2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்புக்குள் நுழைய பொது பல சேனாவுக்குத் தடை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
பொது பல சேனா உட்பட பல பேரினவாத அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பேரணி, மட்டக்களப்பு - பொலநறுவை எல்லைப் பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிஸாரால் இடை நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
 
தாம் பூஜையொன்றுக்காகவே அங்கு செல்வதாகப் பொலிஸாருடன் ஞானசார தேரர் வாதத்தில் ஈடுபட்ட போதிலும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தம்மால் அனுமதிக்க முடியாது எனப் பொலிஸார் பதிலளித்துள்ளனர்.
 
இந்நிலையில், வீதியை மறித்து வாகனத்தை நிறுத்தி வீதியில் அமர்ந்து போராட்டம் செய்ததால் அங்கு சென்ற வாகனங்கள் இரு பக்கமும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது.
 
சம்ப இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை செய்தி எடுக்க வேண்டாம் என்றும் மீறிப் படம் எடுத்தால் கமெரா உடைக்கப்படும் என்று பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தஇளைஞர்கள் தெரிவித்தனர்.
 
ஏற்கெனவே, இவர்களின் மட்டக்களப்பு விஜயத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டுள்ளது.
 
இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடை விதிக்குமாறு, நீதி மன்றத்தை வேண்டியிருந்தனர்.
 
மனுவை ஆராய்ந்த  மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைத் பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .