2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நம்பகத்தன்மையை மேலும் இழக்கிறது அரசாங்கம்

Administrator   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஒரு மேடையில் ஒலிவாங்கிகள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. அது போன்ற சந்தர்ப்பத்தில் எவரும் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்க முற்படாவிட்டாலும் பொலிஸ்மா அதிபர் அதற்குப் பதிலளிக்கிறார்.  

மறுமுனையில் உள்ளவர் ஏதோ கூறுகிறார். “சரி கொடுங்கள்” என்கிறார் பொலிஸ்மா அதிபர். அதன் பின்னர் அவர், ஒலிவாங்கிகள் முன்னிலையிலேயே மரியாதையுடன் “சேர் சேர்” என்று பேசத் தொடங்குகிறார். “நிச்சயமாக இல்லை சேர், எனது அனுமதியின்றிக் கைது செய்ய வேண்டாம் என நான் எப்.சி.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளேன். நிச்சயமாக சேர், அவர் கைது செய்யப்பட மாட்டார். சரி சேர், நான் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்” என்று பொலிஸ்மா அதிபர் கூறுகிறார்.  
அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருப்போருக்கு, எவரையோ கைது செய்வதில்லை என தான், “சேர்” என்று அழைக்கும் எவருக்கோ பொலிஸ்மா அதிபர் உத்தரவாதமளிக்கிறார் என்பது தெளிவாகிறது. அவர் யாருக்கு இந்த உத்தரவாதத்தை வழங்கினார்? நிச்சயமாக, தான் சேர் என்று அழைக்கும் தனக்கு உயர் மட்டத்தில் உள்ள ஒருவருக்கே அவர் அந்த உத்தரவாதத்தை வழங்குகிறார்.  

எவரும் கைது செய்யப்படமாட்டார்கள் என, பொலிஸ்மா அதிபர் ஏன் எவருக்கும் உத்தரவாதமளிக்க வேண்டும்? அவ்வாறு உத்தரவாதமளிக்க, சட்டப்படி அவர் எவருக்கும் கடமைப்படவில்லை. எனவே, நாட்டு நடப்பின் படி சிந்தித்துப் பார்த்தால், ஒருவரைக் கைது செய்ய வேண்டாம் என யாரோ அரசியல் செல்வாக்குள்ள ஒருவர், பொலிஸ்மா அதிபர் மீது நெருக்குதலைக் கொடுக்கிறார் என்றே அந்த உரையாடல் மூலம் விளங்குகிறது.  

முதல் முதலாக, இந்தச் செய்தியை வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி, பொலிஸ்மா அதிபர் உரையாடுவதை மட்டும் காட்டிவிட்டு, “இதுதான் நல்லாட்சியா?” என்ற வாசகத்தையும் தொலைக்காட்சித் திரையில் காண்பித்துவிட்டு, அடுத்த செய்திக்குச் சென்றது.  

இந்தச் சம்பவம், இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, இதைப் பற்றி நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினார். தாமும் இந்தத் தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்ததாகவும் அந்த விடயம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருக்கிறார்.  
பொலிஸ்மா அதிபரினால் “சேர்” என்று அழைக்கப்பட்டவர், எவராகவும் இருக்கலாம் என்றும் அரசியல்வாதியாகவே இருக்க வேண்டியதில்லை என்றும் அது அவரது பாடசாலை காலத்து ஆசிரியராகவும் இருக்கலாம் எனவும், உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல கூறியிருந்தார்.  

அதன் மூலம் அமைச்சர், அரசியல்வாதிகளைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று இருக்கலாம். ஆனால், பாடசாலை ஆசிரியருக்கேனும் பொலிஸ்மா அதிபர் அவ்வாறு வாக்குறுதி அளிப்பது முறையா என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கைது தொடர்பாக விசாரிப்பவர், நிச்சயமாக அநாவசியத் தலையீட்டையே செய்கிறார் என்றே தெரிகிறது. சட்டப் படி ஒருவரைக் கைது செய்ய, எப்.சி.ஐ.டி எனப்படும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அவசியமாக இருந்தால்? அவரைக் கைது செய்ய வேண்டாம் என நல்லாட்சியைப் பற்றிக் கூச்சலிடும் அரசாங்கத்தின் பொலிஸ்மா அதிபரினாலும் உத்தரவு வழங்க முடியுமா?  

அமைச்சர் கிரியெல்ல, இது போன்ற வாதங்களை முன்வைப்பதில் வல்லவர் என்பது அனேகமாகப் பலருக்குத் தேரியும். 2009ஆம் ஆண்டு, பாதுகாப்புப் படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த கிளிநொச்சி நகரையும், கைப்பற்றிக் கொண்டதன் பின்னர், அப்போது எதிர்க்கட்சியிலிருந்த கிரியெல்ல, அரசாங்கத்தின் அந்தப் போர் வெற்றியை தாழ்த்திப் பேசுவதற்காக, “எந்த மாட்டுக்கும் போர் புரிய முடியும்” என்று கூறிப் பலரது விமர்சனத்துக்கு உள்ளானார்.  

அண்மையில் வெடித்த மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பாக கோப் எனப்படும் நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழு விசாரித்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், அந்த மோசடிக்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனத் தமது அறிக்கையில் கூறியிருந்த நிலையிலும் நீதிமன்றம் அவ்வாறானதோர் ஊழல் இடம்பெற்றதாகக் கூறவில்லை என, கிரியெல்ல கூறியிருந்தார்.  

ஆனால், மத்திய வங்கி 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளை விற்பனை செய்வதற்காக மட்டுமே கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதலில் பகிரங்கமாக விலை மனு கோரியது என்பதும், ஆனால், பின்னர் எவருக்கும் அறிவிக்காமல் கொள்வனவு செய்யப்படும் பிணைமுறிகளின் பெறுமதியை வங்கி 10 பில்லியன் ரூபாய் வரை அதிகரித்தது என்பதும் மற்றைய கொள்வனவாளர்கள் அறிந்திராத அந்த அதிகரிப்பை மகேந்திரனின் மருமகனான அலோசியஸ் சம்பந்தப்பட்டு இருந்த “பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ்” என்ற நிறுவனம் மட்டும் அறிந்திருந்து அதிகளவில் பிணைமுறிகளை கொள்வனவு செய்து பல நூறு கோடி ரூபாய் இலாபம் ஈட்டியது என்பதும் உலகமே அறிந்த விடயங்களாகும்.  

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் கிரியெல்லையின் பரிந்துரையின் பேரில் பெரும் எண்ணிக்கையிலான ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதாக கடந்த வருடம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டிய போது, கடந்த தேர்தல்களின் போது ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு தாம் ஏதாவது செய்ய வேண்டாமா என கிரியெல்ல திருப்பிக் கேட்டார். அது முறைகேடான செயல் என்பதை அவர் ஏற்கவில்லை. அதற்கு முன்னர் தமது நண்பர் ஒருவரை பேராதனை பல்கலைகழகத்தில் விரிவுரையாளராகச் சேர்த்துக் கொள்ளுமாறு கிரியெல்ல அப்பல்கலைகழகத்தின் உபவேந்தருக்கு அறிவித்திருந்தார். அதனையும் அவர் பகிரங்கமாக நியாயப்படுத்தினார். கிரியெல்லவுக்கும் நல்லாட்சிக்கும் உள்ள உறவை, அவற்றின் மூலம் புரிந்து கொள்ளலாம்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஊழல், மோசடி, வீண் விரயம் ஆகியவை மலிந்து கிடந்ததாகவும் தாம் அந்த நிலையை மாற்றி நாட்டில் நல்லாட்சியை மலரச் செய்வதாகவும் கூறியே தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மூலமாகவும் பொதுத் தேர்தல் மூலமாகவும் பதவிக்கு வந்தனர். ஆனால், புதிய ஆட்சியிலும் ஊழல் நடைபெறுவதை பொலிஸ்மா அதிபரின் இந்தத் தொலைபேசி அழைப்பு சிறந்த சான்றாகப் பலர் எடுத்துக் காட்டுகிறார்கள்.  

இது அரசியல் தலையீடு அல்ல என கிரியெல்லவைப் போலவே ஏனைய அமைச்சர்களும் சிலவேளை நுட்ப ரீதியிலான வாதங்களை முன்வைத்து வெற்றி பெறலாம். ஆனால், மக்கள் மனதில் ஏற்பட்ட சந்தேகத்தை அது போன்ற வாதங்களால் அகற்ற முடியாது. அதேவேளை இது போன்ற தலையீடுகள் மேலும் எத்தனை முறை நடந்திருக்கலாம் எனவும் மக்கள் சந்தேகிப்பது நியாயமே.  

அவன்ட காட் நிறுவனத்தின் மூலம் கடற் படைக்கு கிடைக்க வேண்டிய பில்லியன்கணக்கான ரூபாய் வருமானத்தை அரசாங்கத்துக்கு கிடைக்காமல் செய்தது தொடர்பான சர்ச்சை கடந்த வருடம் எழுந்த போது, அந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கைது செய்யப்படுவார் எனப் பலர் நினைத்தனர். ஆனால், அது நடைபெறவில்ல. அதனை அடுத்து தாமே கோட்டாபய ராஜபக்‌ஷ கைது செய்யப்படுவதை தடுத்ததாக நிதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கூறியிருந்தார்.  

அவரே அவ்வாறு கூறும் போது, அது பொய்யாக இருக்க முடியாது. ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமானால் அதனை ஓர் அமைச்சர் தமது அதிகாரங்களைப் பாவித்துத் தடுப்பது எவ்வகையிலும் நாகரிகமான அரசியலாகாது. அது நல்லாட்சியும் அல்ல இப்போது பொலிஸ்மா அதிபர் அதனையே செய்கிறார் போல் தெரிகிறது. எனவே, இது போன்ற மேலும் பல சம்பவங்கள் இருக்கலாம் என மக்கள் சந்தேகிப்பது நியாயமே.  

அண்மையில் இடம்பெற்ற பல சம்பவங்களுடன் சேர்த்தே பொலிஸ்மா அதிபர் தொடர்பான இந்தத் தொலைபேசி உரையாடலை கருத்திற்கொள்ள வேண்டும். குறிப்பாக மேற்குறிப்பிடப்பட்ட பிணை முறி விவகாரம் மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவை அரசியல் நோக்கத்தோடு செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒக்டோபர் 12ஆம் திகதி ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை ஆகியவற்றின் பின்னணியில் இந்தச் சம்பவத்தை பார்க்கும் போது, அரசாங்கம் வெகுவாகத் தமது நம்பகத்தன்மையை இழந்துள்ளது என்றும் இழந்து வருகிறது என்றும் தெளிவாக தெரிகிறது.  

பிணைமுறி விவகாரம் மிகவும் பாரதூரமான விடயம் என்பதற்கு, அந்த விடயத்தின் போது அரசாங்கம் இழந்த பணத் தொகை மற்றும் ஆதாரமாகக் கொள்ளத் தேவையில்லை. அந்த விடயத்தில் ஊழல் நடைபெற்று இருப்பது தெளிவாக தெரிந்திருந்தும் அரசாங்கத் தலைவர்கள் இன்னமும் அதனை நியாயப்படுத்த எடுக்கும் முயற்சியும் அதன் பாரதூரத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. ஏனெனில், இவர்கள் தான் நல்லாட்சியின் பெயரால் மக்களிடம் வாக்குகளைப் பெற்றார்கள்.  

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இலஞ்ச ஆணைக்குழுவும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தின் பல தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்நிறுவனங்கள் அரசியல் நிகழ்ச்சிநிரலொன்றின் படி செயற்படுவதாக ஜனாதிபதி கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது கூறினார். அதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவையும் முன்னாள் கடற்படை தளபதிகள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையும் அவர் அந்த உரையின் போது விமர்சித்தார். பாதுகாப்புப் படையினரை நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பாகவும் அவர் தமது அதிருப்பதியை தெரிவித்தார்.  

இதனை அடுத்து இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாகவிருந்த தில்ருக்‌ஷி விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமாச் செய்தார். ஊடகவியலாளர்களான லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் படுகொலை மற்றும் காணாமற்போதல் தொடர்பாக, கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தைப் போல் தாம் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தப் போவதில்லை என அரசாங்கத்தின் தலைவர்கள் கூறி வரும் நிலையில் சம்பவங்கள் இவ்வாறு நடைபெறும் போது மக்கள் நல்லாட்சி விடயத்தில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிப்பதை தடுக்க முடியாது.  

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் பாரிய அளவிலான ஊழல்கள், மோசடிகள் இடம்பெற்றதாகவும் ஆட்சியாளர்களின் விருப்பப்படியே பெலிஸாரும் நீதிமன்றங்களும் இயங்கின என்றும் அரசாங்கத்துக்கு எதிரான பலர் தாக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள் என்றும் தற்போதைய ஆட்சியாளர்கள் கூறினர். அவை அனைத்துமே உண்மை தான். அவன்ட் காட் விவகாரத்துக்குப் புறம்பாக பசில் ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமானதாகக் கூறப்பட்ட பாரிய காணிகளுக்கு இப்போது உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது, ஹெட்ஜிங் ஊழல் என்றழைக்கப்படும் எண்ணெய் இறக்குமதியின் போது இடம்பெற்ற ஊழல் போன்றவை அக்கால ஊழல்களுக்கு உதாரணமாகும்.  

திவிநெகும் சட்டமூலத்தை மாகாண சபைகளின் விருப்பத்தை அறிந்தே நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தீர்ப்பளித்ததை அடுத்து, அவருக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை அக் காலத்தில்அரச தலைவர்கள் நீதிமன்றங்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு சிறந்த உதாரணமாகும். 

ஊடகவியலாளர்களான நிமலராஜன் கொலை, சுகிர்தராஜன் கொலை,உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டமை,லசந்த கொலை, எக்னெலிகொட காணாமல் போனமை, போத்தல ஜயந்த, ரிவிர ஆசிரியர் உபாலி தென்னகோன் போன்றவர்கள் தாக்கப்பட்டமை ஆகியவை அக்கால ஜனநாயகத்தின் நிலைமையை எடுத்துக் காட்டுகின்றன. எனவே, அக்காலத்தைப் பற்றி தற்போதைய ஆட்சியாளர்கள் கூறியவை உண்மைதான். ஆனால், அவற்றைக் காட்டி தற்போது நடைபெறும் ஊழல்களையோ நீதித்துறை மீது அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்துவதையோ நியாயப்படுத்த முடியாது.  

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் பல முற்போக்கான காரியங்களை செய்ததை எவரும் மறுக்கப் போவதில்லை. தேர்தலின்போது வாக்குறுதி அளித்ததைப் போலவே ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரங்களை இரத்துச் செய்ய முன்வந்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையையே இரத்துச் செய்ய அவர் முன் வந்த போதிலும், அதற்காக சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்ததால் 100 நாட்கள் அராங்கத்தின் கீழ் அதனை செய்ய முடியாது என 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சுதந்திர ஆணைக்குழுக்களை நிறுவி, அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூடிய வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் தாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக போட்டியிடுவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.  

நாட்டில் ஊடகவியலாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்த தகவல் அறியும் உரிமை 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப்படடுள்ளது. அதன் நடைமுறைப் பகுதியை விளக்குவதற்காக பிரத்தியேகமாக தகவல் அறியும் சட்டமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

நாட்டில் கடத்தல்கள், படுகொலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது பெரும் பட்டாளத்தை அழைத்துச் செல்லும் பழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அவர் சாதாரண விமானங்களிலேயே வெளிநாடு செல்கிறார். ஜனாதிபதியே சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டிய அவசியத்தை விளக்குகிறார்.  

இவை அனைத்தும் நல்ல விடயங்கள் தான். ஆனால், அதற்குள்ளேயே தான் பிணை முறி விவகாரம் இடம்பெற்றுள்ளது. பல நூறு வாகனங்கள் உரிய வரி அறவிடப்படாமல் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாரிய அளவிலான ஊழலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதிகளை கைது செய்தமைக்காக ஜனாதிபதியே அதிகாரிகளை குறை கூறியிருக்கிறார். கோட்டாபயவை கைது செய்வதைத் தானே தடுத்ததாக அமைச்சர்கள் கூறுகின்றனர். பொலிஸ்மா அதிபர் எவரையோ கைது செய்வதில்லை என எவருக்கோ உத்தரவாதமளிக்கிறார். அவை நல்ல முறையில் ஆரம்பித்த அரசாங்கம் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்து வருவதையே எடுத்துக் காட்டுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X