2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

FIFA விருதுகள்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச.விமல்

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் விருதுகள், விளையாட்டு உலகத்தில் மிக முக்கியத்துவம் பெற்ற விருதுகள். உலகில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும் விளையாட்டுக்கான விருது முக்கியத்துவம் பெறாமல் போகுமா? கால்பந்தாட்ட விருதுகள் தனியே சர்வதேசப் போட்டிகளை மட்டுமே உள்ளடக்கியவை அல்ல. கழக மட்டப் போட்டிகளையும் உள்ளடக்கியவை. சர்வதேசப் போட்டிகளிலும் பார்க்க கழக மட்டப் போட்டிகள் விருதில் மிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

2016ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கான பெயர்கள் நவம்பர் மாதம் முதற்கிழமை அறிவிக்கப்பட்டன. சிறந்த வீர, வீராங்கனை மற்றும் ஆண் அணிகளுக்கான சிறந்த பயிற்றுநர் மற்றும் பெண் அணிகளுக்கான சிறந்த பயிற்றுநர் ஆகியோருக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 23 வீரர்களின் பெயரும், 10 வீராங்கனைகளின் பெயரும் அறிவிக்கப்பட்டன. தலா 10, ஆண் அணிகளுக்கான பயிற்றுவிப்பாளர்களும், பெண் அணிகளுக்கான பயிற்றுவிப்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.

வீரர்களின் பெயர் விபரம் -

* செர்ஜியோ அகுவேரோ  (ஆர்ஜென்டீனா / மன்செஸ்டர் சிற்றி)

* கரத் பேல் (வேல்ஸ் / றியல் மட்ரிட்)

* ஜலுஜி  புபான் (இத்தாலி / ஜுவென்டஸ்)

* கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்த்துக்கல்/ றியல் மட்ரிட்)

* கெவின் டி ப்ரூனே  (பெல்ஜியம் / மன்செஸ்டர் சிற்றி)

* அந்தோனி கிறீஸ்மன்   (பிரான்ஸ் / அத்தலெட்டிகோ  மட்ரிட்)

* ஸல்டான் இப்ராமிஹிமோவிக்  (சுவீடன் / பரிஸா ஜேர்மா / மன்செஸ்டர் யுனைட்டெட்)

* அன்றேஸ் இனியஸ்டா (ஸ்பெய்ன் / பார்சிலோனா)

* என் காலோ காண்டே (பிரான்ஸ் / லெய்செஸ்டர் சிற்றி / செல்சி)

* டொனி க்ரூஸ் (ஜேர்மனி / றியல் மட்ரிட்)

* ரொபேர்ட் லெவன்டோஸ்கி (போலந்து/ பெயார்ண் மியூனிச்)

* றியாட் மஹ்ரேஸ் (அல்ஜீரியா / லெய்செஸ்டர் சிற்றி)

* லியனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா / பார்சிலோனா)

* லூக்கா மோட்ரிச் (குரோஷியா / றியல் மட்ரிட்)

* மனுவல் நோயர் (ஜேர்மனி / பெயார்ண் மியூனிச்)

* நெய்மர் (பிரேஸில் / பார்சிலோனா)

* மெசுட் ஏஸில் (ஜேர்மனி / ஆர்சனல்)

* டிமிட்ரி பயெட் (பிரான்ஸ் / வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்)

* போல் பொக்பா (பிரான்ஸ் / ஜுவென்டஸ் / மன்செஸ்டர் யுனைட்டெட்)

* செர்ஜியோ றாமோஸ் (ஸ்பெயின் / றியல் மட்ரிட்)

* அலெக்சிஸ் சந்தேஸ் (சிலி / ஆர்சனல்)

* லூயிஸ் சுவாரஸ் (உருகுவே / பார்சிலோனா)

* ஜேமி வார்டி  (இங்கிலாந்து / லெய்செஸ்டர் சிற்றி)

இந்த  23 வீரர்களில் இருந்து வாக்களிப்பின்படி 3 வீரர்கள் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த வீரருக்கான விருதை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள வழமையான இரண்டு வீரர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவவுள்ளது. ஐந்து தடவைகள் இந்த விருதை வென்ற லியனல் மெஸ்ஸி, மூன்று தடவைகள் வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியரே அவர்கள். 2008ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை இவர்கள் இருவர் மாத்திரமே இந்த விருதுகளை தொடர்ந்து வென்றுள்ளனர். இவர்களுடன் மூன்றாமவராக பிரான்ஸ் அணிக்காகவும், அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்காகவும் விளையாடி வரும் அந்தோனி கிறீஸ்மன் முதலிருவருக்கும் கடும் போட்டி ஒன்றை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ  போர்த்துக்கல் அணியின் தலைவர். சமகாலத்தில் உலகின் இரண்டாம் தர வீரர் என போற்றப்படுகின்றார். உலகின் செல்வந்த கழகமான றியல் மட்ரிட் அணியின் செல்லப்பிள்ளை இவர். றியல் மட்ரிட் அணியின் வரலாற்றில் மிகச்சிறந்த வீரராகக் கருதப்படுகின்றார்.

2016ஆம் ஆண்டு இவருக்கு இவர் வாழ்நாளின் பொற்காலம். தன்னுடைய நாட்டிற்காக முதலாவது ஐரோப்பிய கிண்ணத்தை வென்று கொடுத்துள்ளார். இதுதான் போர்த்துக்கல் அணியின் முதன்மையான கிண்ணம். றியல் மட்ரிட் அணிக்காக ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தையும் வென்று கொடுத்துள்ளார். இந்த இரண்டு வெற்றிகள் இவருக்கான விருது வெல்லும் வாய்ப்புகளை அதிகமாக வழங்கியுள்ளது.

ஐரோப்பிய சம்பியன்  கிண்ண தொடரில் 16 கோல்களை பெற்றுக்கொண்டார். ஏழு கோல்கள்  வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார். ஐரோப்பிய கிண்ணத்தில் போர்த்துக்கல் அணிக்காக மூன்று  கோல்களைப் பெற்று இரண்டாமிடத்திலுள்ளார். றியல் மட்ரிட் அணிக்காக லா லிகா போட்டிகளில் 2015/16 பருவகாலத்தில் 35 கோல்களைப் பெற்றுள்ளார். நடப்பு வருடத்தில் 10 கோல்களுடன் முதலிடத்திலுள்ளார். எனவே விருதை கைப்பற்றுவதற்கான முழுத் தகுதியையும் முதலிடத்தில் கொண்டுள்ளார்.

 

 

லியனல் மெஸ்ஸி

சமகாலத்தின் உலகின் முதன்மை வீரர். ஐந்து தடவைகள் உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை பெற்றுக் கொண்டவர். 2008ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்த விருதுக்காக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பார்சிலோனா அணியின் வளர்ப்பு பிள்ளை இவர்.

விருதுக்கான இரண்டாம் வாய்ப்பை இவர் கொண்டுள்ளார். வாக்குகள் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவர் கோல்களைப் பெற்றது மட்டுமல்லாமல் மற்ற வீரர்கள் கோல்களை பெற பந்துகளை வழங்கியதில் மிகச்சிறப்பாக உள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற கழக உலகக்கிண்ண தொடரில் வெள்ளிப்பந்தை வெற்றி பெற்றுக்கொண்டார். ஆர்ஜன்டினா அணிக்காக  கோப்பா அமெரிக்கா தொடரில் இரண்டாவது கூடுதலாக,  5 கோல்களைப் பெற்றதுடன், கோல்களைப் பெற அதிக பந்துகளை வழங்கியவர் இவர்.

ஸ்பெய்ன் சுப்பர் கப் தொடரை வென்று கொடுத்துள்ளார். பார்சிலோனா அணியுடன் இணைந்து எட்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2015/16 பருவகாலத்தில் 26 கோல்களை லா லிகா போட்டிகளில் பெற்றுள்ளார். இது மூன்றாமிடம். 2016/17 பருவகாலத்தில் 9 கோல்களுடன் இரண்டாமிடத்திலுள்ளார். ஐரோப்பிய சம்பியன் லீக் தொடரில் 6 கோல்களை பெற்று ஆறாமிடத்திலுள்ளார். இவருக்கான வாய்ப்புகள் பெறுதிகளின் அடிப்படையில் ரொனால்டோவுடன் ஒப்பிடும் போது குறைவாக இருந்தாலும் இவர் அதிகம் பேரை கவர்ந்துள்ளவர் என்ற அடிப்படையில் வாக்குகள் அதிகம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

 

அந்தோனி கிறீஸ்மன்

பிரான்ஸ் அணியின் வீரர் இவர். 2016ஆம் ஆண்டு இவருக்கு சிறந்த வருடம். 25 வயதான இவர் இந்த விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துளார். இவரின் சிறந்த பெறுதிகள் இவருக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியுளன. ஐரோப்பிய கிண்ணத் தொடரே இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. ஐரோப்பிய கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற இவரே முக்கிய காரணம். கூடுதலான கோல்களை ஐரோப்பிய கிண்ண தொடரில் இவர் பெற்றுக்கொண்டார். 6 கோல்கள். ஆனால் துரதிஷ்டம் பிரான்ஸ் அணி போர்த்துக்கல் அணியுடன் இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்தது.

அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்காக இவர் விளையாடுகிறார். 2016/17 பருவகாலத்தில் இந்த அணி மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டது. கிறீஸ்மன், 2015/16 ஸ்பெயின் லா லிகா போட்டிகளின் சிறந்த வீரராகத் தெரிவானார். ஐரோப்பிய கிண்ண தொடரின் சிறந்த  வீரரும் இவரே. இந்த பருவகாலத்தில் 22 கோல்களை பெற்று ஆறாமிடத்தை பெற்றுக்கொண்டார். நடப்பு பருவகாலத்தில் 6 கோல்களைப் பெற்றுள்ளார். இவற்றின் அடிப்படையில் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட இவர் இரண்டு இமயங்களுடன் விருதுக்காக மோதவுள்ளார். தொடர்ச்சியாக ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய இருவரும் விருதுகளை கைப்பற்றி வரும் நிலையில் இவருக்கான வாய்ப்புகளை வழங்குவார்களா?

மகளிர் வீராங்கனை

மகளிர் பிரிவில் ஜேர்மனி வீராங்கனை மெலனி பெஹறைஞ்சர், அமெரிக்காவின் கார்லி லொயிட், பிரேசில் வீராங்கனை மார்ட்டா ஆகியோர் இறுதி மூவராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் ஐந்து தடவைகள் தொடர்ச்சியாக இந்த விருதை வெற்றி பெற்ற பிரேசில் வீராங்கனை மார்ட்டா  இம்முறையும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 13 விருதுகளில் 12 தடவைகள் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2010 ஆண்டுக்கு பின்னர் இன்னமும் இவர் விருதை வெற்றி பெறவில்லை. இந்த வருடம் சம்பியன் பட்டங்கள் எதனையும் இவரால் பெற முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாமிடத்தை பிரேசில் அணி பெற்றுக்கொண்டது.

மெலனி பெஹறைஞ்சர் முதற் தடைவையாக விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் ஜேர்மனி அணி சம்பியன் ஆவதற்கு முக்கியமான காரணம் இவரே. முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக முதல் கோல்களை பெற்ற  இவர் ஒலிம்பிக் போட்டிகளில் கூடிய கோல்களை பெற்றவராக தொடரை நிறைவு செய்தார். விருதை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இவருக்கு அதிகம் உண்டு.

அமெரிக்கா வீராங்கனை  கார்லி லொயிட் மூன்றாவது  தடவையாக விருதுக்கு தெரிவாகியுள்ளார். கடந்த முறை இந்த விருதை வெற்றி பெற்றவர் இவரே.  ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவுக்கு சிறப்பாக அமையவில்லை. காலிறுதிப் போட்டியில் வெளியேற்றப்பட்டது. இதுவே அவர்களின் ஒலிம்பிக் வரலாற்றில் பதக்கமின்றி வெளியேற்றபப்ட்ட முதற்தடவையாகும். ஆனாலும் லொயிட்டின் திறைமைக்காக அவர் விருதுக்கு தெரிவாகியுள்ளார். 

 

தெரிவு செய்யப்பட்ட வீராங்கனைகளின் விபரம்

காமில் அபிலி (பிரான்ஸ் / ஒலிம்பிக் லியோன்னய்ஸ்)

* மெலனி பெஹறைஞ்சர் (ஜெர்மனி / பேயர்ன் முனிச்)

* சாரா டெப்ரடிட்ஸ் (ஜெர்மனி /  பேயர்ன் முனிச்)

* அமென்டின் ஹென்றி (பிரான்ஸ் / போர்ட்லேண்ட் முட்கள்)

* சகி குமாகை (ஜப்பான் / ஒலிம்பிக் லியோன்னய்ஸ்)

* கார்லி லொயிட் (அமெரிக்கா / ஹோஸ்டன் டாஸ்)

* ஷெனிபர் மரோஷன் (ஜெர்மனி / FFC பிராங்பேர்ட் / ஒலிம்பிக் லியோன்னய்ஸ்)

* மார்ட்  (பிரேசில் / FC  ரொசன்கார்ட் )

* லொட்டா ஷெலின்  (ஸ்வீடன் / ஒலிம்பிக் லியோன்னய்ஸ் / FC  ரொசன்கார்ட் )

* கிறிஸ்டின் சின்க்ளேர் (கனடா / போலான்ட் தோம்ஸ்)

பயிற்றுவிப்பாளர் விருதுகள், உலக அணி, மக்கள் தெரிவு, புஸ்காஸ் விருது என்பன அடுத்த கட்டுரையில் தொடரும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X