இரகசியக் கூட்டத்தில் ஸ்ரீனி, தாக்கூர்
08-01-2017 09:25 AM
Comments - 0       Views - 16

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவர்களான என்.ஸ்ரீனிவாசன், அநுரக் தாக்கூர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பெங்களூரில் வைத்துச் சந்தித்துள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக என்ன செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஸ்ரீனிவாசன், தாக்கூர் தவிர, முன்னாள் செயலாளர் அஜய் ஷேர்க்கே, 24 மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட் கழகங்களின் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற குழறுபடிகளைத் தொடர்ந்து, கிரிக்கெட் சபைத் தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீனிவாசன் நீக்கப்பட்டதோடு, அந்தக் குழறுபடிகளே, லோதா செயற்குழுவை உருவாக்க வழிவகுத்தன. அச்செயற்குழுவின் பரிந்துரைகளின்படியே, அநுரக் தாக்கூர் உள்ளிட்ட பலரின் பதவி, அண்மையில் பறிபோயிருந்தது. இந்நிலையிலேயே, ஸ்ரீனிவாசனால் கூட்டப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், அடுத்ததாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதே, இந்தக் கூட்டத்தின் நோக்கமென, அதில் கலந்துகொண்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். அத்தோடு, பிழையான அல்லது மறை வழியான திட்டங்கள் எவையும் இதில் கலந்துரையாடப்படவில்லை எனவும், அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்தக் கூட்டம் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக் கொள்ளாத லோதா செயற்குழு, கிரிக்கெட் சபையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களை வகுப்பதற்காக, ஜனவரி 11ஆம் திகதி கூடவுள்ளது.

"இரகசியக் கூட்டத்தில் ஸ்ரீனி, தாக்கூர் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty