக் கட்சியினர் பெரிதும் விரும்புவதில்லை. 

டொனால்ட் ட்ரம்ப்போ, வழக்கமான குடியரசுக் கட்சியினரை விட மிகவும் இறுக்கமான குடிவரவுக் கொள்கைகளைக் கொண்டவர். ஏனைய நாட்டவர்கள், அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என்பதை, வெளிப்படையாகவே கூறுமளவுக்கு அவரது பிரசாரம் அமைந்துள்ளது. வெள்ளையின ஆதிக்கத்தைப் பிரசாரப்படுத்தும் கிளான் போன்ற குழுக்களின் ஆதரவைப் பெற்றவராக, ட்ரம்ப் இருக்கிறார். அவரது ஆதரவாளர்களில் சுமார் 20 சதவீதத்தினர், அடிமைத்தனத்தை ஒழித்தமை தவறு என்கின்றனர். 

இவ்வாறானதொரு வேட்பாளரை, இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும்? அதற்கான அடிப்படை தான் என்ன? 

இரு தரப்பினருமே, முஸ்லிம்களை வெறுப்பது தான் அந்தக் காரணம். 

இந்துக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட இந்தியாவில், குறிப்பிட்ட சதவீதமானவர்கள், சமாதானத்தை விரும்பும், ஒற்றுமையை விரும்பும், பல்வகைமையை விரும்பும் குழுவினராகவே இருக்கிறார்கள். ஆனால், இவர்களையெல்லாம் தாண்டி, கடும்போக்கு இந்துக்களும் அங்கு காணப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ், சிவசேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாகவும் இன்னும் பல இடங்களில் அங்கிகரிக்கப்படாத குழுக்களாகவோ அல்லது தனிநபர்களாகவே இணைந்து, இந்த வெறுப்புக் காணப்படுகிறது. 

தற்போது ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி, ஓர் இந்துத் தேசியவாதக் கட்சியாக இருப்பதால், இந்த முஸ்லிம் வெறுப்பை, அக்கட்சி மீதும் அதன் தலைவர் நரேந்திர மோடி மீதும் இலகுவாகப் போட்டுவிட்டுத் தப்பித்துவிடலாம். ஆனால், அக்கட்சி ஆட்சிக்கு வர முன்னரும் இவ்வெறுப்பு இருந்தது. அக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், அந்த வெறுப்பு அதிகரித்திருக்கிறது என்பதற்கான தரவுகள் எவையும் இல்லை. ஆகவே, இந்த வெறுப்பென்பது, இந்துக்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்திருக்கின்ற ஒன்று. 

இந்தியாவின் அயல் நாடான பாகிஸ்தான், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கின்ற நாடு என்பதோடு, இந்தியாவுக்குள் நடக்கும் பல்வேறுபட்ட தாக்குதல்களையும் அந்நாடு தான் ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுக் காரணமாக எழுந்த வெறுப்பாக இது இருக்கலாம். இல்லாவிடில், இந்தியத் துணைக்கண்டத்தில் காலாகாலமாக இடம்பெற்ற முஸ்லிம் அரசர்களின் படையெடுப்புகள் பற்றிய வரலாற்றுக் காயங்களாக இருக்கலாம். காரணம் எதுவாக இருப்பினும், இந்த வெறுப்பென்பது உண்மையானது. 

மேற்கத்தேய அரசாங்கங்களின் தலைவர்களில், இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பை அல்லது விமர்சனத்தைக் கொண்ட பலரும், அவற்றை வெளியில் பரவலாக வெளிப்படுத்துவதில்லை. தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா கூட, அமெரிக்காவில் இடம்பெறும் தாக்குதல்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் நடத்தப்பட்டாலும், அதை “இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் விளைவு” என அழைப்பதில்லை என்பது, ட்ரம்ப் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளின் குற்றச்சாட்டு. ஆனால், வெளிவரும் உள்வீட்டுத் தகவல்களின் அடிப்படையில், “இஸ்லாமியப் பயங்கரவாதம்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினால், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அதிகரித்துவிடும் என அஞ்சும் ஜனாதிபதி ஒபாமா, “இஸ்லாமுக்குள் பிரச்சினை இருக்கிறது. அம்மதத்தில் ஒரு தரப்பினர், மிகவும் கடும்போக்குவாதிகளாக மாறிவிட்டனர். ஆகவே, மதத்தைச் சீர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்” என, சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்குத் தலைவர்களிடம், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில்தான், தான் ஜனாதிபதியானால், எந்தவொரு முஸ்லிமும் அமெரிக்காவுக்குள் வருவதற்குத் தடை விதிக்கப் போவதாக அறிவித்து, அதன் மூலம் தனது பிரசாரத்தைக் கொண்டு செல்லும் டொனால்ட் ட்ரம்ப்பை, தோழராகக் கருதுகிறார்கள் இந்த இந்துப் பிரிவினர். 

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், மெக்ஸிக்கர்கள், முஸ்லிம்கள், கறுப்பினத்தவர்கள், சீனர்கள் என்று, சிறுபான்மைத் தரப்பினர் அனைவரையும் கோபப்படுத்தியுள்ள ட்ரம்ப் தரப்பு, அண்மைக்காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பெண்களின் ஆதரவையும் இழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. அதனால் தான், இந்தியர்கள் மீதான கவனத்தை அதிகமாகத் திருப்பியுள்ளனர். இரண்டு பிரதான கட்சிகளுமே ஆதிக்கம் செலுத்தாத மாநிலங்களில், இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதன் மூலம் அவற்றைக் கைப்பற்றுவதற்கு, ட்ரம்ப் பிரசாரக் குழு திட்டமிடுகிறது. 

இதன் ஓர் அங்கமாக, “குடியரசுக் கட்சியின் இந்துக் கூட்டணி” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சியொன்று இடம்பெற்றது. இதில், தென்னிந்தியாவில் பிரபல நடனக் கலைஞராக இருந்து, தற்போது வட இந்தியாவில் பிரபல இயக்குநராக மாறியிருக்கும் பிரபு தேவா, நடிகை ஸ்‌ரேயா, தெலுங்கின் முன்னணி நடிகர் ராம் சரன் உள்ளிட்ட நட்சத்திரக் குழாமொன்று, ஆடிப்பாடி மகிழ்வித்திருக்கிறது. காஷ்மிரிலும் பங்களாதேஷிலும் இடம்பெற்ற “இஸ்லாமியப் பயங்கரவாத நடவடிக்கைகளில்” பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவுவதற்கான நிகழ்ச்சி என்றே இது விளம்பரப்படுத்தப்பட்டாலும், பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டவர், டொனால்ட் ட்ரம்ப். அதை அவர், தனது பிரசார மேடை போன்றே பயன்படுத்திக் கொண்டார். அத்தோடு, தேர்தலுக்கு மூன்று வாரங்கள் மாத்திரமே இருக்கின்ற நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு, அதிகப்படியான அறிவு தேவையில்லை. 

ஆக, இந்த இந்து - ட்ரம்ப் கூட்டணி, எதிர்காலத்தில் தொடருமா என்று கேட்டால், அதற்கான பதிலாக, உறுதியான எதையும் கூற முடியாதிருக்கிறது. முதலாவதாக, ட்ரம்ப் என்பவர் அரசியல்வாதி அல்லர். ஆகவே, இந்தத் தேர்தலில் தோல்வியுற்றால், தற்போது 70 வயதாகும் ட்ரம்ப், அனேகமாக 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியேற்படும். (அண்மைக்கால வரலாற்றில், அமெரிக்க ஜனாதிபதியொருவர், தனது முதற்பதவிக் காலத்துடன் விலகியமை அரிது. பலத்த விமர்சனங்களை எதிர்கொண்ட ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கூட, இரு தடவைகள் தெரிவுசெய்யப்பட்டார்). அவ்வாறான நிலையில், தனது 78 வயதில் ட்ரம்ப்பை ஏற்றுக் கொள்வதற்கு, அமெரிக்கா தயாராக இருக்குமா தெரியாது. எனவே, இத்தேர்தலில் தோல்வியுற்றால், தனது வணிக நடவடிக்கைகளிலேயே கவனத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுபக்கமாக, இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக ட்ரம்ப் வெற்றிபெற்றால், இந்துக்களுக்கு (சிறுபான்மையினர்) அவர் ஆதவளிப்பாரா என்பது கேள்விக்குறியே. உண்மையிலேயே அவருக்கு இந்துக்கள் மீது விருப்பம் இருந்தாலும் கூட, அவருக்கு ஆதவளிப்பவர்களில் பெரும்பாலானோர், தனித்து வெள்ளையினத்தவர்களைக் கொண்ட அமெரிக்காவையே உருவாக்க விரும்புகின்றனர். ஆகவே, இந்துக்களினதோ அல்லது இந்தியர்களினதோ நலன்கள் பாதுகாக்கப்படுமென்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. 

முஸ்லிம் வெறுப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கொண்டு ஏற்பட்டிருக்கும் இந்தக் கூட்டணி, இந்துக்களுக்கு எந்தவித நன்மையையும் வழங்காது என்பதையே, நடைமுறை அறிவு சொல்கிறது. மாறாக, இந்தியாவில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் காணப்படும் ஒருவிதமான பதற்றமான நிலைமையை மேலும் அதிகரிக்க, இந்தக் கூட்டணி வழிசமைக்கலாம் என்பது தான் கவலைக்குரியது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .