2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'சிறந்ததொரு மாற்றம் ஏற்படும்'

Niroshini   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ்

“பெருந்தோட்ட சமுதாயத்தின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கைத் திட்டத்தை  உரிய வகையில் அமுல்படுத்தப்படுகின்றபோது, 2020ஆம் ஆண்டளவில் பெருந்தோட்ட சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும்” என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பெருந்தோட்ட சமுதாயத்தின் சமூக அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கைத் திட்டம் தொடர்பாக, டிக்கோயா வனராஜா பிரஜாசக்தி நிலையத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

“இந்த நாட்டில் வாழுகின்ற சமூகங்களில் மத்தியில் பெருந்தோட்ட சமூகம் சகலதுறைகளிலும் சுமார் 30 வருடம் பின்தங்கிய நிலையிலுள்ளது.

இந்த நிலைமையைத் துரிதமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அந்தவகையில், நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மலையக புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட சமுதாயத்தின் துரித அபிவிருத்தி கருதி பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெருந்தோட்ட சமுதாய அபிவிருத்தி தொடர்பாக தயாரிக்கப்பட்ட பத்தாண்டுத்திட்டம் பல வருடங்களாக கிடப்பில் கிடந்தது. இந்தத் திட்டத்தைத் துரிதமாக செயற்படுத்துவதற்கு ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள், புத்தி ஜுவிகள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்தத் திட்டத்துக்கு புத்துயிர் வழங்கியுள்ளனர்.

அமைச்சர் திகாம்பரம் தனது அமைச்சின் ஊடாக இந்தத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.

எமது மக்களின் நீண்டகால கனவான தனி வீட்டுத்திட்டம் தற்போது படிப்டியாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 2019 ஆம் வருடத்துக்குள் பெருந்தோட்டப்பகுதிகளில் 25000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அரச அங்கீகாரம் வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதியுதவியில் பெருந்தோட்ட மக்களுக்குத் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கான ஐந்தாண்டுத் திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதே போல உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தல், சிறுவர் முன்பள்ளிகள், சிறுவர் பாராமரிப்பு நிலையங்கள் பாடசாலை கட்டிடங்கள் என்பவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், இளைஞர் - யுவதிகளுக்கான சுயத்தொழில் பயிற்சிகள், சமுதாய விழிப்புணர்வு செயலமர்வுகள் என்பன நடத்தப்பட்டு வருகின்றன.  

இத்தகைய செயற்பாடுகளை முன்னின்று செயற்படுத்துவதற்கு முழுமூச்சாக செயற்படுகின்ற அமைச்சர் திகாம்பரத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X