2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ரூ.730க்கு கைச்சாத்திட்டு துரோகமிழைத்துள்ளனர்: தம்பையா

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே 800 ரூபாவுக்கும் அதிகத்தொகை நாட் சம்பளமாகப் பெற வாய்ப்பு இருந்த நிலையில் 730 நாட் சம்பளத்துக்குக் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். இது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்று கூறிய பரிவாரங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  

அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுசார்பாக வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் கோரி கடந்த காலங்களில் தமது போராட்டங்களை மேற்கொண்டிருந்த போதும் புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம், வெறும் 730 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டு கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தொழிலாளர்கள் சார்பாக இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச. மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பவும் கைச்சாத்திட்டுள்ளன.

அடிப்படை சம்பளம் வெறும் 50 ரூபாயாக அதிகரித்துள்ள புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தில், ஏற்கெனவே வழங்கப்பட்ட விலைக்கேற்ற கொடுப்பனவு 30 ரூபாய் அப்படியே வழங்குவதற்கும், ஏற்கெனவே 75சதவீத வரவுக்கு வழங்கப்பட்ட 140 ரூபாய் 60 ரூபாயாககக் குறைக்கப்பட்டும், இதுவரை இல்லாத உற்பத்தித்திறன் கொடுப்பனவு என்ற புதியவகை கொடுப்பனவாக 140 ரூபாயும் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபாய் சேர்த்து வெறும் 110 ரூபாய் சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு தொழிலாளர்களால் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அத்தோடு, இதுவரை காலமும் சம்பளக் கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டு வந்த நிலுவை சம்பள நடைமுறை இல்லால் ஆக்கப்பட்டு, 2015ஆம் ஏப்பிரல் மாதத்திலிருந்து வழங்கப்பட வேண்டிய 18 மாத நிலுவை சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமை என்பன கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் இலாமையையே காட்டுகிறது.

ஏற்கெனவே 800 ரூபாவுக்கும் அதிகத்தொகை நாட் சம்பளமாகப் பெற வாய்பு இருந்த நிலையில் 730 நாட் சம்பளத்துக்குக் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். இது பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும், கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்று கூறிய பிரிவாரங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஒன்றாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிபந்தனைகளை ஏற்று கையொப்பமிட்டுப் பின்னர் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டும் அசட்டுத்தனமான தொழிற்சங்க அரசியல் கலாசாரத்தை தொழிலாளர்கள் தொடர்ந்தும் சகிக்கக்கூடாது. இ.தொ.கா. தலைவர்கள் நிலுவை சம்பளம் பெற்றுக் கொடுக்க முடியாது என்றும் கூறும் கருத்துக்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அடிப்படை அறிவற்ற கருத்துக்களாக இருப்பதுடன், அச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாகும்.  

அத்தோடு, தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்துக்கு இ.தே.தோ.தொ.ச. மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டியும் சம அளவில் பொறுப்பு கூறவேண்டியவர்களாவர். கம்பனிகள் கூறுவது போல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நு.P.கு மற்றும் நு.வு.கு என்பவற்றைச் சேர்த்து சம்பளத் தொகையை கூறும் வங்குரோத்து நிலைக்கு இன்று தொழிற்சங்கங்கள் தள்ளப்பட்டுள்ளன.  

கம்பனிகள் அனைத்தும் இலாபமோ நட்டமோ ஒருமுகமாக இருந்து தங்கள் பக்க பேரப்பேச்சை முன்னெடுத்த போதும், தொழிலாளர்கள் சார்பாக ஒப்பமிடும் மூன்று சங்கங்களும் கம்பனிகளைப் பலப்படுத்தும் வகையில் பல முரண்பட்ட நிலைப்பாடுகளை பேச்சுவாத்தை மேசையிலும் அதற்கு வெளியிலும் வெளிப்படுத்தி அவர்களின் தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் செயற்பாடுகள் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. ஆரம்பத்தில் தாங்கள் 1,000 சம்பள உயர்வுக்கு ஆதரவளிப்பதாகச் சத்தியாகிரகம் இருந்த அக் கூட்டணியினர், 730 இணங்கியதால் தாங்கள் நடத்த இருந்ததாகக் கூறிய போராட்டத்தை கைவிட்டனர்.

அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில் நாட் சம்பளத்தையும் இல்லாமல் செய்து உற்பத்தித் திறனை அடிப்படையாக கொண்;ட முறை என்ற பேரில் தொழிலாளர்களின் சட்ட ரீதியான உரிமைகளை பறித்து தொழிற்சங்க உரிமைகள் அற்ற உதிரிகளாக ஆக்கும் நிலைக்கு தள்ளுவதற்கே கம்பனிகள் திட்டமிட்டுள்ளனர். அதன் அங்கமாகவே உற்பத்தித்திறன் கொடுப்பனவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே தற்போதைய கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திட்டப்பட்டுள்ளதாக அம்முறைக்கு முழு ஒத்துழைப்பை கம்பனிக்கு வழங்கி வரும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்தின போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் தான் மத்தியஸ்தர் என்று கூறிவந்த போதும் 730 ரூபாயை ஏற்றுக் கையொப்பம் இட வேண்டும் என்று வற்புறுத்தியமை அவர்கள் வெளிப்படையாக கம்பனிகள் சார்பாக இருந்தமையை காட்டுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள், தொழிலாளர் வர்க்கக் குணமற்ற கம்பனிகளுக்கு அடிப்பணியும் தொழிற்சங்கங்களையும் ஆளும் வர்க்கத்தைச் சார்த்திருக்கும் நாடாளுமன்றத் தலைமைகளையும் கூட்டு ஒப்பந்த நேரத்தில் மாத்திரம் விமர்சித்து விட்டு பின்னர் தேர்தலில் அவர்களை ஆதரித்து பின்னர் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தின் போது விமர்சிக்கும் போக்கை மாற்றி தொழிலாளர் வர்க்க உணர்வுடன் மாற்று பாதையை பற்றி சிந்திக்க வேண்டும்.

அவ்வாறு மக்கள் செயற்படாவிட்டால் தோட்டத் தொழிலாளர்களின் வஞ்சிக்கப்பட்ட வரலாறு தொடர்வதையும் பெருந்தோட்டத் தொழிற்துறை அழிவடைவதையும் மலையகத் தேசிய இனத்தின் இருப்பு தகர்க்கப்படுவதையும் தடுக்க முடியாது போய்விடும் என்பதை வலியுத்துகின்றோம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X