சாதனையைச் சமப்படுத்தியது றியல் மட்ரிட்
08-01-2017 06:20 AM
Comments - 0       Views - 9

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் லா லிகா தொடரில், நேற்று (07) இடம்பெற்ற போட்டியொன்றில் கிரனெடாவைத் தோற்கடித்த றியல் மட்ரிட், தொடர்ச்சியாக 39 போட்டிகளில் தோல்வியடையவில்லை என்ற ஸ்பானியச் சாதனையை றியல் மட்ரிட் ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக, கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக்கின் முதல் சுற்று அரையிறுதிப் போட்டியில், பொரிஸியா டொட்டமுண்ட் அணியிடமே தோல்வியடைந்திருந்தது.

றியல் மட்ரிட், 5-0 என்ற கோல் கணக்கில் கிரனெடாவைத் தோற்கடித்திருந்தது. கரிம் பென்ஸீமாவிடமிருந்து பந்தைப் பெற்ற இஸ்கோ, போட்டியின் 12ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று றியல் மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கியதுடன், லூகா மோட்ரிக் அடித்த பந்தை கிரனெடாவின் கோல் காப்பாளர் கியர்மோ ஒச்சுவா தடுக்க, அதை போட்டியின் 20ஆவது நிமிடத்தில் கரிம் பென்ஸீமா கோலாக்கினார். போட்டியின் 27ஆவது நிமிடத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி கோலொன்றைப் பெற்றார். பின்னர், போட்டியின் 31ஆவது நிமிடத்தில், லூகா மோட்ரிக் கொடுத்த பந்தொன்றை இஸ்கோ கோலாக்க 4-0 என்ற கோல் கணக்கில், முதற்பாதி முடிவில் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது. பின்னர், இரண்டாவது பாதியில், ஜேம்ஸ் ரொட்ரிகாஸின் "பிறீ கிக்" ஒன்றை, போட்டியின் 58ஆவது நிமிடத்தில் கஸ்மெய்ரோ கோலாக்க, 5-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வெற்றிபெற்றது.

அத்லெட்டிகோ மட்ரிட், 2-0 என்ற கோல் கணக்கில் ஐபாரைத் தோற்கடித்தது. பிலிப்பி லூயிஸிடமிருந்து பந்தைப் பெற்ற சாவுல் நிகூஸ், போட்டியின் 54ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற அத்லெட்டிகோ மட்ரிட், மூன்று மாதங்களுக்குப் பின்னர், லா லிகா தொடரில் அந்தோனி கிறீஸ்மன் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் வெற்றிபெற்றது.

செவில்லா, 4-0 என்ற கோல் கணக்கில் றியல் சொஸைட்டைத் தோற்கடித்தது. செவில்லா சார்பாக மூன்று கோல்களைப் பெற்ற பென் யெட்டர், நான்காவது கோல் பெறுவதற்கான பந்தை வழங்கியிருந்தார்.

இப்போட்டிகளின் முடிவில், லா லிகா புள்ளிகள் தரவரிசையில், 40 புள்ளிகளுடன் றியல் மட்ரிட் முதலிடத்திலும், 36 புள்ளிகளுடன் செவில்லா இரண்டாமிடத்திலும் 34 புள்ளிகளுடன் பார்சிலோனா மூன்றாமிடத்திலும், 31 புள்ளிகளுடன் அத்லெட்டிகோ மட்ரிட் நான்காமிடத்திலும் காணப்படுகின்றன.

 

"சாதனையைச் சமப்படுத்தியது றியல் மட்ரிட்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty