2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாதீடு முன்னோடி

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், (பாதீடு) நாடாளுமன்றத்தில் நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதார நிலைமை, பொருளாதாரத்தின் எதிர்கால பயணம், எதிர்கால அபிலாசைகள் உள்ளிட்ட முன்னோடி உரையொன்றை, நேற்று வியாழக்கிழமை ஆற்றினார்.  

நாடாளுமன்றம் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், நேற்று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், விசேட கூற்றொன்றை விடுத்தே பிரதமர் உரையாற்றினார்.   

பொருளாதார ரீதியில் இலங்கை உயர்ந்து நிற்பதற்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும், பல்வேறு காரணங்களால் அவை எம்மை துரதிர்ஷ்டவசமாகக் கைவிட்டுச் சென்றிருந்தன. 1983ஆம் ஆண்டு கலவரம் மற்றும் அதற்குப் பின்னரான யுத்தத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், யுத்தத்துக்குப் பின்னரான சமாதான காலத்தில், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.   

பிரதமர் உரையாற்றுவதற்கு எழுந்தபோது, தனது ஆசனத்திலிருந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, “இது ஒத்திகையா?” எனக்கேட்டார். சிரித்துகொண்டே பதிலளித்த பிரதமர், “ஒத்திகையல்ல, முன்னோடி” என்று கூறிவிட்டு உரையைத் தொடர்ந்தார்.   

“மக்களின் வருமான மட்டங்களை கூடிய விரைவில் உயர்த்துவதே எமது இலக்காகும். எமக்கு அருகிலுள்ள தெற்காசிய நாடுகளின் வருமான மட்டங்களுடன் ஒப்பிடும் போது நாம் மட்டுமட்டளவில் நெருங்கியுள்ளோம். தற்போது தனிநபர் மொத்த தேசிய வருமானம் 4 ஆயிரம் அமெரிக்க டொலராக உள்ளது. அதை நாம் 8 ஆயிரம் அமெரிக்க டொலராக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.   

தற்போது எமது பொருளாதார வளர்ச்சி வேகம் வருடத்துக்கு 5 சதவீதமாக இருக்கிறது. இந்த வேகத்தில் சென்றால் தனிநபர் வருமானம் இரு மடங்காவதற்கு நாம் 2033 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிவரும். பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 சதவீதமாக பேணிக்கொள்ள முடிந்தால் தனிநபர் வருமானத்தை 2025 ஆம் ஆண்டாகும் போது இரு மடங்காக்கி கொள்ளலாம்.   

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தன் பின்னரே கடைசியாக எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 7 சதவீதமாக இருந்திருந்தது. எனினும், துரதிர்ஷ்டவசமாக சமாதானத்துடன் கிடைத்திருக்க வேண்டிய பொருளாதார பிரதிபலன்களை எம்மால் பெற முடியாமல் போயிருந்தது.   
நான், பிரதமராகப் பதவி வகித்த 2001 - 2004 காலப்பகுதியில் தான் இவ்வாறான சர்வதேச நிதி அனுசரனைகள் இறுதியாக இலங்கைக்குக் கிடைத்திருந்தன. அதற்கு பின்னர் இன்றே கிடைக்கின்றன.   

இதேநேரம், பிராந்தியத்திலுள்ள பல்வேறு நாடுகளுடனும் இலகுவாகத் தொடர்புகளைப் பேணும் நிமித்தம் சர்வதேச விமான நிலையம் மற்றும் 3 துறைமுகங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் ஆரம்பித்துள்ளோம்.   

மூலதனக் கொடுப்பனவு மற்றும் குறைவான வரி முறைமையொன்றை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பொன்றை நாம் அறிமுகப்படுத்தவுள்ளோம். இது தொடர்பான மேலதிக விவரங்கள், வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்படும்.  

அதேபோல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும். அது, சிங்கப்பூர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குவிதிகள் சட்டத்துக்கும் மூலோபாயப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு சமப்படுத்தப்படக்கூடியதாக இருக்கும்.  

எமது நாடு தொடர்பில் ஆரோக்கியமான தோற்றப்பாடொன்றை ஏற்படுத்தியுள்ளோம். எமது அந்த முயற்சியின் பெறுபேறுகளை இப்போதே காணக்கூடியதாக இருக்கிறது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும் என்றார்.   

எமது ஏற்றுமதிகளுக்குப் புதிய சந்தைகளை உருவாக்கிக் கொள்ளும் நிமித்தம், மேலும் 3 வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் நாம் பேச்சுக்களை நடத்திவருகிறோம். இந்தியாவுடனான ஒப்பந்தமொன்றும் சீனா மற்றும் சிங்கப்பூருடனான தலா ஒரு, இருதரப்பு ஒப்பந்தங்களும் இவற்றில் அடங்கும்.   

துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்காக செலுத்த வேண்டியுள்ள நிலுவைக்கடன் தொகைகளை ஈடுசெய்வதற்கு எமக்குப் பலம் இருக்கிறது. ஆகையால், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையக் கடன்களை எமது பிள்ளைகளின் மீது சுமத்தமாட்டோம் என்று உறுதியளிக்க முடியும். அதேபோன்று, ஹம்பாந்தோட்டையை சர்வதேச விமான மற்றும் கப்பற்துறை சேவை கேந்திரநிலையமாக உருவாகுக்கும் பயனும் எமக்கு கிடைக்கும்.   

நகரங்கள் மற்றும் அதன் சுற்றுபுறங்களிலுள்ள மத்திய வகுப்புக் குடும்பங்களுக்கு 5 இலட்சம் வீடுகளையும் நகரங்களில் இருக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு 65 ஆயிரம் வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு வாய்ப்பேற்படுத்துவதே எமது திட்டமாகும். அதற்குச் சமாந்தரமாக யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்ளுக்கு 65 ஆயிரம் வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்போம். தோட்ட பகுதிகளில் வீடுகளுக்கான தேவைகளில் 65 சதவீதத்தை 2020ஆம் ஆண்டாகும் போது பூர்த்தி செய்வதே எமது இலக்காகும்.  

13 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியை பெற்றுக்கொள்வதை நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் கட்டாயப்படுத்தும் புதிய கொள்கையொன்றை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். அடுத்த வருடம் இதன் முதன்மை திட்டத்தை நாம் ஆரம்பிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .