2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழகத்தில் நடப்பது ‘இடைத் தேர்தலா’, ‘எடைத் தேர்தலா’?

Thipaan   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அப்பலோ மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரவாக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இந்த இடைத் தேர்தல் தமிழக அரசியலில் மீண்டுமொரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது. இந்த மூன்று இடைத் தேர்தல்களில் ‘வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா’ செய்யப்பட்டதற்காக அரவாக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் இரத்துச் செய்யப்பட்டுப் புதிதாக இடைத் தேர்தல் வருகிறது. ஆனால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சீனி இறந்ததால், இடைத் தேர்தல் வந்திருக்கிறது. 

சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இரு சட்டப் பேரவைத் தேர்தல்களை- அதுவும் பொதுத் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது அரவாக்குறிச்சியும் தஞ்சாவூரும்தான். அரவாக்குறிச்சியில்
 அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்த நேரத்தில் அ.தி.மு.க உறுப்பினர் அன்புநாதன் என்பவரது வீட்டிலிருந்து 4.77 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் கைப்பற்றினார்கள். அவர் வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த சேலைகள், வேட்டிகள் கைப்பற்றப்பட்டன. இந்த வேஷ்டி, சேலை வாங்கிய 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேல் போலி ஆம்புலன்ஸ், பணம் எண்ணும் இயந்திரம் எல்லாம் அவர் வீட்டிலிருந்து கைப்பற்றியது வருமான வரித்துறை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க நடைபெற்ற இந்த முயற்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தை திகிலடைய வைத்தது. 

அ.தி.மு.கவிற்கு போட்டியாக தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட கே.சி. பழனிச்சாமி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரிடமிருந்து 1.98 கோடி ரூபாயும் அதில் குறிப்பாக 95 லட்சம் ரூபாயை பழனிச்சாமி வீட்டிலிருந்தே கைப்பற்றியது வருமான வரித்துறை. இப்படி மொத்தம் அரவாக்குறிச்சி தொகுதியில் மட்டும் 8.43 கோடி ரூபாய் பணமும் பொருளுமாக கைப்பற்றப்பட்டதால் நேர்மையான தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கருதியது. 

இதேபோல் தஞ்சாவூர் தொகுதியில் அதி.மு.க சார்பில் ரங்கசாமி என்பவர் போட்டியிட்டார். இத்தொகுதியில் அ.தி.மு.கவினருக்கு வேண்டிய விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் சுமார் 21 லட்சம் தேர்தல் பறக்கும் படையால் கைப்பற்றப்பட்டது. இதுதவிர, அதே விடுதியில் வட்டார வாரியாக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 500 ரூபாய் வழங்கும் பட்டியல் அடங்கிய ‘நோட்’ புத்தகம் ஒன்றையும் பறக்கும் படை கைப்பற்றியது. அந்தப் புத்தகத்தில் 13 வட்டாரங்களுக்கு ஒரு வாக்காளருக்கு 500 ரூபாய் வீதம் வழங்குவதற்கான குறிப்புகள் இருந்ததைக் கண்டுபிடித்தது. அதனடிப்படையில் 13 வட்டாரங்களுக்கும் 1.40 கோடி ரூபாய் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகப் பறக்கும் படை கணக்கிட்டது.

இந்தத் தஞ்சாவூர் தொகுதியில் மொத்தம் 51 வட்டாரங்கள் உள்ளன. 13 வட்டாரங்களுக்கு 1.40 கோடி ரூபாய் என்றால் 51 வட்டாரங்களுக்கும் ஆறு கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டதாகப் பறக்கும் படை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியது. இப்படி இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம், கைப்பற்றப்பட்ட மதுப்போத்தல்கள் எல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்தை உலுக்கி விட்டது.

அதனால் முதலில் மே 16 ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்தலை மே 23 ஆம் திகதிக்கு தள்ளி வைத்தது. பிறகு அதை மேலும் மூன்று வாரங்களுக்குத் தள்ளி வைத்தது. இறுதியில், ‘இப்போது தேர்தல் நடத்தும் சூழல் அங்கு இல்லை’ என்று கூறி இரு தொகுதிகளிலும் நடைபெறுவதாக இருந்த தேர்தல் இரத்து செய்யப்பட்டது. 

அப்படி இரத்து செய்யப்பட்ட தேர்தல்தான் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மூன்றாவது தொகுதியாக திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலும் சேர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் சட்டப்படி ஆறு மாதத்துக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும். இனியும் இந்தத் தேர்தல்களைத் தள்ளி வைக்க வாய்ப்பில்லை என்பதால் தேர்தல் ஆணையம் ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என்று கூறியிருக்கிறது. வாக்குப்பதிவு நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறுகிறது. தீபாவளிப் பரபரப்பிற்குப் பிறகு இந்த இடைத் தேர்தல் பரபரப்பு தமிழகத்தை தொற்றிக் கொள்ளும். 

இடைத் தேர்தல்களில் 1980 மற்றும் 1990 களில் ஆளும்கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சி வெற்றி பெற்ற சம்பவங்கள் நடைபெற்றது உண்டு. அண்ணாநகர் இடைத் தேர்தல், மருங்காபுரி, மதுரை மேற்கு இடைத் தேர்தல் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், 2000 ஆம் ஆண்டு இடைத் தேர்தல் வரலாற்றில் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் புதிய சகாப்தம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிதான் இடைத் தேர்தல்களில் வெற்றி பெறும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது. பொதுத் தேர்தலிலேயே தன் அதிகாரத்தை முழுமையாகக் காட்ட முடியாமல் தவிக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம், இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியின் வெற்றி என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபு என்பது போல் செயல்படத் தொடங்கி விட்டது.

ஆளும்கட்சியாக இருக்கும் கட்சி ஓர் இடைத் தேர்தல் தொகுதியில் தனது மாநில நிர்வாகிகள் அனைவரையும் அமைச்சர்கள் எல்லோரையும் அனுப்பி, முழு அளவில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து, வெற்றி பெற்று விடும் சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது. 2001 முதல் 2006 வரை நடைபெற்ற இடைத் தேர்தல்கள் (அ.தி.மு.க ஆட்சி) 2006 முதல் 2011 வரை நடைபெற்ற இடைத் தேர்தல்கள் (தி.மு.க ஆட்சி), 2011 முதல் 2016 வரை நடைபெற்ற இடைத் தேர்தல்கள் (அ.தி.மு.க ஆட்சி) இவ்வாறு எல்லா  இடைத் தேர்தல்களுமே இப்படித்தான் ஆளுங்கட்சிக்கு வெற்றித் தொகுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. 

2001இல் ‘கும்மிடிப்பூண்டி பர்முலா, 2006 இல் ‘திருமங்கலம் பார்முலா’ 2011 இல் ‘திருவரங்கம் பர்முலா’ என்று வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பர்முலாக்களை அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளுமே உருவாக்கின.

அரசியல் வட்டாரத்தில் ‘இடைத் தேர்தலை’ ‘எடைத் தேர்தல்’ என்று கூறுவார்கள். ஏனென்றால் ஆட்சி செய்யும் கட்சி மீது மக்களுக்கு திருப்தியா? அதிருப்தியா? என்பதை அறியப் பயன்படும் தேர்தல். ஆனால், 2001க்குப் பிறகு இந்த நிலை அடியோடு மாறி விட்டது. ஆளுங்கட்சி மட்டுமே இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது நிலைத்து விட்டது. அதனால் இன்றைக்கு முதலமைச்சர் மருத்துமனையில் இருக்கிறார். அவரது இலாகாக்களை பொறுப்பு முதலமைச்சர் போல் ஓ. பன்னீர் செல்வம் பார்க்கிறார்.

மாநிலத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது என்று எதிர்கட்சிகள் எல்லாம் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இதன் தாக்கம் எதுவுமே இல்லாமல் இந்த மூன்று இடைத் தேர்தல்களும் நடந்து முடியப் போகின்றன. முதல்வர் ஜெயலலிதா மருத்துமனையில் இருப்பதால் அ.தி.மு.கவிற்கு பலவீனமும் வரப்போவதில்லை. தி.மு.க 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்கட்சியாக இருப்பதால் பலமும் கிட்டப் போவதில்லை. வைகோ உள்ளிட்டோர் தலைமையில் உள்ள மக்கள் நலக்கூட்டணி வேட்பாளரைக் களம் இறக்கவே தயங்குகிறது. தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் வேட்பாளரைக் களம் இறக்குவாரா என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கிறது. தேசிய கட்சிகளில் காங்கிரஸ், தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவு என்று அறிவித்து விட்டது. ஆனால், பா.ஜ.க மட்டும் மூன்று தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று மாநிலத் தலைவர்கள் கருதுகிறார்கள். மத்திய தலைமை இதற்குப் பச்சைக் கொடி காட்டுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

ஆகவே, இடைத் தேர்தல் ‘எடைத் தேர்தலாக’ மாற வேண்டும் என்றால் அது முழுக்க முழுக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கையில்த்தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டது போல் இடைத் தேர்தல்களிலும் செயல்படாமல் தடுக்க வேண்டும். 234 சட்டமன்றத் தேர்தல்களில் நேர்மையான தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் போராட நேர்ந்திருக்கலாம். ஆனால், மூன்றே தொகுதிகளில் தேர்தல் ஆணையத்திற்கு அப்படியொரு போராட்டம் இருக்காது. அப்படித் தேர்தல் ஆணையம் செயல்படுமா என்ற கேள்விக்குறி தொடக்கத்திலேயே வந்து விட்டது. பணம் விநியோகம் செய்ததற்காக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் முன்பு இரத்து செய்யப்பட்டது.

ஆனால், அப்போது போட்டியிட்ட அதே வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவே முதல் சறுக்கல்! கூட்டணிகளோ, அரசியல் கட்சியின் பலமோ தேர்தல் முடிவை நிர்ணயிப்பதை விட ‘பண விநியோகம்’ இடைத் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சிகள் முதல் காரணம்; வாக்காளர்கள் அடுத்த காரணம்; இதை வேடிக்கை பார்க்கும் இந்திய தேர்தல் ஆணையமும் மூன்றாவது காரணம்! ‘சுதந்திரமான, நேர்மையான தேர்தல்’ என்பது இடைத் தேர்தல் வரலாற்றுப் பதிவேடுகளில் தமிழகத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது உள்ளபடியே ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள கரும்புள்ளி!   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .