2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கடற்படையால் கைது செய்யப்பட்டு மீனவர்கள் விடுதலை

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள், கடற்தொழிலுக்குச் செல்லும் நிலையில், தொடர்ச்சியாக கடற்படையினரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், கடலில் இருந்து கரை திரும்பும் வரை அச்சத்தின் மத்தியிலேயே இருப்பதாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், வழமை போல்  புதன்கிழமை(26) காலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முத்தரிப்புத்துறை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை கடலில் வைத்து சோதனையிட்டதோடு, படகுகளின் ஆவணங்களையும் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, முத்தரிப்புத்துறை மீனவர்களின் 7 படகுகளையும் குறித்த படகில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களையும் கைதுசெய்த கடற்படையினர், முத்தரிப்புத்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், படகுகள் மற்றும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ததோடு, ஒரு மீனவரை தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்துள்ளனர்.

இதனால், முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் மத்தியில்  அச்ச நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அச்சப்படுவதாகவும் முத்தரிப்புத்துறை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு , முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் செல்ல முற்பட்ட ஒருவரை மக்கள் பிடித்து தாக்கிய போது,  தாக்குதலுக்கு இலக்கான கடற்படைச் சிப்பாய் என தெரியவந்த நிலையில், கடற்படையினருக்கும்,முத்தரிப்புத்துறை கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முத்தரிப்புத்துறை கிராம மக்கள் உள்ளனர்.

கடற்றொழிலுக்குச்  செல்லும் குறித்த கிராம மீனவர்கள்  மீது, கடற்படையினர் தொடர்ந்தும் கெடுடிபிடிகளை மேற்கொண்டு வருகின்றமை முத்தரிப்புத்துறை கிராம மீனவர்களின் குடும்பங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .