'மெத்தையில் வைத்து சுகம் அனுபவிக்கும் கைதி யார்?'
07-12-2016 04:08 AM
Comments - 0       Views - 1359

-அழகன் கனகராஜ்

“கையில் பணம் இல்லாத கைதிகள் பலர், சிறைச்சாலைகளில் பல்வேறான சிரமங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், பணம் படைத்தவர்கள் தங்களுடைய பிறந்த நாளையும் குடும்பத்தினருடன் சிறைச்சாலைக்குள்ளேயே கொண்டாடி, சுகபோகமான வாழ்க்கை நடத்திகொண்டிருக்கின்றனர்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறைச்சாலையில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர். அவ்வாறான கைதிகளில், பண செல்வாக்குள்ள கைதியை சந்தித்த வைத்தியர் ஒருவர், அவருக்கு வழங்கிய, அலைபேசி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட விவரங்களைப் புட்டுப்புட்டு வைத்தார்.

இதனால் கோபங்கொண்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வீட்டுப் பிரச்சினையை பேசுவதற்கான இடம் இதுவல்ல என்று சுட்டிக்காட்டியதுடன், ஒழுங்குப்பிரச்சினையையும் கிளப்பினர். தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் நிறைவடைய, நிறைவடைய சக உறுப்பினர்களிடமிருந்து நேரத்தை கடனாகப் பெற்று காரசாரமாக உரையாற்றினார்.

விடயங்களை புட்டுப்புட்டு வைத்ததையால் அடுத்தடுத்து உரையாற்றுவதற்கு இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய நேரங்களையும் வாரிவழங்கினர்.

உரையை தொடர்ந்த ஹிருணிகா, “இரத்தம் வெளியேற்றம், இடுப்பு வலி, கழுத்து வலி ஆகிய உபாதைகள் காரணமாக, அவதிப்படும் கைதிகள் இருக்கின்றனர். எனினும், எவ்விதமான வருத்தங்களும் இல்லாத கைதி, மெத்தையில் உறங்கி, மெத்தையிலிருந்தே எழும்பி சுகத்தை அனுபவித்துகொண்டிருக்கின்றார் இது எந்தவகையில் நியாயமானது.

கடும் வருத்தங்களுடன், பல கைதிகள் இருக்கின்றனர். எனினும், அவர்கள் ஒரேயொரு நாள் மட்டுமே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவர். ஆனால், தன்னுடைய அந்தரங்க உறுப்பை அந்த மெத்தையில் வைத்து சுகம் அனுபவிக்கும் கைதியும் இருக்கத்தான் செய்கின்றார்” என்றும் தெரிவித்தார். இதன்போது சபையில் இருந்தவர்கள் கெக்கென்று சிரித்துவிட்டனர். அவர், இந்த சபையில் இல்லையென்று தனது உரையை ஹிருணிகா தொடர்ந்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான துமிந்த சில்வா, சிறையில் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். அவருக்கு ஞாபகமறதியே நோயாக இருக்கின்றது எனினும், அவர் மெத்தையில் படுத்துறங்கி எழும்புகின்றார். டிசெம்பர் 3ஆம் திகதி அவருடைய பிறந்தநாளாகும். அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம், சிறைச்சாலையிலேயே அதுவும் குடும்பத்தாருடன் இடம்பெற்றது என்றும் குறிப்பிட்டார்.

 

"'மெத்தையில் வைத்து சுகம் அனுபவிக்கும் கைதி யார்?'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty