செல்சி, டொட்டென்ஹாம் வென்றன
09-01-2017 10:28 AM
Comments - 0       Views - 11

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க கிண்ணத் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், நேற்று (08) இடம்பெற்ற போட்டிகளில், செல்சி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் ஆகிய அணிகள் வெற்றிபெற்றதுடன், லிவர்பூல், பிளைமௌத் அர்கைல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

செல்சி, 4-1 என்ற கோல் கணக்கில் பீற்றர்பொரோ யுனைட்டெட் அணியைத் தோற்கடித்து, நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றது. போட்டியின் 18ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற பெட்ரோ, செல்சிக்கு முன்னிலையை வழங்கியதுடன், 43ஆவது நிமிடத்தில் மிச்சி பச்சுவாய் பெற்ற கோலின் மூலம் முதற்பாதி முடிவில் 2-0 என்ற முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில், 52ஆவது நிமிடத்தில் வில்லியன் கோலொன்றைப் பெற, 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி முன்னிலை பெற்றது. போட்டியின் 70ஆவது நிமிடத்தில் டொம் நிக்கொல்ஸ், கோலொன்றைப் பெற்றபோதும், அடுத்த ஐந்து நிமிடத்தில், கோலொன்றைப் பெற்ற பெட்ரோ, செல்சிக்கு மூன்று கோல் முன்னிலையை வழங்க, இறுதியில், 4-1 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றிபெற்றது.

கடந்த ஒக்டோபர் மாதத்துக்குப் பிறகு, முதற்தடவையாக இப்போட்டியிலேயே ஆரம்பத்தை மேற்கொண்ட செல்சி அணியின் தலைவர் ஜோன் டெரி, அங்கொலை வீழ்த்தியமைக்காக, போட்டியின் 67ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை காட்டப்பெற்று வெளியேற்றப்பட்டிருந்தார்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 2-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லாவைத் தோற்கடித்து, நான்காவது சுற்றுக்குச் சென்றது. டொட்டென்ஹாம் சார்பாக, போட்டியின் 71ஆவது நிமிடத்தில், பென் டேவிஸ் தலையால் முட்டிப் பெற்ற கோலின் மூலம் முன்னிலைபெற்ற டொட்டென்ஹாம், மூஸா சிஸாகோவிடமிருந்து பந்தைப் பெற்ற சண் ஹெயுங் மின், போட்டியின் 80ஆவது நிமிடத்தில் பெற்ற கோலோடு, 2-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் வெற்றிபெற்றது.

லிவர்பூல், பிளைமௌத் அர்கைல் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதன் காரணமாக, இரண்டு அணிகளும் நான்காவது சுற்றுக்குத் தகுதிபெற்றன. இப்போட்டியில், லிவர்பூல் வரலாற்றில், இளமையான அணி களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அணியில் விளையாடியவர்களின் சராசரி வயது, 21 ஆண்டுகள் 296 நாட்களாக இருந்திருந்தது.

"செல்சி, டொட்டென்ஹாம் வென்றன" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty