2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

71 மீனவர்கள் கைது: 13 படகுகள் பறிமுதல்

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை கடற்தொழிலில் ஈடுபட்டு வந்த  71 மீனவர்களை  சிலாவத்துறை  கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன், அவர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய 13 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள், கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இன்று வியாழக்கிழமை  காலை  7 மணியளவில்  குறித்த மீனவர்களின் படகுகளை கடற்படையினர், கடலில் வைத்து சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது, படகுக்கான   காப்புறுதி மற்றும் அடையாள அட்டை   ஆகியவற்றை  பரிசீலித்த கடற்படையினர், குறித்த ஆவணங்கள் இல்லாத மீனவர்களை கைது செய்துள்ளனர்.    

கைது செய்யப்பட்டவர்களில் சிலாவத்துறையைச் சேர்ந்த 7 மீனவர்களும், வங்காலையைச் சேர்ந்த 4 மீனவர்களும், நறுவிலிக்குளத்தைச் சேர்ந்த 60 மீனவர்களும் அடங்குவதாக தெரிய வந்துள்ளது.

சிலாபத்துறை மீனவர்களின் 3 படகுகளும், வங்காலை மீனவரின் 1 படகும், நறுவிலிக்குளம் மீனவர்களின் 9 படகுகளுமே கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மீனவர்களின் கைது தொடர்பாக, மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின்  பிரதிப் பணிப்பாளர் என் மெராண்டா விடம் கேட்ட போது, “கடற்படையினர் தன்னிச்சையாக செயற்பட்டு, மீனவர்களை கைது செய்கின்றனர். மீனவர்கள் கடற்தொழில் திணைக்களத்தின் சட்டத் திட்டங்களுக்கு அமைவாகவே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.

மேலும், “மீனவர்களின் காப்புறுதி ஆவணங்களை பரிசோதனை செய்வது கடற்படையினரின் வேலையில்லை. தொடர்ந்தும் கடற்படையினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக மீனவர்கள் எங்களிடம் முறையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள், எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை” என  அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .