2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய ஒ.நா.ச.போ தொடர்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலிய அணிகள், தென்னாபிரிக்காவில் மோதிய ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தொடரில், உலக சம்பியன்களை வெள்ளையடிப்புச் செய்து தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

அண்மைக்காலங்களில், அவுஸ்திரேலியா அணி பெற்ற மிக மோசமான தோல்வியாக இந்த தொடர் தோல்வியை கூறலாம். அத்துடன் அவுஸ்திரேலிய அணியின் முதலிடத்தை, தென்னாபிரிக்கா அணி ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது, அசைக்க முடியாத முதலிடத்தில் இருந்த அவுஸ்திரேலிய அணி, ஆறு புள்ளிகளை  இழந்து 118 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளது. நான்காமிடத்திலிருந்த தென்னாபிரிக்கா அணி 116 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

10  வருடங்களுக்கு பின்னர், அவுஸ்திரேலிய அணி வெள்ளையடிப்பு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு முன்னர், நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் அடங்கிய தொடரில் இந்தத் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடனான 3 போட்டிகள் அடங்கிய தொடரில் வெள்ளையடிப்பு த்தோல்வியை அவுஸ்திரேலியா அணி சந்தித்துள்ளது. இந்த இரு தொடர்கள் மாத்திரமே அவுஸ்திரேலியா அணி சந்தித்த வெள்ளையடிப்பு தொடர் தோல்விகளாகும். 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான 5 போட்டிகள் அடங்கிய தொடரில், 4-0 என்ற தோல்வியை அவுஸ்திரேலியா அணி சந்தித்தமையே அண்மைக்காலத்தில் அவுஸ்திரேலியா அணி சந்தித்த மிக மோசமான தொடர் தோல்வியாகும். முதற் தடவையாக 3 போட்டிகளுக்கு மேலான தொடரில் வெள்ளையடிப்பு தோல்வியைச் சந்தித்துளளது.

அவுஸ்திரேலிய அணியின் அனுபவமற்ற மோசமான பந்துவீச்சு இந்த தொடர் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. அத்துடன் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியான ஓட்டங்களை வீரர்கள் பெறாமையும் முக்கிய காரணமாகும். தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சில் அனுபவமான வீரர்களுடன் இளைய வீரர்களையும் இணைத்து சிறப்பாக  பந்துவீசி, பலமான அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்ட வரிசையை ஆட்டம் காண வைத்தது. இரு அணிகளுக்குமான துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டமே பலமானது என கூறலாம். தென்னாபிரிக்கா அணியின் தலைவர் வில்லியர்ஸ் இல்லாமல் இந்த தொடரை தென்னாபிரிக்கா அணி பெற்றுள்ளமையே மிக முக்கியமான விடயம். பொதுவாக தொடர்களில் வில்லியர்ஸின் தலைமைத்துவம், துடுப்பாட்டம் மிக முக்கிய இடம் வகித்துள்ளன.

தென்னாபிரிக்கா அணி சார்பாக  ரீலி றொஸோ, இந்தத் தொடரில் கலக்கியுள்ளார். தொடர் நாயகன் விருதையும் கைப்பற்றிக் கொண்டார். ஹஷிம் அம்லாவுக்காக அணியில் இணைக்கப்பட்டவர் இவர். முதலிரு போட்டிகளிலும் நல்ல முறையில் ஓட்டங்களை பெற்றமையினால் ஹஷிம் அம்லா அணிக்குள் வந்ததும் மத்திய வரிசைக்கு மாற்றப்பட்டார். சதத்துடன் தொடரை நிறைவு செய்தார். குயின்டன் டி கொக், வழமையான அதிரடி ஆரம்பத்தை சிறப்பாக வழங்கினார்.

தலைமைப் பொறுப்பை ஏற்ற பப் டு பிளெசிஸ், மூன்றாமிடத்தில் சிறப்பாகவே ஓட்டங்களை குவித்தார். வழமையான அவுஸ்திரேலிய அணியின் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சு இல்லாமையினால், தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசையை தகர்க்க முடியவில்லை. முன் வரிசைத் துடுப்பாட்ட வீரர்களே அணிக்கு தேவையான ஓட்டங்களை குவித்து விட்டனர். டுமினியும் மத்திய வரிசையில் தேவையான ஓட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளார். ஆக தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர். மூன்றாவது போட்டியில் முன் வரிசை வீரர்கள் தடுமாறி ஆட்டமிழக்க மீண்டும் அணியில் இடம் பிடித்த டேவிட் மில்லர் சதமடித்து தனது மீள் வருகையை ஏற்படுத்தி அணியில் இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். 

பந்துவீச்சில் புதிய வீரர் அன்டிலி பெக்லுவாயோ சிறப்பான அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார். அயர்லாந்து அணியுடன் அறிமுகமானாலும், இந்த தொடரே முக்கியமான அறிமுகம் என கூறலாம். தொடரில் கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றியவர் இவரே. இவர் சகலதுறை வீரர் என்றே கூறலாம். துடுப்பாட்டத்தில் ஓட்டங்களை பெறக்கூடியவர். கிடைத்த வாய்ப்பில் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து தனது துடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தி எதிர்கால நம்பிக்கை வீரராக அணியில் இடத்தை பிடிப்பார்.

இறுதி இரு போட்டிகளிலும் விளையாடிய கைல் அபொட் நம்பிக்கை தரும் விதமாக பந்து வீசினார். டேல் ஸ்டைன் ஓய்வில் இருந்து மீண்டு வந்தும் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. கஜிஸ்கோ  ரபடா நம்பிக்கை தரும் விதமாக பந்து வீசவில்லை. சுழற்பந்துவீச்சில் இம்ரான் தாஹீர் சிறப்பாக பந்துவீசியுளார். தனக்கு கிடைத்த ஒரு போட்டி வாய்ப்பில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, தப்ரையாஸ் ஷம்ஷி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். வெய்ன் பார்னல் முதற் போட்டியில் விளையாடி, இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதும் உபாதை காரணமாக மீதமிருந்த போட்டிகளில் வாய்ப்பை இழந்துள்ளார். மீள் வருகை இவருக்கு கடினமாகவும் அமையலாம்.

பர்ஹான் பெஹார்டீன் , முதலிரு போட்டிகளிலும் சேர்க்கப்பட்டார். சரியாக பிரகாசிக்கவில்லை. பின்னர் மில்லரின் உபாதையினால் நான்காவது போட்டியில் சேர்க்கப்பட்டார். இவருக்கு அணியில் நிரந்தர இடம் கடினம். குழுவில் இடம்பிடித்து மேலதிக வீரராக அணியில் இருப்பார்.

இந்தத் தொடர் தென்னாபிரிக்கா அணிக்கான சிறப்பான ஒரு தொடராக அமைந்துள்ளது. இனி ஒரு சுவாரசியம். தலைவர் வில்லியர்ஸ் வர யார் அணியிலிருந்து விலகுவது? கட்டாயமாக ஒரு வெள்ளையின வீரராக இருக்க வேண்டும். ரீலி றொஸோ  அல்லது டேவிட் மில்லரே அணியில் இருந்து விலகவேண்டும். புதிய அணித் தெரிவு சிக்கல்களை தந்தாலும் அதற்குள்ளாலும் வெற்றிகளை குவிக்க முடியும் என தென்னாபிரிக்கா அணி நிரூபித்துள்ளது. சிலவேளைகளில் இந்த முறைமை இன்னமும் முன்னேற்றங்களை தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்த முறைமையின் மூலம் நல்ல வீரர்களையும் அல்லது நல்ல முறையில் ஒரு தொடரில் பிரகாசிப்பவர்களை கூட அடுத்த தொடரில் நிறுத்த வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.  அடுத்த தொடரின் அணித்தெரிவு அல்லது  விளையாடும் வீரர்களின் தெரிவில் இது தெரிய வரும்.  ஒருவருக்காக இன்னுமொருவர் அணியில் இடத்தை இழக்க வேண்டி கூட ஏற்படலாம். உதாரணமாக ஒரு கறுப்பின பந்துவீச்சாளர் சிறப்பாக பந்து வீசவில்லை. அவருக்கு பதிலாக இன்னுமொரு வெள்ளையின பந்து வீச்சாளரையே அணியில் இணைக்க வேண்டுமெனில், ஒரு வெள்ளையின துடுப்பாட்ட வீரர் அணியில் இடத்தை இழப்பார். வேடிக்கையான விடயமாக இது அமைந்துள்ளது. கைல் அபொட்டுக்கு உண்மையில் இதுவே நடந்தது. இல்லாவிட்டால் இவர் முதற் போட்டியிலிருந்து விளையாடியிருக்க முடியும். பெக்லுவாயோ விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்க மாடடார்.  

அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டத்தில், டேவிட் வோணர், மிக ச்சிறப்பாக தொடர்ச்சியாக ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். தொடரில் கூடுதல் ஓட்டங்களை பெற்றவரும் அவரே. மூன்றாவது போட்டியைத் தவிர மற்ற எந்தப்போட்டியிலும் சிறப்பான இணைப்பாட்டம் அவருக்கு அமையவில்லை. அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஒரு சதம் மட்டுமே அடித்தார். வேறு எதனையும் பெரிதாகச் செய்ய முடியவில்லை.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ஞ் ஒரு அரைச்சத்தை மட்டுமே பெற்றுக்கொடுத்தார். நான்காமிலக்க வீரர் ஜோர்ஜ் பெய்லி ஒரு அரைச் சதம் மட்டும்.  மிற்செல் மார்ஷ், ஒரு அரைச்சத்தை மட்டுமே பெற்றார்.  ட்ரெவிஸ் ஹெட், ஏன் ஐந்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார் என்பதே பெரும் ஆச்சரியம். துடுப்பாட்டம் இவ்வளவு மோசமாக அமைந்தும் உஸ்மான் கவாஜாவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் இன்னொரு பக்கம் கேள்வியாகவுள்ளது. அயர்லாந்து போட்டியில் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்றும் கொடுத்துள்ளார். ஆக இந்த தொடர் தோல்விக்கு பந்துவீச்சு மட்டுமல்ல துப்பாட்டமும் கூட முக்கிய காரணம் என கூற முடிகின்றது.

பந்து வீச்சு எந்தளவு மோசமாக அமைந்தது என்பது தென்னாபிரிக்க வீரர்களின் ஓட்ட எண்ணிக்கைகளும் அணியின் ஓட்ட எண்ணிக்கையும் நிரூபித்துள்ளது.   இரண்டாவது போட்டியில் அறிமுகத்தை மேற்கொண்ட கிறிஸ் றிமெய்ன், தொடரில் அவுஸ்திரேலியா அணி சார்பாக அதிக விக்கெட்களை கைப்பற்றியவர். ஸ்கொட் போலண்ட், ஜோன் ஹேஸ்டிங்ஸ் ஆகியோரை நம்பியே அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்காபுரியில் வேகப்பந்து வீச்சுக்கு தட்டுப்பாடா என்ற நிலை அவுஸ்திரேலியா அணிக்கு உருவாகியுள்ளது. விளையாடிய எவருமே பெரிதாக சாதிக்கவில்லை.  ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் கைவிட்டது அவுஸ்திரேலியா அணிக்கு பெரிய அடியாக மாறிப்போனது.

சுழற்பந்துவீச்சில் அடம் ஸாம்பாவை நம்பிக் களமிறங்கி, ஐந்து போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் பெரியளவில் எதனையும் செய்யவில்லை. ஆக பந்துவீச்சு முழுக்க முழுக்க ஏமாற்ற வேற வழியில்லாமல் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடர் தோல்வியை சந்தித்தது அவுஸ்திரேலியா அணி. 

 

 

டேவிட் வோணர்       5              5              0              386         173         77.20     340         113.52   2              1

றீலி றொஸோ           5              5              1              311         122         77.75     310         100.32   1              2             

குயின்டன் டி கொக்   5              5              0              300         178         60.00     218         137.61   1              1             

பப் டு பிளெசிஸ்         5             5              0              250         111         50.00     265         94.33     1              1             

ஜீன் போல் டுமினி     5              5              0              209         82           41.80     212         98.58     0              2             

டேவிட் மில்லர்         4              4              2              193         118*      96.50     135         142.96   1              0             

ஸ்டீவ\ன் ஸ்மித்       5              5              0              151         108         30.20     168         89.88     1              0             

ட்ரெஸ் ஹெட்          5              5              0              139         51           27.80     126         110.31   0              1             

மிற்செல் மார்ஷ்      5              5              0              137         50           27.40     162         84.56     0              1             

ஜோர்ஜ் பெய்லி        5              5              0              114         74           22.80     140         81.42     0              1             

மத்தியூ வேட்            5              5              1              114         52           28.50     116         98.27     0              1             

ஆரோன் பின்ஞ்       5              5              0              108         53           21.60     110         98.18     0              1             

(போட்டிகள், இன்னிங்ஸ், ஆட்டமிழக்காமை, ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, எதிர்கொண்ட பந்துகள் ஸ்ட்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)

 

 

அன்டிலி பெக்லுவாயோ          5              5              38.4        3              240         8              4/44       30.00     6.20       

கிறிஸ் ட்ரெமைன்                    4              4              40.0        0              255         7              3/64       36.42     6.37       

கைல் அபொட்                          2              2              18.0        1              88           6              4/40       14.66     4.88       

இம்ரான் தாஹீர்                       4              4              37.0        2              173         6              2/42       28.83     4.67       

ஸ்கொட் போலண்ட்                3              3              27.0        2              171         5              3/67       34.20     6.33       

ஜோன் ஹேஸ்டிங்ஸ்             4              4              31.0        0              215         5              3/57       43.00     6.93       

டேல் ஸ்டைன்                        4              4              36.2        0              254         5              2/65       50.80     6.99       

கஜிஸ்கோ ரபாடா                   4              4              36.0        0              264         5              2/31       52.80     7.33       

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .