2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'வெகுவிரைவில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 23 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்

“சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். இதனை நான், இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன்” என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 08 ஆவது கிளையை சாய்ந்தமருதில், வெள்ளிக்கிழமை (21) இரவு திறந்து வைத்த பின்னர், அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில், அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து உரையாற்றுகையில்,

“சாய்ந்தமருது மக்களின் நீண்டகாலக் கோரிக்கை, இனி நிறைவேறப் போகின்றது. இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சகோதரர் ஜெமீல் ஆகியோர் என்னிடம் நீண்டகாலம் வலியுறுத்தி வந்ததன் பிரதிபலன் இப்போது உங்களுக்குக் கிடைத்துவிட்டது.

இந்தப் பிரதேசத்துக்கு தனியான நகரசபை ஒன்று வேண்டுமென என்னிடம் வேறுசில அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்தபோதும், அவர்கள் இதயசுத்தியுடன் இந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

வெறுமனே, புகைப்படங்களுக்காகவும் பத்திரிகை விளம்பரங்களுக்காகவுமே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனால், அமைச்சர் ரிஷாட்தைப் பொறுத்த வரையில் உங்களின் பிரச்சனைகளை இனங்கண்டு, இதயசுத்தியோடு இந்த முயற்சியில் இறங்கினார் என்பதை பகிரங்கமாகக் கூறுகின்றேன்.

மர்ஹூம் அஷ்ரப் மறைந்த பின்னர் முஸ்லிம் சமூகத்தின் பற்றுமிக்க தலைவனாக அவரை நான் இனங்கண்டுள்ளேன்.

கிரேன்ட்பாஸிலும, பேருவளையிலும், முஸ்லிம்களின் மீதும் பள்ளிகளின் மீதும் கொடூரங்கள் இழைக்கப்பட்டபோது, நானும், அமைச்சர் ரிஷாட்டும் மட்டுமே மக்களோடு மக்காளாக களத்தில் நின்று துணிந்து போராடினோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .