‘இணைய உள்ளடக்கங்கள் மீதான தடையால் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆபத்து’
01-12-2016 09:29 AM
Comments - 0       Views - 23

இணையத்தில் தீவிரவாத உள்ளடக்கங்கள் பரவுவதை தடுக்க அரசாங்கங்கள் எதிர்பார்த்துள்ளமையானது, பேச்சுச் சுதந்திரத்துக்கும், தனியுரிமைகளுக்கும் ஆபத்து என, ஐக்கிய அமெரிக்காவின் சில பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய சர்வதேசக் குழுவொன்று நேற்றுப் புதன்கிழமை (30) வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சேவை நிபந்தனைகளை மாற்றுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் அழுத்தம் வழங்கக்கூடாது எனத் தெரிவித்துள்ள The Global Network Initiative எனும் மேற்கூறப்பட்ட சர்வதேசக் குழு, மக்களின் பாதுகாப்பு கரிசனைகள் தொடர்பில் கட்டுப்படுத்தப்படவேண்டிய உள்ளடக்கங்களுக்கான தேவைகள், ஏற்கெனவே இருக்கின்ற சட்ட நடைமுறைகளினூடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனம், அல்பபெட் நிறுவனத்தின் கூகுள், பேஸ்புக் நிறுவனம், லிங்க்டின் நிறுவனம், யாகூ நிறுவனம், சிவில் சமூகக் குழுக்கள், அகடமிகளை உள்ளடக்கிய The Global Network Initiative-இன் அங்கத்தவர்கள், கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் தமது பரிந்துரைகளை அபிவிருத்தி செய்திருந்தனர்.

இந்நிலையில், இஸ்லாமியப் பயங்கரவாதிகள் மற்றும் ஏனைய தீவிரவாதக் குழுக்களினால் இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்ற டிஜிட்டல் பிரசாரத்தை நிறுத்துவதற்கு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழுத்தம் வழங்குகையிலேயே மேற்கூறப்பட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் பிரசாரத்தை நிறுத்துவதற்கு இணையத்தின் சில பகுதிகளை நிறுத்தலாம் என ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஆலோசனை கூறியுள்ளார். இது தவிர, ஒஹையோ மாநில பல்கலைக்கழகத்தில் 11 பேரை கடந்த திங்கட்கிழமை (28) காயப்படுத்தி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட சோமாலியக் குடியேற்றவாசி, இணையத்தில் தன்னைத்தானே தீவிரப்படுத்திக் கொண்டிருக்கலாம் என ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்திருந்தனர்.

வன்முறையான உள்ளடக்கங்களை தமது தளங்களிலிருந்து அகற்றுவதற்கான மேலதிக நடவடிக்கைகளை கடந்த வருடம் முதலிருந்தே, பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப், ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்னெடுத்திருந்தன.

 

"‘இணைய உள்ளடக்கங்கள் மீதான தடையால் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆபத்து’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty