2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானைப் புகழ்ந்தாராம் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 01 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுடன் தொலைபேசியில் உரையாடிய போது, அவரையும் பாகிஸ்தானையும் வெகுவாகப் புகழ்ந்ததாக, பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவிக்கிறது.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நேரத்தில் இந்த அழைப்பை, பிரதமர் ஷரீப் மேற்கொண்டுள்ளதாக, பாகிஸ்தானின் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அழைப்பில், ஊழல் குற்றச்சாட்டுகளிலும் ஏனைய சர்ச்சைகளிலும் சிக்கியுள்ள பிரதமர் ஷரீபை "மிகச்சிறந்த நன்மதிப்பு உடையவர்" எனவும் "அற்புதமான மனிதர்" எனவும் ட்ரம்ப் புகழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

"நீங்கள், அற்புதமான பணியை ஆற்றி வருகிறீர்கள், அது பார்க்கும் போது தெரிகிறது. உங்களை விரைவில் பார்ப்பதற்கு நான் எதிர்பார்க்கிறேன். நான் உங்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது, நீண்ட காலத்துக்குத் தெரிந்த ஒருவருடன் கதைப்பது போல் உணர்கிறேன்" என்றும் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானைப் பற்றி, இதற்கு முன்பு கடுமையான விமர்சனங்களை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில், "பாகிஸ்தான் எமது நட்பு நாடு அன்று" எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், பிரதமர் ஷரீபுடனான சந்திப்பில், "உங்களுடைய நாடு அற்புதமானது, ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டது. பாகிஸ்தானியர்கள், மிகவும் புத்தியசாலித்தனமான மக்கள். ஏற்கெனவே காணப்படும் பிரச்சினைத் தீர்ப்பதற்கு, நீங்கள் விரும்பும் பாத்திரத்தை ஏற்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப்புக்கும் பிரதமர் ஷரீபுக்கும் இடையில் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்திய ட்ரம்ப்பின் அதிகார மாற்றத்துக்குப் பொறுப்பாக உள்ள குழு, இருவருக்குமிடையில் பயன்மிக்க அழைப்பு இடம்பெற்றதாகக் குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .