கிளிநொச்சி பிறீமியர் லீக்:சம்பியனானது மத்திய தீர அணி
30-11-2016 08:44 AM
Comments - 0       Views - 37

- எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட கிளிநொச்சி பிறீமியர் லீக் இருபதுக்கு-20 கடின பந்து சுற்றுப் போட்டியில், கிளிநொச்சி மத்திய தீர அணி சம்பியனாகியது.

வட மாகாணத்திலுள்ள கிரிக்கெட் நட்சத்திரங்களைக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட அணிகளைக் கொண்டு நடத்தப்பட்ட கிளிநொச்சி பிறீமியர் லீக்  இருபதுக்கு-20 சுற்றுப் போட்டிகளில் 12 அணிகள் கலந்து கொண்டிருந்தன. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (28) இடம்பெற்ற இறுதிப் போட்டிக்கு கிளிநொச்சி புதிய பாரதி அணியும் கிளிநொச்சி மத்திய தீர அணியும் தகுதி பெற்றன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற புதிய பாரதி அணியினர், முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தனர். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய புதிய பாரதி அணி, 16 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் 113 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய தீர அணி, 17.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளையிழந்து வெற்றியிலக்கை அடைந்து, இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று, கிளிநொச்சி பிறீமியர் லீக்கின் முதலாவது சம்பியனாகிக் கொண்டது.

தொடரின் நாயகனாக, இத்தொடரில் 129 ஓட்டங்கள் மற்றும் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கிளிநொச்சி புதிய பாரதி அணியின் மதுசன் தெரிவானார். தொடரின் சிறந்த பந்து  வீச்சாளராக, இத்தொடரில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கிளிநொச்சி மத்திய தீர அணியை சேர்ந்த அஜித் தெரிவானார்.

காவேரி கலாமன்றத்தின் பணிப்பாளர் வணபிதா ஜேசுவா , கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பிரிவின் வைத்தியர் ஜெயராசா ஆகியோர், வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்கள்.

 

"கிளிநொச்சி பிறீமியர் லீக்:சம்பியனானது மத்திய தீர அணி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty