'ஞானசார தேரரை கைதுசெய்யவும்'
06-12-2016 02:54 PM
Comments - 0       Views - 89

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரையும் அவரோடு இயங்கும் இனவாதக் குழுக்களையும்  கைது செய்வதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான பொதுபலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கெதிரான மிக மோசமான வன்முறைகளை அரங்கேற்றியது. மஹிந்த அரசாங்கம், பொதுபல சேனாவின் இந்த மோசமான செயற்பாட்டை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவர்களின் இனவாத வன்முறை செயற்பாட்டுக்கு மறைமுகமாக அங்கிகாரத்தையும் வழங்கியது.

பௌத்த பிக்குகள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களின் அட்டகாசங்களை பொலிஸார் பார்த்துக்கொண்டு பாராமுகமாய் இருக்கின்றனர். பொலிஸாரின் பொடுபோக்குத்தனமான இந்த செயற்பாடு, சட்டத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதையே எடுத்துக்காட்டுகிறது. பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் பௌத்த பிக்கு மாணவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் இனவாத ரீதியில் செயற்படும் பௌத்த பிக்குகளை பொலிஸார் ஒரு போதும் தாக்கவோ கைது செய்யவோ முற்படுவதில்லை.   

சிறுபான்மை மக்களை சீண்டும் தனது இனவாத சேட்டையை ஞானசார தேரரோடு இணைந்து மட்டக்களப்பு அம்பிட்டியே சுமணரத்ன தேரரும் ஆரம்பித்திருக்கின்றார். ஞானசார தேரர, இஸ்லாம் தொடர்பாகவும், முஸ்லிம்கள் தொடர்பாகவும், இஸ்லாமிய நம்பிக்கைகள் தொடர்பாகவும் மிக மோசமான வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த விஷமத்தனமான கருத்துகள் மூலம் இனமுறுகல் ஒன்றுக்கு தூபமிட்டும் வருகிறார்.

குற்றம் இழைப்பவர்கள் யாராகினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

"'ஞானசார தேரரை கைதுசெய்யவும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty