Cyber Security Meetup - SudoCon #Dec2016
04-12-2016 07:55 PM
Comments - 0       Views - 3

கணினி, மென்பொருள், தகவல் பாதுகாப்பென்பது இன்று ஒரு தவிர்க்க முடியாதஅல்லது தவிர்க்கக்கூடாத விடயமாகிவிட்டது. இணையத்தின் இன்றைய பரம்பல், அதன் தாக்கம், தேவை இதற்கு வலுவூட்டுகிறது. எனவே கணினிப் பாதுகாப்புத் தொடர்பான அண்மைய வரவுகள் தொடர்பாக அறிந்திருப்பதும் இன்றியமையாதது.

அண்மைக்காலங்களாக மிகவும் அதிகரித்துக் காணப்படும் இத்தாக்குதல்களினால், தனிமனித பாதுகாப்பிலிருந்து வல்லரசுகளின் இராணுவப் பாதுகாப்பு வரை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளன. எனவே இன்றளவில் மிகவும் கவனஞ் செலுத்தப்படும் துறையாகவும் தொழில்நுட்ப தொழிற்சந்தையில் மிகவும் கேள்வி கூடிய துறையாகவும் இத்துறை மாற்றமடைந்திருப்பதானது அதன் தாக்க வீரியத்தைப் புலப்படுத்துகிறது. என்றாலும் இலங்கையைப் பொறுத்த வரை இத்துறைசார் அறிவு, பாதுகாப்பு, நிபுணத்துவம் என்பன மற்ற வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பீட்டளவில் குறைவு என்பது கவலைக்குரிய விடயம்.

இதற்குரிய முக்கிய காரணமாக சைபர் வெளி பாதுகாப்பு, அதன் அவசியம் பற்றி இலங்கையர்களிடம் காணப்படும் விழிப்புணர்வு ஒப்பீட்டு ரீதியில் குறைவாக இருப்பதை குறிப்பிடலாம். அந்த வகையில், சைபர் பாதுகாப்பின் அவசியத்தையும், அதற்கான வழிகளையும் வலியுறுத்தும் நோக்கில் யாழ் மண்ணில் முதன் முறையாக SudoCon #Dec2016 எனும் Cyber Security Meetup ஒன்றை Yarl IT Hub, HackeCG.comஆகியன இணைந்து, HNB Metro Green Building இல் நேற்று (03) ஒழுங்கு செய்திருந்தனர்.

இச்செயலமர்வு காலை 10.00 மணி தொடக்கம் மாலை 1.30 மணி வரை நடைபெற்றது. இந்த Meetup ஆனது துறைசார் வல்லுநர்களின் விரிவுரைகளும், செய்முறை பயிற்சிகளுமாக இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றது.

முதல் அமர்வில், இந்தியாவிலிருந்து வருகை தந்த சிறப்பு வளவாளர் மனோஜ் குமார்(Information Security Engineer & Author and the CEO of Shiva Crypto Solutions - India), Cryptocurrency and Evaluation of Hashes in POW எனும் தலைப்பில் ஆக்கபூர்வமான உரையை நிகழ்த்தினார். BitCoin, Bitcoin mining போன்ற சிறப்பான புதிய தொழில்முறைகளை அறிமுகம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து HackerCG குழுமத்தின் பங்காளர்களாகிய ஜிந்துசன், சிவரதன் ஆகியோரின் Wifi Hacking, Deep Web எனும் தலைப்புகளில் செயல்முறை பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன. 75க்கும் அதிகமான மாணவர்களும் ஆர்வலர்களும் பங்குபற்றிய இந்நிகழ்வு  யாழ்மண்ணில் Cyber Security யுகத்துக்கான ஓர் அடித்தளமாக அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .

யாழ் மண்ணை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் இலக்குடன் பயணித்துக் கொண்டிருக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான Yarl IT Hub, சைபர் வெளி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை இலகு ஆங்கிலத்தில் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கும் HackeCG.com ஆகியவற்றின் பயணப்பாதைகளில் மற்றுமொரு மைல்கல்லாக இந்த Meetup அமையும் என்பதில் ஐயமில்லை.

 

 

"Cyber Security Meetup - SudoCon #Dec2016" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty