'அரசியலமைப்பு விடயத்தை அற்பமாகக் கருதவேண்டாம்'
08-12-2016 08:50 AM
Comments - 0       Views - 27

அழகன் கனகராஜ்

"அதிகாரத்துக்கு வரும் நோக்கில், புதிய அரசியலமைப்பு விடயத்தை அற்பமாகக் கருதி, குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படவேண்டாம். அதன் பிரதிபலனை எதிர்காலத்தில் சகலரும் அனுபவிக்க வேண்டிவரும்" என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். "புதிய அரசியலமைப்பை இயற்றும் நடவடிக்கைகள், இன்னும் பேச்சு மட்டத்திலேயே இருக்கிறது. அது தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையானது கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அது தொடர்பில் அச்சங்கொள்ளத் தேவையில்லை

"நாட்டை முன்னேற்றும் விடயத்தை பொறுத்த வரையில் நட்பு மற்றும் பகைமை சக்திகளை அடையாளம் காண்பதும் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதும் முக்கியமாகும். நாட்டின் பாதுகாப்பை ஒருபோதும் அற்ப விடயமாக கருதிவிடக்கூடாது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் இந்த சபையிலுள்ள அனைவரும் சிறந்த புரிதலுடன் இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பை பொறுத்த வரையில் சர்வதேச மட்டத்திலான ஒத்துழைப்பும் மற்றும் நட்புணர்வும் முக்கியமாகும்.
பிரச்சினையின் பின்னணி நாட்டில் ஏன் யுத்தம் ஏற்பட்டது என்பதை புரிந்துக்கொள்வது அவசியமாகும். எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட்டமைக்கான காரணம், யுத்தம் நிலவிய நிலைமை, மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுத்தல் என்பன பற்றி யுத்தத்தின் நிறைவின் பின்னர் ஆராய்ந்து பொறுப்பை நிறைவேற்றும் கடமை கடந்த ஆட்சியின் போது தவறவிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு பற்றிய விடயத்தில் முப்படையினரும் யுத்தம் மற்றும் ஆயுத ரீதியாக ஆற்றிய பணி ஒருதுறை சார்ந்த விடயம் மட்டுமே. தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை வரும் என்ற அபசகுணமான நிலைமையை உணர்ந்தால் அதற்கு தீர்வொன்றை காண்பது முக்கியமாகும்.

அத்துடன், எதிர்காலத்தில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட்டால் என்று உதய கம்மன்பில்ல எம்.பி. கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். மீண்டும் யுத்தமொன்று ஏற்படக்கூடும் என்ற எண்ணம் எமது மனங்களில் இருந்தால் அல்லது அவ்வாறான எண்ணமொன்று ஏற்படுமாயின் அந்த எண்ணத்தை தடுக்க நாட்டு மக்களுக்கு அடிப்படை வேலைத்திட்டமொன்று இருக்க வேண்டும்.

இதேநேரம், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை (பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் - எட்கா) பற்றிய நாட்டு மக்களுக்கும் ஏனைய துறையினருக்கும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம். எமது பொருளாதார மற்றும் ஏனைய ஒத்துழைப்புகளின் நிமித்தம் சகல நாடுகளுடனும் ஒப்பந்தங்களையும் ஒத்துழைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

"'அரசியலமைப்பு விடயத்தை அற்பமாகக் கருதவேண்டாம்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty