2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கெடு

Administrator   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகம்மது தம்பி மரைக்கார் 

இலங்கையில் முஸ்லிம்களுக்கென்று ஓர் அரசியல் கட்சி 20 வருடங்களுக்கு முன்னர் இயங்கு நிலையில் இருக்கவில்லை. தமிழர்களுக்கென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகள் அரசியல் ரீதியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது, முஸ்லிம்களில் அதிகமானோர் பெருந்தேசிய சிங்களக் கட்சிகளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனாலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியின் தோற்றம் இந்த நிலையினை மாற்றியது.  

1986 ஆம் ஆண்டு, ஓர் அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம்பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் பல விசித்திரங்கள் இடம்பெற்றன. முஸ்லிம் பிரதேசங்களில் ஐ.தே.கட்சி கட்டி வைத்திருந்த ஆதரவுக் கோட்டைகள் இடிந்து விழத் தொடங்கின.  

கிழக்கு மாகாணத்தில் பெருந்தேசிய சிங்களக் கட்சிகளின் கைகளுக்குள் அகப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின் வாக்கு வங்கிகளை, முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸ் என்பது, முஸ்லிம்களின் கட்சி என்கிற அடையாளத்தைப் பெறுமளவுக்கு, அரசியல் அரங்கில் அந்தக் கட்சி பல அடைவுகளைப் பெற்றது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் என்கிற ஆளுமையைத் தவிர்த்து விட்டு, முஸ்லிம் காங்கிரஸ் என்கிற கட்சி பற்றி தனியாகப் பேச முடியாது.   

அஷ்ரப், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராகவும் அம்பாறை மாவட்டத்தில் பிறந்தவராகவும் இருந்தமை அவருக்கு அரசியல் ரீதியான பலமாக அமைந்தது. இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் அம்பாறையாகும். இதனால், முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியை, அம்பாறை மாவட்டத்திலிருந்து பெரு விருட்சமாக வளர்த்தெடுப்பது சாத்தியமாக இருந்தது.  

 

முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கம், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்று கொடுப்பதாகும். “நாங்கள் உங்களுக்கு அபிவிருத்திகளைச் செய்து தர மாட்டோம்; தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தர மாட்டோம்; ஆனால், உங்கள் உரிமைகளைப் பெற்றெடுப்பதற்காக குரல் கொடுப்போம்” என்று, முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆரம்பகால தேர்தல் பிரசார மேடைகளில் மிகப் பகிரங்கமாகக் கூறியது.   

மக்களும் வாக்களித்தார்கள். 1989 ஆம் ஆண்டு முதன் முதலாக நான்கு உறுப்பினருடன் நாடாளுமன்றம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ், ஒரு காலகட்டத்தில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றெடுக்கும் வகையில் வளர்ச்சியடைந்து நின்றது.  
ஆனால், அந்த நிலையை முஸ்லிம் காங்கிரஸ் இப்போது இழந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளும் உடைவுகளும் அதன் இறங்கு முகத்துக்குப் பிரதான காரணம் எனக் கூறலாம். ஒரு கட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகப் பதவி வகித்த ஏ.எல்.எம். அதாவுல்லா, அந்தக் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றதோடு, புதிய கட்சியொன்றினையும் ஆரம்பித்தார்.  

 அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் ஒரு குழு கட்சியிலிருந்து பிரிந்து சென்றதோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கிற புதிய கட்சியொன்றினையும் ஆரம்பித்தார்கள்.  

 இந்த நிலைவரமானது முஸ்லிம் காங்கிரஸுக்கு அதன் பிரதான தளப் பிரதேசங்களில் பாரிய சவால்களை ஏற்படுத்தியிருந்தன. முஸ்லிம் காங்கிரஸுக்கான வாக்குகள் கலையத் தொடங்கின. முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமுடைய தலைமைத்துவக் காலத்தில்தான் மேற்சொன்ன பிளவுகள் நடந்தன.  

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் இவ்வாறான உடைவுகள் கட்சிக்குள் பெரிதாக ஏற்பட்டிருக்கவில்லை. அந்தக் கட்சியின் மிகவும் பலம்பொருந்திய ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனுடன் அஷ்ரப்புக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, 1992 ஆம் ஆண்டு, தவிசாளர் இஸ்ஸதீனைக் கட்சியிலிருந்து அஷ்ரப் வெளியேற்றினார்.   
அந்த நிகழ்வு அப்போது கட்சிக்குள் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், கட்சியின் வளர்ச்சியில் சேகுவின் இழப்பு பாரிய தாக்கங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை. தராசு சின்னத்தில் முஸ்லிம் கட்சி என்கிற பெயரில் சேகு இஸ்ஸதீன் தனியான அரசியல் கட்சியொன்றினை அப்போது உருவாக்கியிருந்த போதும், அந்த முயற்சியினால் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியினைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.  

ஆனால், முஸ்லிம் காங்கிரஸில் தலைவர் ஹக்கீமுடைய பதவிக் காலத்தில் ஏற்பட்ட பிளவுகள், அந்தக் கட்சிக்கு பாரிய சவால்களாக உருவெடுத்தன. கட்சியின் வளர்ச்சியில் பாரிய தடைகளை ஏற்படுத்தியிருந்தன. எவ்வாறாயினும், 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸில் பாரிய பிளவுகள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது, கட்சித் தலைவர் ஹக்கீமுக்கு ஆறுதலைக் கொடுத்திருந்தது.  

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸுக்குள் இன்னுமொரு உடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த உடைவு, பிளவாக மாறிவிடக் கூடிய அபாயங்களும் உள்ளன. அப்படியொரு பிளவு கட்சிக்குள் ஏற்படுவது முஸ்லிம் காங்கிரஸுக்கு நல்லதாக அமையாது.   
இன்னுமொரு பிளவினைத் தாங்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளதா என்கிற கேள்விகளும் பரவலாக உள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக, அந்தக் கட்சிக்குள் மேற்கொள்ளப்பட்ட பல எதிர்ப்புகளைத் தோல்வியடையச் செய்வதற்கு துணை நின்ற, கட்சியின் செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோருடன் தற்போது கட்சித் தலைவர் ஹக்கீம் முரண்பட நேர்ந்துள்ளது.  

இந்த முரண்பாடானது தற்போது கட்டு மீறிப்போயுள்ளது. இதுவரை காலமும் கட்சிக்குள்ளும், அதைத் தாண்டி ஊடகங்களிலும் பேசப்பட்டு வந்த, கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முற்றிப் போனதால், இப்போது தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தலையிட வேண்டியேற்பட்டுள்ளது. இது, நிலைவரத்தை மோசமடையச் செய்துள்ளது. 

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக அந்தக் கட்சியின் பேராளர் மாநாட்டில் எம்.ரி. ஹசன் அலி தெரிவு செய்யப்பட்டிருந்தார். கட்சியின் செயலாளர்தான் தேர்தல் ஆணையாளருடனான தொடர்புகளை மேற்கொள்வார். ஆனால், இப்போது முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவி குறித்துப் பிரச்சினை எழுந்துள்ளது.   
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏழாம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு இணங்க, அந்தக் கட்சியில் செயலாளர் நாயகம் என்றும் செயலாளர் என்றும் இரண்டு பதவிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் என்பவர்தான் தேர்தல் ஆணையாளருடனான தொடர்புகளைப் பேணுவார் என்றும் தேர்தல் ஆணையாளருக்கு முஸ்லிம் காங்கிரஸ் எழுத்து மூலம் அறிவித்திருந்தது.   

அந்த ஆவணத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கையொப்பமிட்டிருந்தார். இதேவேளை, கட்சியின் செயலாளர் நாயகம் என்கிற பதவிக்கு எம்.ரி. ஹசன் அலியும், செயலாளர் பதவிக்கு  ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் என்பவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ஆயினும், தேர்தல் ஆணையாளருக்கு மு.கா தலைவர் அனுப்பி வைத்த தகவல்கள் பிழையானவை என்கிற கோசமொன்று அந்தக் கட்சிக்குள் எழுந்தது. ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் என்பவர் கட்சியின் உயர்பீட செயலாளராக மட்டுமே தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்றும், செயலாளர் ஹசன் அலியின் பணிகளை இலகுபடுத்துவதற்காகவே உயர்பீட செயலாளர் எனும் பதவியொன்று உருவாக்கப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஓர் எதிர்க்குரல் எழுந்தது. இதனையடுத்து இவ்விவகாரம் பல்வேறு விதமான சர்ச்சைகளைத் தோற்றுவித்தது.  

இந்த நிலையில், இவ்வருடம் மார்ச் மாதம் தேர்தல் ஆணையாளருக்கு  எம்.ரி. ஹசன் அலி கடிதமொன்றினை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் கட்சியின் செயலாளர் தான்தான் எனவும், முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில், செயலாளர் தொடர்பாக முறையான மாற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என்றும் ஹசன் அலி குறிப்பிட்டிருந்தார். ஆயினும், ஹசன் அலி எழுதிய கடிதத்துக்கு தேர்தல் ஆணையாளரிடமிருந்து எவ்வித பதிலும் அப்போது வரவில்லை என ஹசன் அலி தரப்பு கூறுகிறது.  

இந்த நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் மிகவும் பாரதூரமானதாகும்.   
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் எழுதியுள்ள மேற்படி கடிதத்தில், அரசியல் கட்சியொன்றினுள் இரண்டு செயலாளர் பதவிகள் அல்லது செயலாளர் நாயகம், செயலாளர் என்கிற பதவிகள் ஒரே சமயத்தில் இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, முஸ்லிம் காங்கிரஸினுள் எழுந்துள்ள செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை இம்மாதம் 15ஆம் திகதிக்குள் தீர்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர், மு.கா தலைவரை அறிவுறுத்தியுள்ளார். இதற்கிணங்க, கட்சிக்குள் செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற ஒரு பதவியினை மட்டும் முறைப்படி தாபித்துக் கொள்ளுமாறும் ஆணையாளர் பணித்துள்ளார்.   

எனவே, இப்பிரச்சினையினை தீர்த்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு, அதாவது டிசெம்பர் 15ஆம் திகதி வரையிலும், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் என்கிற பதவிக்கான நிரலில் யாருடைய பெயரையும் காட்சிப்படுத்தாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மஹிந்த தேசப்பிரிய தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வாறாயினும் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள், முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள செயலாளர் பதவி தொடர்பான சிக்கலினைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் போனால், இனிவரும் தேர்தல் மற்றும் வாக்கெடுப்புக்குரிய அலுவல்களுக்காக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த் தரப்புக் கொண்ட அரசியல் கட்சியொன்றாகக் கருத நேரிடும் என்றும், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.  

அதாவது, முஸ்லிம் காங்கிரஸுக்குள் செயலாளர் தொடர்பான சிக்கல் தொடர்ந்தும் நிலவுமானால், எதிர்வரும் தேர்தல்களில் அந்தக் கட்சி அதன் சின்னத்தில் போட்டியிட முடியாததொரு நிலை ஏற்படும் என்பதைத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் எழுதியுள்ள கடிதம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.   

இந்த நிலைவரமானது முஸ்லிம் காங்கிரஸுக்கு பாரிய சவாலாகும். செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலினை ஆரம்ப நிலையிலேயே கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், அவை தட்டிக்கழிக்கப்பட்டன. அதன் விளைவுதான் இப்போது காலக்கெடு விதிக்கப்படும் நிலைவரை, அந்தக் கட்சியினைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.  

முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, அந்தக் கட்சியின் தேவை என்பது, அரசியல் அரங்கில் அவசியமானதாகும். தற்போது நாட்டில் உருவாகிவரும் பேரினவாத அரசியல் சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவினைப் பெற்றுள்ள ஒரு கட்சி, தேர்தலொன்றில் தனது சொந்தச் சின்னத்தில் போட்டியிட முடியாததொரு நிலைவரமொன்றுக்குள் சிக்கிக் கொள்வதென்பது கவலைக்குரியதாகும்.   

மட்டுமன்றி, கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பதன் அடிப்படையில், முஸ்லிம் அரசியல் அரங்கில், முஸ்லிம் காங்கிரஸின் இருப்பும், அதன் நேரடி இயங்கு நிலையும் அவசியமானதாகும்.   
எனவே, முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுள்ள செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் தீர்த்துக் கொள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இதய சுத்தியுடன் முன்வரவேண்டும். இந்தக் கட்சியினை உருவாக்கி, வளர்த்தெடுப்பதற்காக அதன் தொண்டர்களும் ஆதரவாளர்களும் வியர்வை, இரத்தம், உயிர் என்று ஏராளமானவற்றினை இழந்திருக்கின்றார்கள்.

எனவே, அவ்வாறான அர்ப்பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியை, வரட்டு கௌரவங்களுக்காகவும், ‘ஈகோ’ என்கிற தான் எனும் முனைப்புகளை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும் யாரும் அழித்து விடக்கூடாது என்பது முஸ்லிம் காங்கிரஸை நேசிப்போரின் கோரிக்கையாகும்.   

இன்னொருபுறம் விட்டுக் கொடுப்புகளின்றி, இப்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினையில் வெற்றி காண முடியாது என்கிற உண்மையினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மு.காங்கிரஸுக்குள் ஹசன் அலியின் மூப்பும், அந்தக் கட்சிக்கான அவரின் அர்ப்பணிப்புகளும் இந்த இடத்தில் கவனிக்கப்படுதல் வேண்டும். அதனை முன்னிறுத்தியே கட்சிக்குள் எழுந்துள்ள செயலாளர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று, கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  

இன்னொருபுறம், தமது மரச் சின்னத்தில் போட்டியிட முடியாத மிக மோசமானதொரு நிலைவரமொன்றினை, முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கெனவே அனுபவித்துமிருக்கிறது. 2006ஆம் ஆண்டு ஜமால்தீன் இஸ்ஹாக் எனும் நபரொருவர், முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எனும் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தார்.   
அதன் காரணமாக, அந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸினால் அதனுடைய மரச்சின்னத்தில் போட்டியிட முடியாமல் போனது. இதனையடுத்து சுயேட்சைக் குழுவாகவே தமது வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் களமிறக்கியது. இதனால், முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு அவதிகளையும், சட்டச் சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிட்டது.  

எனவே, அவ்வாறானதொரு அவதியினை இன்னுமொரு தடவை எதிர்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக விரும்பாது. ஒரு கசப்பான அனுபவத்திலிருந்துதான் நமது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான பாடங்களைக் கற்க வேண்டும். அதனை மனதிற்கொண்டாவது, இப்போது எழுந்துள்ள செயலாளர் பதவி தொடர்பான சிக்கலுக்குத் தீர்வொன்றினைக் காண, அந்தக் கட்சியின் தலைமை முன்வர வேண்டும். 

யாருடைய வரட்டுக் கௌரவங்களை வெற்றி பெறச் செய்வதற்காகவும், இந்தக் கட்சியினைத் தோற்கடித்து விடக் கூடாது.  
முஸ்லிம் காங்கிரஸ் என்பது, எந்தவொரு தனியாளுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு சமூகத்தின் ஆதங்கங்களிலிருந்தும், அர்ப்பணிப்புகளில் இருந்தும் உருவானதாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .