வில்லாறியலுடனான போட்டியைச் சமப்படுத்தியது பார்சிலோனா
09-01-2017 06:22 AM
Comments - 0       Views - 11

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று (08) இடம்பெற்ற போட்டியொன்றில், போட்டியின் இறுதி நேரத்தில், “பிறீ கிக்” மூலம் லியனல் மெஸ்ஸி பெற்ற கோலின் மூலம், வில்லாறியலுடனான போட்டியை, பார்சிலோனா சமநிலையில் முடித்துக்கொண்டது.

மெஸ்ஸி பெற்ற கோலின் மூலமாக, போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டாலும், இவ்வாரப் போட்டிகளின் முடிவில், 35 புள்ளிகளைப் பெற்றுள்ள பார்சிலோனா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்திலேயே இருக்கிறது. இரண்டாமிடத்தில், 36 புள்ளிகளுடன் செவில்லா காணப்படுகிறது. றியல் மட்ரிட், ஏனைய அணிகளை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளபோதும், 40 புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றது.

அலெக்ஸான்ட்ரே பட்டோவிடமிருந்தான பந்துப் பரிமாற்றத்தின் மூலம் நிக்கொலா சான்சோனே பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற வில்லாறியல், 11 ஆண்டுகளின் பின்னர் தமது மைதானத்தில் முதன்முறையாக பார்சிலோனாவினை வீழ்த்தும் என்ற நிலை காணப்பட்டது. எனினும், 90ஆவது நிமிடத்தில், அபாரமான “பிறீ கிக்” மூலம், கோல் கம்ப மூலைக்குள் பந்தைச் செலுத்திய மெஸ்ஸி, பார்சிலோனாவுக்கு சமநிலை முடிவைப் பெற்றுக்கொடுத்தார்.

முன்னர், மெஸ்ஸியின் அபாரமான உதையொன்று கோல் கம்பத்தில் பட்டிருந்ததுடன், கோல் பெறுவதற்கான வாய்ப்பொன்று, வில்லாறியலின் அணித்தலைவர் ப்ரூனோ சொறியானோவின் கையால் தடுக்கப்பட்டிருந்தபோதும், பெனால்டி வழங்கப்பட்டிருக்கவில்லை. மறுபக்கம், பார்சிலோனாவின் ஸ்கேவியர் மஷரானோவின் கையில் பந்து பட்டிருந்தபோதும் பெனால்டி வழங்கப்பட்டிருக்கவில்லை.

லூயிஸ் சுவாரஸும் நெய்மரும் நல்ல வாய்ப்புகளை வீணாக்கிருந்த நிலையில், சுவாரஸ், பார்சிலோனாவுக்காக 99 கோல்களைப் பெற்ற நிலையில் காணப்படுகின்றார். ‌

"வில்லாறியலுடனான போட்டியைச் சமப்படுத்தியது பார்சிலோனா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty