'பெருந்தோட்ட மக்களிடமும் மன்னிப்புகோர வேண்டும்'
09-12-2016 05:34 PM
Comments - 0       Views - 76

'யாழ். நூலகம் தீவைத்து எரியூட்டப்பட்டச் சம்பவம் தொடர்பில்; பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மன்னிப்புகோரியதைப் போன்றே தோட்டப்புற மக்களின் இன்றைய நிலைக்காக, அவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்' என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க,  இன்று (9) சபையில் தெரிவித்தார்.

அத்துடன், 180 வருடங்களுக்கு அதிமான காலமாக அந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பேரனர்த்தங்களுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாடாமன்றத்தில் நேற்று நடைபெற்ற மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்;கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட 5 அமைச்சுக்கள் மீதான வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

'1873 ஆம் ஆண்டிலிருந்து, 180இற்கும் மேற்பட்ட வருடங்களாக இந்த மக்கள் எமது நாட்டின் தேசிய வருமானத்தை உற்பத்தி செய்வதற்காக பாரிய சேவையாற்றியுள்ளனர். ஆடை கைத்தொழில்துறை முன்னேற்றமடைவதற்கு முன்னர் தேயிலை பெருந்தோட்டத்துறையானது எமது நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பங்கை வகித்திருக்கிறது.

ஆகவே, எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு   ஆற்றியுள்ள சேவையானது கணக்கிட்டு அளவிட முடியாததொன்றாகும்.
ஆகவே, அந்த மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக கருதி,  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாம் செயற்பட்டுள்ளோமா? நாட்டின் ஏனைய பகுதி மக்கள் சொகுசான வாழ்க்கையை வாழாத போதிலும், அந்த மக்கள் அனுபவிக்கும் குறைந்தப்பட்ச வாழ்க்கைத் தரத்தையேனும் தோட்டப்பகுதி மக்களுக்கு நாம் வழங்கத் தவறியுள்ளோம்' என்று அவர் கூறினார்.

'யாழ். நூலகம் தீவைத்து எரியூட்டப்பட்டச் சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியிருந்தார். எனினும், தோட்டப்புற மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை குறித்தும் அந்தப்பகுதி மக்களிடம் நீங்கள் மன்னிப்பு கோரவேண்டும். 180 வருடங்கள் அந்த மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பேரனர்த்தங்களுக்கு இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

அரசாங்கங்கள் மட்டுமல்லாது, ஒவ்வொருஅரசாங்கத்துக்கும் ஆதரவளித்த தோட்டப்புற மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அப்படியல்லா விட்டால்,  தொழிற்சங்கங்களை அமைத்து அந்;ததொழிற்சங்கங்களின் ஊடாக உண்டியல் பணங்களை சேகரித்துக் கொண்ட மலையக தமிழ்த் தலைவர்கள் இருந்தனர்.

அந்தத் தமிழ்த் தலைவர்களில் பெரும்பான்மையானோர் அந்த மக்களின் நலனுக்காக இவை அனைத்தையும் உபயோகத்திருக்கவில்லை. அவர்களது வாழ்க்கையை ஓர் அடியேனும் முன்னால் எடுத்துச் செல்வதற்காகவல்ல. அந்த அமைச்சர்களும் அவர்களை சுற்றியிருக்கும் அணியினரும் அவரவரது சுகநலன்களுக்காகவே தோட்டப் பகுதி மக்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

ஆகவே, இந்த தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தோட்டப்பகுதி தலைவர்களே எதிர்த்தனர். அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதானது, தங்களுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனாலேயே, அவர்கள் இதைச் செய்தனர்.

அந்த மக்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கீழ் இருக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களை வைத்து வியாபாரம் நடத்துவதற்கு தோட்டப்புற தமிழ் தலைவர்களுக்கு முடிந்திருந்தது. இதுதான் வரலாறு' என அவர் மேலும் கூறினார்.

"'பெருந்தோட்ட மக்களிடமும் மன்னிப்புகோர வேண்டும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty