2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஹிலாரிக்கு மீண்டுமொரு சர்ச்சை

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 25 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பாலான சர்ச்சைகள், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பாகவே காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக, ஹிலாரி கிளின்டன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இரண்டாவது சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.

ஹிலாரி கிளின்டனின் பிரசாரத்துக்கு உதவிவந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செயற்பாட்டாளரொருவர், ட்ரம்ப்பின் பிரசாரத்தில் வன்முறையைத் தூண்டுவதற்குத் திட்டமிடுவது போன்ற காணொளி வெளியாகி, பிரசார நடவடிக்கைகளிலிருந்து அவர் ஒதுங்கியுள்ளமையே, தற்போதைய சர்ச்சையாகும்.

இலினொய்ஸ் மாநில ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜான் ஷ்கொவ்ஸியின் கணவரும் ஜனநாயகக் கட்சி செயற்பாட்டாளருமான றொபேர்ட் கிறீமர் என்பவரே, இச்சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குடியரசுக் கட்சியின் செயற்பாட்டாளர் ஜேம்ஸ் ஓஃப் கீ வெளியிட்ட காணொளியில், ட்ரம்ப்பின் பிரசாரக் கூட்டங்களில் வன்முறையை ஏற்படத்துவது சுலபம் எனவும், ட்ரம்ப் எதிர்க்கும் சுகாதார சேவை நிறுவனமான பிளான்ட் பேரன்ஹூட் நிறுவனத்தின் ரீ-சேட்டை அணிந்திருந்தால் அல்லது "ட்ரம்ப் ஒரு நாஸி" எனத் தெரிவித்தால், உங்களை அவர்கள் முகத்தில் குத்துவார்கள் என அவர் தெரிவிப்பது போன்று, அக்காணொளியில் காட்டப்படுகிறது.

இதை வெளியிட்ட ஜேம்ஸ் ஓஃப் கீ, சர்ச்சையான முறையில் காணொளிகளைத் தொகுத்து, தவறான அர்த்தங்களைத் தரும் வகையில் அவற்றை வெளியிடுவதில் பெயர் போனவர். ஆகவே, வெளியாகியுள்ள காணொளியின் உண்மைத்தன்மை குறித்து, இதுவரையிலும் உறுதியாகவில்லை.

ஆனால், ஹிலாரி கிளின்டனை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தல் என்ற நோக்கத்துக்கு, தனது சர்ச்சை, இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்பதால், பிரசாரப் பணிகளிலிருந்து விலகுவதாக, றொபேர்ட் கிறீமர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .