2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊவா மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கு 'ஆசிரியர்களை நியமிக்கவும்'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

“பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி உள்ளிட்ட ஒரு சில தமிழ் பாடசாலைகளிலாவது, கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்” என ஊவா மாகாண சபையின் உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண குறிப்பிட்டார்.  

“குறிப்பிட்ட பாடங்களைக் கற்பிப்பதற்கு, எமது மாகாணத்தில் போதிய ஆசிரியர்கள் இல்லாவிடின், ஏனைய மாகாணங்களிலிருந்தாயினும் ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பத்திரிகைகள் மூலமாக விளம்பரப்படுத்தியாயினும் ஆசிரியர்களை வரவழைக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.  

ஊவா மாகாண சபையின் அமர்வு, நேற்று வியாழக்கிழமை சபை மண்டபத்தில், சபைத்தலைவர் ஏ.எம்.புத்ததாச தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  
இங்கு தொடர்ந்துரைத்த அவர்,   

“ஊவா மாகாணத்தில் தமிழ்மொழிமூல பாடசாலைகளில், மேற்படி பாடப்பிரிவுகள் இல்லாததால், இம்மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, இப்பாடங்களில் கல்வியைத் தொடர்வதற்காக வெளிமாவட்டங்களுக்குச் செல்லும்  நிர்ப்பந்தத்துக்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர். இவ்வாறு நுவரெலியா மாவட்டத்துக்குச் சென்ற மாணவர்கள், அங்கு கல்வியைத் தொடர முடியாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வெளி மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களை நுவரெலியா மாவட்டத்தின் பாடசாலைகளில் அனுமதிப்பதில்லை என கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும்” என்றார்.  

ஊவா மாகாணத்தில் 205 தமிழ்ப் பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 83 பாடசாலைகள் க.பொ.த. சாதாரண தரங்களைக் கொண்டவையாகவும், 45 பாடசாலைகள் க.பொ.த. உயர்தரங்களைக் கொண்டவையாகவும் உள்ளன. கடந்த ஆண்டு 2,082 மாணவர்கள், க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியதுடன் அவர்களில் 1,306 பேர் உயர்தரத்துக்கு தெரிவாகியுள்ளனர்.   

பதுளை சரஸ்வதி தேசியக் கல்லூரியில் குறிப்பிட்ட பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தப்போதிலும், கல்வி மேம்பாடுகள் சிறப்பான முறையில் இருந்து வருகின்றது. எனவே, இதுபோன்ற பாடசாலைகளுக்கு மேலும் வளங்களைப் பெற்றுக்கொடுத்து, ஊக்குவிக்க வேண்டும். இதேவேளை, மேற்படி பாடங்களுக்குத் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் இதன்போது கோரினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X