சம்பியனானது சாவற்கட்டு கில்லரி வி.க
28-11-2016 09:14 AM
Comments - 0       Views - 23

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கினால், லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையேயான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின்   இறுதிப் போட்டி, ஜோசப்வாஸ் நகர ஆயர் இராயப்பு ஜோசப் மைதானத்தில் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது.

மன்னார் கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 37 கழகங்கள் கடந்த இரண்டு மாதங்களாக விலகல் முறையிலான தொடரில் ஆடி, இறுதிப் போட்டிக்கு மன்னார் பனங்கட்டுக்கொட்டு சென் ஜோசப் விளையாட்டுக் கழகமும், சாவற்கட்டு கில்லரி  விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.

இவ்விறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் தமது பலப்பரீட்சையைக் காட்ட முயன்றும் போட்டி தொடங்கி 10ஆவது நிமிடத்தில் கில்லரி அணியின் முன்களவீரர் தாசன்  தலையால் முட்டி பெற்ற கோலுடன் 1-0 என்ற கோல் கணக்கில் சாவற்கட்டு கில்லறி  விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக, வெற்றிக் கோலைப் பெற்ற கில்லரி  விளையாட்டுக் கழக வீரர் தாசன் தெரிவு செய்யப்பட்டார்.

முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டதோடு, இச்சுற்றுப்போட்டியில் சிறந்த கட்டுப்பாட்டுடன் வளர்ந்து வரும் சிறந்த அணியாக தெரிவு செய்யப்பட்ட காத்தாங்குளம் சென். ஜோசப் அணிக்கு பாராட்டுக் கிண்ணமும்  வழங்கப்பட்டது. 

இவ்விறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி குணசீலனும் சிறப்பு விருந்தினராக தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி யுட் குருஸும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மன்னார் கால்பந்தாட்ட லீக் தலைவர் டேவிட்சன் ஜெறாட் , செயலாளர் ஞானராஜ், பொருளாளர் கோல்டன் டெனி, உப தலைவர்களான பிறேம்குமார், சுகிர்தன், டிகோணி, உபசெயலாளர் சுவேந்திரன், உபபொருளாளர் றொணி மற்றும் ஜோசவ்வாஸ்நகர் யுனைற்றட் விளையாட்டுக்கழக அமைப்பாளர் கிங்ஸ்லி, கழக செயலாளர் டெலிஸ்டன் மற்றும் ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட இரசிகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

"சம்பியனானது சாவற்கட்டு கில்லரி வி.க " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty