'கூச்சலிட்டால் இருக்கமாட்டார்'
07-12-2016 09:57 AM
Comments - 0       Views - 145

அழகன் கனகராஜ்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தலையிட்டு பதிலளித்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் குறுக்கிட்டு கேள்வியெழுப்பினார்.

இந்த குழுநிலை விவாத்தில் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ. சுமந்திரன் முன்னதாக உரையாற்றினார். அவரது உரைக்கு, பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று இரண்டு வருடங்கள் கடந்துள்ளபோதும் ஒரு வீடுகூட இன்னமும் வடக்கில் கட்டப்படவில்லை. கேள்விப்பத்திரம் கோரப்படவுள்ளதாக தெரிந்தும் ஒரு வருடமாக ஏன் எவரும் விண்ணப்பிக்கவில்லை என்று வினவினார் இதன் போதே, கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதனால்; சபையே அதிர்ந்தது.

கருத்து மோதல்களால் சபை சூடுபிடித்திருந்த போது, எழும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 80 சதவீதமான வீடுகள் செங்கற்களால் அமைக்க உத்தேசித்துள்ளோம். வீட்டுத்திட்ட இழுபறி தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஆகியோருடன் மாநாடொன்றை நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் தற்பொழுது சமாதான சூழலில் சுதந்திரமாக நடமாடக்கூடியதாகவுள்ளது. அது மாத்திரமன்றி நாடாளுன்றத்திலும் அமைச்சர்களுக்கு எதிராக தர்க்கத்தில் ஈடுபட முடியும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சர் ஒருவருக்கு எதிராக எவராவது கூச்சலிட்டால் அவர் நாடாளுமன்றத்திலேயே இருக்கமாட்டார். ரவிராஜூக்கு என்ன நடந்தது? ஆனால் இந்த நிலைமை தற்பொழுது இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கின் அபிவிருத்திக்கு கூடுதல் பணத்தை வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அபிவிருத்தி தொடர்பில் வடக்கின் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்குமிடையில் அபிப்பிராய பேதங்கள் காணப்படுகின்றன. எனினும், இந்த அபிப்பிராய பேதங்களை நாம் குண்டுகளைப் பயன்படுத்தாது தீர்த்துவைப்போம் எனத் தெரிவித்தார்.

பிரதமரின் கருத்தைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எமது மக்கள் நீண்டகாலமாக கஷ்டங்களை எதிர்கொண்டவர்கள். யுத்தத்தால் வீடுகள் இழக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக நீடித்திருக்கக் கூடிய நிரந்தர வீடுகளே தேவையாக உள்ளது. மாறாக இரும்பு உருக்கினால் தயாரிக்கப்பட்ட கூடுகள் அவசியமில்லை என்று சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து கைச்சாத்திட்டு பொருத்து வீடுகள் தேவையில்லையென ஜனாதிபதிக்கும், உங்களுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளோம். அத்துடன் மாற்று யோசனையொன்றையும் முன்வைத்திருந்தோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், பெரும்பாலான வீடுகள் கல்லினாலேயே கட்டப்படவுள்ளன. எனினும், சில உறுப்பினர்கள் பொருத்து வீடுகளைக் கட்டித்தருமாறு கோரியுள்ளனர். எனவே நாம் சில பொருத்து வீடுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இவற்றுக்கான கோரிக்கை அதிகமாகவிருந்தால் கூடுதலான வீடுகளையும், கோரிக்கை குறைவாக இருந்தால் குறைவான வீடுகளையும் அமைத்துக் கொடுப்போம் என்றார்.

"'கூச்சலிட்டால் இருக்கமாட்டார்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty