2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பனைசார் உற்பத்திகளுக்கு சந்தைப்படுத்தல் அவசியம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நாம் எல்லோரும் ஒன்றாகச் செயற்பட்டு, எமது நாட்டின் சொத்தான பனைசார் உற்பத்திகளைச் சந்தைப்படுத்த வேண்டும். உற்பத்தி யாழ்ப்பாணமாக இருந்தாலும் அதிக சந்தை வாய்ப்பு கொழும்பிலேயே காணப்படுகின்றது. ஆகவே, சந்தைப்படுத்தல் முயற்சிகளை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டுமென சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.

'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெறும் பனை சார் உற்பத்திகள் மற்றும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு, நேற்றுச் சனிக்கிழமை (22) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்று போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பனைசார் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்காக 160 மில்லியன் ரூபாவும் திக்கம் வடிசாலையின் புனரமைப்பிற்காக 100 மில்லியன் ரூபாவும் 2016ஆம் ஆண்டிற்கென அமைச்சினால்  ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை தீர்மானிக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்குப் பயன்படுத்தவேண்டும். இச் செயற்றிட்டங்கள் யாவும் பனைசார் உற்பத்தியாளர்கள் நுகர்வோர் பனை ஆராய்ச்சியாளர்கள் என்பவர்களுடன் கலந்துரையாடி பத்து கருத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் திக்கம் வடிசாலை புனரமைப்பு சீவல் தொழிலாளிகளுக்குக் கொடுப்பனவுகள் பனைசார் உற்பத்திகளுக்கான நவீன இயந்திரங்கள் கொள்வனவு பனைசார் உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகள் கைப்பணிக் கிராமங்களை உருவாக்குதல் போன்ற கருத்திட்டங்களுக்குக் குறித்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நிதியினை நாம் தீர்மானித்துள்ள கருத்திட்டங்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் முற்றாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் குறித்த நிதியானது எமது அமைச்சின் ஏனைய செயற்பாடுகளான சுயதொழில் வேலை வாய்ப்பு வீடமைப்புத் திட்டம்புனரமைப்பு பணிகளுக்கு மாற்று நிதியாக கொடுக்க நேரிடும். இதுவரை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 460 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஆறு மாத கால பனைசார் கைப்பணிப் பொருள், உற்பத்திப் பயிற்சி நெறி வழங்கப்பட்டு அவர்களின் உற்பத்திகளை சிவில் சுவடுகள் கட்டமைப்பின் மூலம் வழிநடத்தப்பட்டு சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே, நாம் எல்லோரும் ஒன்றாகச் செயற்பட்டு எமது நாட்டின் சொத்தான பனைசார் உற்பத்திகளை சந்தைப்படுத்த வேண்டும். உற்பத்தி யாழ்ப்பாணமாக இருந்தாலும் அதிக சந்தை வாய்ப்பு கொழும்பிலேயே காணப்படுகின்றது. ஆகவே, சந்தைப்படுத்ததல் முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். நாம் முன்னெடுத்துள்ள குறித்த கருத்திட்டத்தினை குழுக்களாக ஒன்றிணைந்து செயற்பட்டு பனைசார் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .