2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சமூகமளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைஷால் இஸ்மாயில்

பொத்துவில் அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், சமூகமளிக்காத  திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அபிவிருத்திக் குழுத் தலைவரும் சுகாதாரப் பிரதி அமைச்சருமான பைஷால் காசிம் வேண்டுகோள் விடுத்தார்.

பொத்துவில் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (07) நடைபெற்றபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

இக்கூட்டத்துக்குத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள்   சமூகமளிக்காமை காரணமாக அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலிகள் வெறுமையாகக் கிடந்தன.

கூட்டங்களுக்கு வருகை தராத அதிகாரிகள் தொடர்பில் ஜனாதிபதி, உரிய அமைச்சு, அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கூறினார்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் 200 வைத்தியர்களுக்கும் 600 தாதி உத்தியோகஸ்தர்களுக்குமாகக் காணப்படும் வெற்றிடங்கள் எதிர்வரும் வருடத்தில் நிரப்பப்படும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் 460 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இப்பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கை இழுத்தடிக்கப்படுவதாகவும் அப்பிரதேச உப கல்வி வலயப் பணிப்பாளர் எம்.பி.வாஹாப்; தெரிவித்தார்.
சின்ன உல்லைக் கடற்கரையில் மீனவர்களின் படகுகளைத் தரித்துவைப்பதற்கும் மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்குமான இட ஒதுக்கீட்டைச் செய்யுமாறு கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரேரணையை முன்வைத்தார். இதன்போது, அடுத்த கூட்டத்தில் இதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலய மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தை அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.  

பொத்துவில் பிரதேசத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்திகளை முன்னெடுப்பதிலுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான  தடைகளை அகற்றுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .